sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மந்திரப் போர்வை (1)

மந்திரப் போர்வை (1)

மந்திரப் போர்வை (1)


PUBLISHED ON : ஜூலை 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2012


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் தங்கத் தீவை தங்கரதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பன்னிரெண்டு மகள்கள் இருந்தனர். பேரழகிகளாக இருந்த இளவரசிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். ஒருநாள் விடியற்காலை நேரத்தில், அரசனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது. மகள்களைப் பார்த்து வரலாம் என்று நினைத்து அவர்கள் அறைக்குச் சென்றான்.

அங்கே இளவரசிகள் பன்னிரெண்டு பேரும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அணிந்திருந்த காலணிகளைக் கழற்ற வில்லை. அவர்களின் காலணிகளைப் பார்த்த அரசன் அதிர்ச்சி அடைந்தான். அவற்றின் அடிப்பகுதி முழுமையாகத் தேய்ந்து இருந்தன.

'இவர்கள் அனைவரும் இரவு முழுவதும் நாட்டியமாடி இருக்க வேண்டும். அதனால்தான், காலணிகள் இப்படித் தேய்ந்துள்ளன. ஆனால், இவர்கள் நாட்டியமாடி இருந்தால், நமக்குத் தெரிந்து இருக்குமே... எதற்கும் நாளையும் வந்து பார்ப்போம்' என்று நினைத்தான்.

மறுநாளும் விடியற்காலையில் வந்தான். இன்றும் அவர்கள் காலணிகள் தேய்ந்து இருப்பதைப் பார்த்தான்.

'இளவரசிகளுக்கு இரவில் என்ன நிகழ்கிறது? ஏன் இவர்கள் காலணிகள் தேய்ந்துள்ளன? ஒன்றும் புரியவில்லையே...' என்று குழம்பினான்.

அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே வீரர்களைக் காவல் போட்டான். இரவு முழுவதும் அவர்கள் விழித்திருந்து காவல் காத்தனர்.

மூன்றாம் நாளும் இளவரசிகளின் அறைக்கு வந்தான். அவர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல அவர்களின் காலணிகள் தேய்ந்து இருந்தன.

வீரர்களிடம் ''இளவரசிகள் நாட்டியம் ஆடுவது போன்று ஓசை கேட்டதா?'' என்று விசாரித்தான்.

''அரசே! அறைக்குள் இருந்து எந்த ஓசையும் வரவில்லை,'' என்றனர் வீரர்கள்.

'இரவில் என்ன நடக்கிறது? ஏன் இளவரசிகளின் காலணிகள் தேய்கின்றன? எப்படியாவது உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று நினைத்தான் அரசன்.

முரசு அடிப்பவனை அழைத்து, ''இளவரசிகளின் காலணிகள் நாள்தோறும் இரவில் தேய்ந்து விடுகின்றன. அவை எப்படித் தேய்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடிப்பவர் அவர் விரும்பும் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் இளவரசிகள் அறையில் ஓர் இரவு தங்கலாம். உண்மையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர்கள் உயிர் போய்விடும். இந்தச் செய்தியை நாடெங்கும் தெரிவி,'' என்றார் அரசன்.

முரசு அடிப்பவனும் அப்படியே செய்தான்.

அடுத்த நாளே இளவரசன் ஒருவன் போட்டியில் கலந்துக் கொள்ள வந்தான். இளவரசிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான்.

இளவரசிகள் பன்னிரெண்டு பேரும், அவனை அன்புடன் வரவேற்றனர். அவனிடம் இனிமையாகப் பேசினர்.

'இவர்கள் அனைவரும் என் கண் பார்வையிலேயே உள்ளனர். எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்து விடுவேன். இவர்களில் யாரைத் திருமணம் செய்து கொள்வது' என்று சிந்தித்தபடி இருந்தான் இளவரசன்.

அவன் அருகே வந்த மூத்தவள், ''இந்தப் பழச்சாற்றைப் பருகுங்கள்,'' என்றாள்.

அவனும் அதை வாங்கிக் குடித்தான். தன்னை அறியாமல் தூங்கத் தொடங்கினான். பொழுது விடிந்ததும் அவனுக்கு விழிப்பு வந்தது.

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இளவரசிகளின் காலணிகளைப் பார்த்தான். அவை முழுமையாகத் தேய்ந்து இருந்தன. அதிர்ச்சி அடைந்தான்.

அங்கு வந்த அரசன், ''இளவரசிகளின் காலணிகள் எப்படித் தேய்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தாயா?'' என்று கேட்டான்.

''இல்லை,'' என்றான் அவன்.

''போட்டியில் தோற்றுவிட்ட இவனைத் தூக்கில் போடுங்கள்,'' என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

வீரர்களும் அப்படியே செய்தனர்.

தொடர்ந்து பலர் போட்டியில் கலந்து கொண்டனர். யாராலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை... எல்லாருமே உயிரை இழந்தனர்.

இதனால் போட்டியில் கலந்து கொள்ள யாருமே வரவில்லை.

அந்நாட்டில் சுரேந்தர் என்ற வீரன் இருந்தான். கள்வர்களைப் பிடிக்க முயற்சித்த போது, அவனுக்குக் காயம் ஏற்பட்டது.

படைத்தலைவர் அவனிடம், ''இனி நீ போரில் பங்கெடுத்துக் கொள்ள முடியாது. எங்காவது சென்று பிழைத்துக் கொள்,'' என்று பணப்பை ஒன்றைக் கொடுத்தார்.

அரசன் அறிவித்திருந்த போட்டி பற்றி கேள்விப்பட்டான் சுரேந்தர். போட்டியில் கலந்து கொள்வோம். உயிர் போனால் கவலை இல்லை என்ற எண்ணத்தில் தலை நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் சென்றான். அவன் எதிரில் தள்ளாடும் கிழவி ஒருத்தி வந்தாள். அவள் கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தன. தோல் சுருக்கம் விழுந்திருந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தாள்.

இடுங்கிய கண்களால் அவனைப் பார்த்தாள். ''நான்கு நாட்களாகப் பட்டினி. பசி உயிர் போகிறது. ஏதேனும் உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினாள்.

இரக்கம் கொண்ட அவன் பணப்பையை எடுத்தான். அதை அப்படியே அவளிடம் தந்தான்.

''பாட்டி! நான் வீரனாக உழைத்ததற்காகக் கிடைத்த பணம் இது. நீயாவது வாழ்நாள் முழுவதும் பட்டினி கிடக்காமல் வாழ்க்கை நடத்து,'' என்று அன்புடன் சொன்னான் சுரேந்தர்.

'வாரி வழங்கும் கொடை வள்ளலாக இருக்கிறானே... இவனுக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தாள்.

''தம்பி! நீ எங்கே போகிறாய்?'' என்று கேட்டாள்.

''பாட்டி! இளவரசியை மணக்கும் போட்டியில் கலந்து கொண்டு உயிரை விடப்போகிறேன்,'' என்றான்.

''நீ எதற்காக உயிரை விட வேண்டும். நீ விரும்பும் இளவரசி உனக்குக் கிடைப்பாள். இந்தப் போட்டியில் வெற்றி பெற நான் உதவி செய்கிறேன். நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும்!''

''நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் பாட்டி!'' என்றான்.

''உன்னை இளவரசிகளுடன் தங்க வைப்பர். அவர்கள் உன்னுடன் கொஞ்சிப் பேசுவர்; மயங்கி விடாதே... அவர்கள் பழச்சாற்றைத் தருவர். அதை குடித்தால் இரவு முழுவதும் தூங்க வேண்டியதுதான். அதைக் குடிக்காவிட்டால் அவர்கள் உன்னை வற்புறுத்துவர். நீயும் குடிப்பதை போல் நடி. பிறகு நன்கு தூங்குபவன் போல நடித்து, அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கவனி...

நான் தரும் இந்த மந்திரப் போர்வையை வாங்கிக் கொள்... இதைப் போர்த்திக் கொண்டால் நீ யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாய். அவர்களைத் தொடர்ந்து சென்று உண்மையைக் கண்டுபிடி. இளவரசிகளிடம் சிறிது ஏமாந்தாலும், நீ தூக்கில் தொங்க வேண்டியதுதான்; கவனமாக நடந்துகொள்,'' என்ற அவள் போர்வையை அவனிடம் தந்தாள்.

''நன்றி பாட்டி!'' என்ற அவன் போர்வையுடன் அங்கிருந்து புறப்பட்டான்.

அரண்மனையை அடைந்த சுரேந்தர், ''போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்,'' என்றான்.

வீரர்கள் அவனை இளவரசிகளின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

இளவரசிகள் அனைவரும் அவனை அன்புடன் வரவேற்றனர். கட்டிலில் அமர வைத்தனர். அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இரவு நேரம் வந்தது... அவன் அருகே அமர்ந்தாள் மூத்தவள், ''இந்த பழச்சாற்றை அருந்துங்கள்,'' என்று கொஞ்சினாள்.

பழச்சாற்றை வாங்கினான். குடிப்பது போல நடித்து, தன் கழுத்தில் மாட்டியிருந்த பையில் ஊற்றினான்.

அவன் பழச்சாற்றைக் குடித்து விட்டதாகவே அவர்கள் நினைத்தனர். கட்டிலில் படுத்த அவன் குறட்டை விட்டுத் தூங்குவது போல நடித்தான்.

''எப்படிக் குறட்டை விட்டுத் தூங்குகிறான்? இவனா உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறான்? '' என்று சொல்லிச் சிரித்தாள் மூத்தவள்.

மற்ற இளவரசிகளும் அவளுடன் சேர்ந்து சிரித்தனர்.

''நாம் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லாரும் அலங்காரம் செய்து கொள்வோம்,'' என்றாள்.

அவர்கள் பன்னிரெண்டு பேரும் கண்ணாடி முன் நின்றனர். தங்களைஅழகாக அலங்காரம் செய்து கொண்டனர். மணப்பெண்கள் போல அவர்கள் காட்சி தந்தனர்.

அங்கே நடப்பதை எல்லாம் குறட்டை விட்டபடியே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us