
அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். சொந்தமாக ஓர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பியும் வேலை பார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்ப் போடுவது, இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான்.
அவனுக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படித்துத் தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மனதில் தோன்றியதை எல்லாம் எழுதினான். எழுதியதையெல்லாம் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினான். அண்ணனிடம் கட்டுரைகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவாரா? என்று யோசித்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒருநாள் இரவு, தான் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். நேராக அச்சகத்தை அடைந்தான். தெருப்பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக ஆசிரியரின் அறைக்குள் கட்டுரை யைப் போட்டுவிட்டு வீடு திரும்பினான். இதை அப்போது எவருமே பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் ஆசிரியரான அண்ணன், அறைக்குள் நுழைந் தார். கீழே ஒரு காகிதக் கற்றை கிடப்பதைக் கண்டார். உடனே குனிந்து அதை எடுத்தார்; படித்துப் பார்த்தார். கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. எழுதியவர் யார் என்று பார்த்தார். பெயரைக் காணோம்! திரும்பித் திரும்பிப் பார்த்தார். பயனில்லை. <உடனே, அந்த கட்டுரையைத் தம்முடைய நண்பர்களிடம் காட்டினார். எல்லாரும் அதை மிக மிகப் பாராட்டினர். பத்திரிகைகளில் உடனே வெளியிட வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே அண்ணன் செய்தார்.
தம்பி இப்படியே பல கட்டுரையை எழுதி எவருக்கும் தெரியாமல் அறைக்குள் போட்டு வைத்தான். எல்லாமே அச்சில் வந்தன. ஆனாலும், எழுதியவர் யார் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.
'புகழை, விரும்பாத ஓர் அறிஞர்தான் இப்படிச் செய்து வருகிறார்!' என்று நினைத்தார்.
ஆனால், எவ்வளவு நாட்களுக்கு தான் இது ரகசியமாகவே இருக்க முடியும்? ஒருநாள் அம்பலமாகி விட்டது. உண்மை தெரிந்ததும், எல்லாரும், தம்பியைப் பாராட்டினர். அதே தம்பி பிற்காலத்தில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கினார்.
அரசியல், கலை, விஞ்ஞானம், வேதாந்தம், பொருளாதாரம் முதலிய எல்லாவற்றிலும் அவன் நிபுணனாக விளங்கினான். 
அவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?
விடை: அந்த தம்பி தான் இவர் பெஞ்சமின் பிராங்களின். அவர் கண்டுபிடித்த 'இடிதாங்கி'யால் தான் இன்று பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் இடியினால் சேதமாகாமல் நிமிர்ந்து நிற்கின்றன.

