PUBLISHED ON : பிப் 03, 2012

மழை இல்லையென்றால், கொடும்பாவிகளால்தான் மழை பெய்யவில்லை என்றும், வறட்சி நிலவுகிறது என்றும், கொடும்பாவி கட்டி அதைத் தெருவழியே இழுத்துச் சென்று எரித்தால் மழை வரும் என நம்பிக்கை இருக்கிறது கிராமங்களில்.
பட்டணங்களில் மெத்தப் படித்தவர்கள், அதிலும் சங்கீத சாஸ்திரம் கற்றவர்கள், தண்ணீரில் நின்று வயலின் மீட்டி அதற்கென்று ஒரு இராகம் இசைத்தால், மழை வரும் என நம்புகின்றனர்.
ஒரிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் கஜுரியா என்ற கிராமவாசிகள் தவளையைப் பூஜை செய்தால் மழை வரும் என நம்புகின்றனர். 1993-ஆம் ஆண்டு அவர்கள் தவளைக்கு ஒரு நூதனமான பூஜை செய்தனர். மழைக்குத் தேவனான இந்திரனைப் பிரியப்படுத்தவே இந்தப் பூஜை.
ஒரு பெரிய தவளையை உயிரோடு பிடித்து, அதை ஒரு மூங்கில் தடியில் கட்டி, கிராமத்தைச் சுற்றி வந்தனர். அந்தத் தவளைக்கு குங்குமம் பூசி, அதை மஞ்சள் நீரில் குளிப்பாட்டினர் கிராமப் பெண்கள்.அதன் பின்னரே கிராமத்தை வலம் வந்தனர். 24 மணி நேரத்தில் பெருமழை வரும் என நம்பினர். அப்படியும் மழைதான் வந்தபாடில்லை.
