PUBLISHED ON : மார் 17, 2017

பிரேசில் நாட்டின், 'ரியோ கிராண்டே டு நார்டி'யின் நேட்டல் பகுதியில் காணப்படும் ஆயிரம் ஆண்டு பழமையான முந்திரி மரத்தை தான் படத்தில் பார்க்கிறோம்.
உலக கின்னஸ் சாதனை புத்தகம், 1994ல் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இரண்டு அடிப்படை வேரிலிருந்து ஒரே சமயத்தில் வளர துவங்கிய இந்த மரம் இன்று, 8 லட்சம் சதுர அடி நிலத்தை அதாவது, 5 ஏக்கர் அளவுக்கு தன்னை விஸ்தரித்துள்ளது.
உண்மையில் இது குட்டை வகை மரம். பொதுவாக, முந்திரி மரம் அதிக பட்சமாக, 10 மீட்டர் உயரமும், சராசரியாக, 6 மீட்டர் உயரமும் வளரும்.
இந்த மரம் பக்கவாட்டில் பரவி, சில இடங்களில் பூமியை தொட்டு, அதன் மூலம் புது வேர் உருவாகி, புது மரம் எழுந்து என இப்படி பரவியுள்ளது.
மரத்தை உள்ளே சென்று பார்ப்பதற்கு, இரண்டு டாலர் கட்டணம் வாங்குகின்றனர்.
மரத்தினுள் ஏறி உச்சியை பார்க்க விரும்புவது ஆபத்து. காரணம், இந்த மரத்தில் கம்பளி பூச்சிகள் அதிகம்; அவை விஷத்தன்மையுடையவை. மரத்திற்கு வெளியே சற்று தள்ளி, ஒரு உயர்ந்த மேடை உள்ளது. அதன் உச்சியில் நின்று, மரத்தின் மேல் பகுதியை பார்க்கலாம்!
இந்த மரத்திலிருந்து, ஆண்டிற்கு, 60 ஆயிரம் முதல், - 80 ஆயிரம் வரை முந்திரி பருப்புகள் கிடைக்கிறது.
முந்திரி பருப்பு எனக் கூறுவது தவறு; முந்திரி விதை என்பதே சரி. பலருக்கு ஆச்சர்யமே இந்த பழத்தின் அடியில், முந்திரி காய்த்து இருப்பது தான்.
பழம்... லேசான சிவப்பு கலந்த மஞ்சள் வண்ணத்தில் ஜொலிக்கும். உடனே பறித்து சாப்பிடவும் ஆசை எழும். ஒரு மாதிரியான சுவை கொண்ட இது, காறும்... பின் நாக்கை சுரண்டணும்!
இதனால், மேலை நாடுகளில் இதை கூழ் எடுத்து, சில அமிலங்களை இணைத்து சுவையான பானங்களாக விற்கின்றனர். அத்துடன், மது தயாரிக்கவும் இதன் பழக்கூழ் பயன்படுகிறது.
முந்திரி பருப்பின் தோலிலிருந்து, எண்ணெய் எடுக்கின்றனர். அதை பெயின்டுகள் மற்றும் உராய்வை தடுக்கும் எண்ணெய்களாக பயன்படுத்துகின்றனர்.
முந்திரி பருப்பை பார்த்தாலே சாப்பிட ஆசை எழும். பச்சையாக, வறுத்து, காரம் சேர்த்து என பல வகைகளில் சாப்பிட்டாலும், முந்திரி பருப்பை உடைத்து கேக், அல்வா, வெண்ணெய் செய்வது இதன் தனிச்சிறப்பு. பாயாசத்தின் முக்கிய அலங்கார பொருளும் இந்த முந்திரி தான்.
முந்திரியின் தாயகம் பிரேசில். ஆனால், இன்று உற்பத்தியில் முதலிடம் வியட்நாமுக்கு. அடுத்த இரு இடங்கள்
நைஜீரியா மற்றும் இந்தியாவுக்கு!
இயற்கை ஏற்படுத்தியுள்ள இந்த அதிசயத்தை நாமும் ரசிப்போம்.
- ராதா.
