தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜில்லுவின் தீபாவளி!

ஜில்லுவின் தீபாவளி!

ஜில்லுவின் தீபாவளி!


PUBLISHED ON : அக் 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குட்டி பட்டாம்பூச்சி ஒன்று காட்டில் பறந்து கொண்டிருந்தது. அதன் பெயர் ஜில்லு. திடீர் என ஊருக்குள் வந்தது. அங்கு ஒரே வெடிச்சத்தம்! அதற்கு ஒன்றும் புரியவில்லை; புதுமையாக இருப்பதை உணர்ந்தது.

ஒரு மரத்தில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தது ஜில்லு.

ஏதோ ஒரு பொருள் மேல், நெருப்பு வைத்தபடி வேகமாக ஓடினான் ஒரு சிறுவன். சிறிது நேரத்தில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதுபோல் நிறைய சத்தங்கள் கேட்டன.

வேடிக்கைப் பார்த்த ஜில்லுவுக்கு, பொழுது போனதே தெரியவில்லை.

மாலையில் பல வண்ணங்கள் ஒளிரும் பொருளை பிடித்தபடி சுற்றி வந்தனர் சிறுவர், சிறுமியர். ஒரு பொருளில் தீ வைக்க, பாய்ந்து வெடித்தது. பல வண்ணங்கள் சிதறின.

நீண்ட நேரம் அங்கேயே இருந்தது ஜில்லு. பின் காட்டை நோக்கி பறக்க ஆரம்பித்தது. அப்போது, 'ஏன், இன்னைக்கு மட்டும் எல்லாரும், அப்படி விளையாடுறாங்க' என, யோசித்தது.

காட்டுக்கு வந்ததும், 'ஊருக்குள் ஒளியும் சத்தமுமா இருக்கு... என்னம்மா விசேஷம்...' என கேட்டது.

'இன்னைக்கு தீபாவளி! அதுதான் பட்டாசு வெடிக்கிறாங்க...' என்றது அம்மா.

'அப்ப, மேலே பாய்ந்து ஒண்ணு வெடிச்சுதே... அதுவும் பட்டாசு தானா...'

'மேலே வெடிச்சுதே... அதன் பேரு ராக்கெட்...'

'ஓ... அப்படியா... கையில வெச்சு, எதையோ சுத்துனாங்க... அதிலிருந்து, பொறி... பொறியா... வெளிச்சம் வந்தது; அதோட பேர் என்னம்மா...'

'அதுக்குப் பேரு மத்தாப்பு... நீ பார்த்தது கம்பி மத்தாப்பா இருக்கும்...'

'அதுல அவ்வளவு மகிழ்ச்சியிருக்கா... காட்டுல யாருமே கொண்டாடலியே...'

ஏக்கமாக கேட்டது ஜில்லு.

நிதானமாக, 'பட்டாசு வெடிக்கிறதுல மகிழ்ச்சி இருந்தாலும், ஆபத்தும் இருக்கு. வெடிச்ச உடனே, கைகளை சுத்தமாக கழுவணும். ஏன்னா, அதுல நிறைய ரசாயனங்கள் கலந்திருப்பாங்க. அதிக சத்தத்தோட வெடிக்குறதால, ஒலி மாசும் ஏற்படும். பட்டாசு காகிதத்தால, நிறையக் குப்பையும் குவியும்...

'முக்கியமா, காட்டுல சின்ன சின்ன உயிரினங்கள் இருக்கு. பட்டாசு வெடிக்கிற சத்தத்தால, அவை பயப்படும். அதனாலதான் இங்கே பட்டாசு வெடிக்கிறதில்ல...' என்றது அம்மா.

இவ்வளவு கூறியும் சமாதானம் ஆகாமல் 'எனக்கு பட்டாசு வேணும்... நானும் கொண்டாடணும்...' என அழ ஆரம்பித்தது ஜில்லு.

'அழக் கூடாது... என் கண்ணுல... நாம இயற்கை முறையில் தீபாவளி கொண்டாடலாம்...' என்றபடி காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

ஒரு செடியில் இருந்த காய்களைப் பறித்து, 'இதுக்குப் பேரு தான் நெத்திச்சுட்டிக் காய்...' எனக்கூறியது. அதை தரையில தட்டியதும், 'பட்... பட்...' என சத்தம் வந்தது.

அதைக் கண்டதும், 'ஐ... பட்டாசு... பட்டாசு...' என ஆர்ப்பரித்தது ஜில்லு.

அம்மாவை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

மறைந்திருந்து, இவற்றை பார்த்து கொண்டிருந்த சிட்டுக்குருவி, கிளி, தேன் சிட்டு எல்லாம், 'நாங்களும், தீபாவளி கொண்டாடினோம்...' என மகிழ்வுடன் நன்றி கூறின.

அடுத்த தீபாவளியை நினைத்தபடி வீடு திரும்பியது, ஜில்லு.

குழந்தைகளே... இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கெள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us