PUBLISHED ON : நவ 11, 2023

மதுரை மாவட்டம், யானைக்கல், எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அரசால் வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியில் வந்து செல்வேன். அன்று பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருந்த போது, அது காணாமல் போனது. தொலைந்த வேதனையில் இருந்தேன். கடும் கோபம் கொப்பளிக்க செய்வதறியாது திகைத்தேன்.
சில நாட்களுக்கு பின், மற்றொரு மாணவனுக்கு சொந்தமான மிதிவண்டியை எடுத்துச் சென்று, சில மாறுதல்கள் செய்தேன். என்னுடையது போல் மாற்றினேன். பறி கொடுத்தவன், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தவித்தான்.
அதை அறிந்த தமிழாசிரியர் என்.பாலகிருஷ்ணன், 'தொலைந்ததை மீட்டுத் தருகிறேன்...' என உறுதி கூறி, அவனை சமாதானம் செய்தார். துப்புத் துலக்கியபடி என் வீட்டிற்கு வந்தார். பெற்றோரிடம் பக்குவமாய் பேசி, என்னை வெளியே அழைத்து சென்று விசாரித்தார்.
பொய்களை சொல்லி தப்பிக்க முயன்றேன். மிதிவண்டியின் வரிசை எண்ணை காட்டி ஆதாரத்தோடு நிரூபித்தார்.
நோகாதபடி பேசி, தவறை ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளி, 'திருமண வீட்டில் செருப்பை தொலைத்தவன், வேறொன்றை மாட்டி செல்வதை போல எடுத்து வந்து விட்டாய். இதை யாரிடமும் தெரிவிக்க மாட்டேன். இதுபோல் இனி செய்யாதே... உனக்கு வேறு ஒன்று ஏற்பாடு செய்கிறேன்...' என கூறி ஒரு மாதத்துக்குள் வேறு ஒரு மிதிவண்டியை அளித்தார்.
தற்போது, என் வயது, 30; தவறை அம்பலப்படுத்தி, கடுமையாக தண்டிக்காமல், பக்குவமாய் அறிவுரை வழங்கி திருத்திய தமிழாசிரியரை மனதில் தாங்கியுள்ளேன்!
- ரா.சிவக்குமார், மதுரை.
