PUBLISHED ON : ஆக 15, 2020

கிழக்கு தொடர்ச்சி மலைக் காட்டில் வசித்தது ஒரு முயல். மூலிகைகள் பற்றிய அறிவால், காட்டு விலங்குகளுக்கு வைத்தியம் செய்து வந்தது. அதன் காரணமாக, எல்லா மிருகங்களும் வணங்கி மரியாதை செலுத்தி வந்தன.
இது முயலின் ஆணவத்தை அதிகமாகியது.
'காட்டிற்கே மருத்துவர் நான்; என்னால் தான் நோய்கள் குணமாகின்றன. எனவே, எல்லாரும் என்னை கண்டிப்பாக வணங்க வேண்டும். மலர் எடுத்து வந்து, தினமும் பாதபூஜை செய்ய வேண்டும்...' என, கட்டளையிட்டது.
பகைத்துக் கொண்டால் மருந்து கிடைக்காது என எண்ணிய விலங்குகள், வேறு வழியின்றி பாதபூஜை செய்தன.
அன்று பூஜை செய்து திரும்பியது சிங்கம்.
'காட்டின் ராஜவே, பணிந்ததால் எல்லா விலங்குகளையும் அடக்கி ஆளலாம்' என திட்டமிட்டது முயல்.
விபரீத எண்ணம் தலைக்கேற எல்லா மிருகங்களையும் அழைத்தது.
ஒன்று கூடியவைகளிடம், 'அடிமைகளே... உங்களை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா...' என்றது முயல்.
வருந்திய மிருகங்கள், அமைதியாக நின்றன. அதன் பேச்சை ஆர்வமுடன் கேட்பது போல் நடித்தன. அந்த நேரம், கிராமத்திலிருந்து தப்பிய நாய் ஒன்று, கூட்டத்தில் புகுந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியது.
கர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தது முயல்.
'அடிமைகளே... இதுவரை எனக்கு பாதபூஜை மட்டும்தான் செய்து வந்தீர்கள். இனி, மூன்று வேளையும் உணவு தர வேண்டும். மாலையிலும் பாத பூஜை செய்ய வேண்டும்...' என்றது.
மிருகங்கள் செய்வதறியாது திகைத்தன. அந்த உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர, வேறு வழியில்லை. அவை மிகுந்த பணிவுடன், 'எங்களுக்கு வைத்தியம் பார்க்காமல் மட்டும் இருந்து விடாதே; உன் பேச்சுக்கு கட்டுப்படுகிறோம்...' என்றன.
ஆணவத்தால் தலையை சிலிர்த்துக் கொண்டது முயல்.
நாய்க்கு புரிந்து விட்டது. அதிகாரம் செலுத்திய முயலுக்கு பாடம் கற்பிக்க நினைத்தது. நோய் ஏற்பட்ட போதெல்லாம், காட்டில் பச்சிலைகள் உண்டு நல்ல அனுபவம் பெற்றிருந்தது நாய். அந்த அனுபவத்தில் கிடைத்த மூலிகை அறிவை பயன்படுத்தி, முயலை அடக்க திட்டமிட்டது.
ஒரு நாள் -
காட்டின் மேடான பகுதிக்கு சென்றது நாய்; வாயில், மூலிகைச் செடிகளை கவ்வியிருந்தது. நரி, யானை, கரடி போன்ற விலங்குகள் அதன் அருகில் சென்று உற்றுப்பார்த்தன.
மிகவும் நட்புடன், 'நண்பர்களே... காட்டில் சேவை செய்ய வந்திருக்கிறேன். உங்கள் நோய் எதுவாகயிருந்தாலும், ஒரே நொடியில் குணப்படுத்திவிடுவேன்...' என்றது நாய்.
இந்த பேச்சு, விலங்குகளுக்கு வியப்பையும், நம்பிக்கையையும் அளித்தது.
'இரண்டு நாளாக கடும் காய்ச்சலில் அவதிப்படுறேன்; அந்த முயல் வைத்தியம் செய்தும், குணமாகவில்லை. நீயாவது குணப்படுத்து...' என்றது நரி.
பச்சிலையை உண்ணக் கொடுத்தது நாய். சாப்பிட்டதும் பூரண குணமடைந்தது நரி. விலங்குகள் வியப்படைந்தன.
காட்டில் இச்செய்தி பரவியது. சிங்கராஜாவும், 'உன் சேவையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை...' என்று பாராட்டி வியந்தது.
'சிங்க ராஜாவே, ஏதோ வைத்திய முறையால், அடிமைப்படுத்தி வரும் முயலைக் கண்டேன். அதன் கொட்டத்தை அடக்க நினைக்கிறேன். உங்க ஆசி வேண்டும்...' என்றது நாய்.
'உன் துணிச்சலை பாராட்டுகிறேன்; முயலின் கொட்டத்தை அடக்கினால் மகிழ்ச்சியடைவோம்...'
'இதோ, இப்போதே சரியான பாடம் கற்பிக்கிறேன். பின், எளிமையாக வைத்திய சேவை செய்கிறேன்... இப்போது முயல் எங்கு தங்கியிருக்கும்...'
'காட்டாற்றுப் பக்கம், உயர்ந்து நிற்கும் பாறையில் தான் அமர்ந்திருக்கும்...' என்றது சிங்கராஜா.
அந்த பக்கம் பாய்ந்து ஓடி வந்த நாயைக் கண்டதும் வியப்புற்றது முயல்.
மிகுந்த பணிவுடன், 'பணிவிடை செய்ய வந்துள்ளேன். பாதத்தைக் காட்டினால், பூஜை செய்கிறேன்...' என்றது நாய்.
தலைக்கனம் உச்சிக்கு ஏற, 'காட்டு மிருகங்கங்கள் தான், பணிவிடை செய்கின்றன என்றால், நாட்டில் வசிக்கும் நாயும் பணிந்து வந்துள்ளதே... எங்கும் என் புகழ் பரவி இருக்கிறது' என்று எண்ணியபடி, கால்களை நீட்டியது.
மின்னல் வேகத்தில் பாய்ந்து முயலின் கழுத்தை கடித்துக் குதறியது நாய்.
ஆணவ முயல் துடி துடித்தது. எழுந்து நடக்க முடியாமல் திணறியது.
'உன் வைத்திய திறமையால், காட்டில் மிருகங்களை அடிமைப்படுத்தி வந்தாய். இப்போது, உனக்கு வைத்தியம் செய்வது யார்... ஆணவத்தை அடக்கவே, இந்த தண்டனையை வழங்கினேன்...' என்றது நாய்.
கழுத்தில் காயத்துடன், பிழைத்தால் போதும் என்று ஓடியது முயல்.
குட்டீஸ்... நாம் பெற்ற அறிவு, அறியாமையை போக்கும் அற்புத கருவி. அறிவால் பெருமை கொண்டால், தலைக்கனம்தான் ஏற்படும். அது அழிவுக்கு இட்டு செல்லும். தாழ்மை, என்றும் உயர்வுக்கு வழி வகுக்கும்!
