தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி தொடர் சிகப்பு ஆமை(1)

மினி தொடர் சிகப்பு ஆமை(1)

மினி தொடர் சிகப்பு ஆமை(1)


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிட்டத்தட்ட நாற்புறமும் மலை சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கில் கடம்பனேரி என்று ஓர் ஏரி இருந்தது. அதில் பல நீர்வாழ் உயிரினங்கள் இருந்தன. அவற்றுள் புழு, பூச்சி, மீன், தவளை போன்ற வலிமையற்ற சிறிய இனங்களும் இருந்தன. பாம்பு, சுறா, விலாங்கு முதலிய வலிமை வாய்ந்த பெரிய உயிரினங்களும் இருந்தன.

பெரிய உயிரினங்கள் சின்ன உயிரினங்களைத் தின்று வாழ்ந்தன. ஆனால், சிறிய இனங்கள், பெரிய இனங்களை விட விரைவில் பிள்ளைக் குட்டி பெற்றுப் பெருகின. ஆகையால் எந்த இனமும் ஏரியில் அழிந்து விடவில்லை.

உயிரினங்களும் ஒன்று வலிமையுற்ற இனங்களுடன் சேராமல், வலிமையுள்ள விலங்குகளுடனும் சேராமல் தனித்து வாழ்ந்தது. அதுவே ஆமை இனம். அது எந்த உயிரினத்தையும் தின்பதோ, துன்புறுத்துவதோ இல்லை. அதே சமயம் அதை எந்தக் கொடிய இனமும் அண்டுவதில்லை.

அதன் மேலிருந்த ஓடு அதற்கு ஒரு சிறு கோட்டையாயிருந்தது. தன்னைவிடப் பெரிதான எந்த உயிரினத்தைக் கண்டாலும் அது தன் கை, கால்களையும் தலையையும் அந்தக் கோட்டைக்குள் இழுத்துக் கொள்ளும். அதைத் தகர்க்கும் சக்தி நீர்வாழ் உலகிலுள்ள எந்த விலங்குக்கோ, வெளியிலுள்ள விலங்குக்கோ கூட இல்லை.

ஆமையினத்துக்கு எதிரி யாரும் இல்லாததாலும், அது பொதுவாக எல்லா உயிரினங்களை விட நீண்ட வாழ்நாளுடையதாயிருந்ததாலும், ஏரியில் அவ்வினம் தொகையில் பெருகிற்று. ஏரியின் ஆட்சி ஆமையினத் தினிடமே இருந்தது.

எந்த வழியாகவோ அந்த ஏரிக்குள் முதலையினம் வந்து புகுந்தது. முதலில் முதலையின் ஒற்றன் வந்தது. பின் முதலையின் அரசனும், பரிவாரங்களும் படைகுடிகளும் வந்தன. ஏரியின் சின்னஞ்சிறு உயிரினங்களை ஆயிரக் கணக்கிலும், பாம்பு, சுறா, விலாங்கு முதலிய பெரியயினங்களை நூற்றுக்கணக்கிலும் அவை தின்றழித்தன.

ஆமையினத்துக்குக்கூட இப்போது ஆபத்து ஏற்பட்டது. முதலைகளின் பெரிய கொடிய உருவத்தைக் கண்டதே ஆமைகள் தம் வழக்கப்படி தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றன. அவை தலையையும், கை கால்களையும் ஓடுக் கோட்டைக்குள் அடக்கிக் கொண்டன. ஆனால், ஒரு முதலை ஓடுடனே ஓர் ஆமையை அப்படியே விழுங்கிற்று. அதைப் பார்த்த முதலைகள் இந்த எளிய முறையில் ஆமையினத்தை அழிக்க முற்பட்டன.

முதலைகளைவிட ஆமைகள் நீடித்த வாழ்நாள் உடையவை. முதலையினத்தின் கொடுங்கோலாட்சிக்கு முன் ஆமையினமே அன்பாட்சி மிக்க குடியாட்சி நடத்தி வந்தது. ஆயினும் விரைவில் தம்மைவிட ஆண்டிலும், பண்பிலும் குறைந்த முதலையினத்திற்கு இரையாகி, அதன் தொகை வரவரக்குறையத் தொடங்கிற்று. ஆமையுலகமெங்கும் கிலி பரந்தது.

ஆமையினத்தின் காலம் இனி நெடுநாள் செல்லாது என்று ஆமையுலக அறிஞர்களே கூறத் தொடங்கினர். நகரக்கூட முடியாதபடி அவ்வளவு முதுமையடைந்த ஓர் ஆமை, ஆமையின உயிர்களுக்கு ஓர் அறிவுரை கூறிற்று.

''நம் இனம் அழியாமல் இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கூடியமட்டும் முற்றிலும் அழித்தொழிக்கப்படாமல், நாம் பத்துப்பன்னிரெண்டு ஆமையூழிகள் கழித்து விடவேண்டும். அதற்குள் நமக்கு நம் கடவுளிடமிருந்து கட்டாயம் ஏதாவது உதவி கிடைக்கும்!'' என்றது

சில சிறிய ஆமைகள் இதைக் கேலி செய்தன. ''அவ்வளவு காலத்துக்குப் பின் காக்கும் கடவுள் இப்போது காத்தாலென்னவோ? ஏதோ அறிவுடையவர் மாதிரிப் பேசி இந்தக் கிழம் நம் சாவுப் போராட்டத்தை நீட்டிக்கப் பார்க்கிறது. சாவதாயிருந்தால் விரைவில் செத்து ஒழிய வேண்டும். பதுங்கிப் பதுங்கி நம் எதிரி வயிற்றுக்கு நாம் மிகுதியாக ஏன் வளந்தேடிக் கொடுக்க வேண்டும்!'' என்று அவை கேட்டன.

''முதியோர் சொல்லும், முழுநெல்லிக்காயும் முன் துவர்க்கும், பின் இனிக்கும். நான் சொல்கிறபடி செய்யுங்கள். பின் அறிவீர்கள்!'' என்று மூதாமை கூறிற்று.

அப்போதும் இள ஆமைகள் கேட்கவில்லை. மூதாமை அனுபவமிக்க சில ஆமைகளைத் தனியே அழைத்து, ''அன்பர்களே! நம்மைவிட வலிமையுடைய இனங்களும் வாழ்கின்றன. இதற்குக் காரணம் அவ்வினங்களின் ஒற்றுமையே. தலைவனாக ஓர் அரசனைத் தேர்ந்தெடுத்து, அவை அந்த அரசுக்கு அடங்கி நடக்கின்றன. நான் முடியாட்சி உயர்வுடையது என்று கருதவில்லை. ஆனால், இந்த ஒரு வகையில் நம் இனத்தின் குடியாட்சி நமக்கு இனப்பாதுகாப்பு இல்லாமல் செய்கிறது.

''நான் உங்களுக்கு அறிவுரை கூறுவது எனக்காக அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். நான் முதலைக்கு இரையானாலும் ஆகாவிட்டாலும் ஒரு சில நாளில் இறக்கத்தான் போகிறேன். ஆனால், நம் இனத்தைக் காக்கும் வகையை நான் அறிவேன். அதை உங்களிடம் கூறிவிட்டுச் சாகிறேன்.

''கடவுள் ஒவ்வோர் இனத்துக்கும் ஒருவொரு வகை திறமையை அளித்திருக்கிறார். மீனினம் தன் தொகையைப் பெருக்கித் தன் இனத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. தவளை காய்ந்த மண்ணில் மண்ணுடன் மண்ணாய்க் கிடந்து மற்ற இனங்களைத் தாண்டி வாழ்கிறது. நம் இனமும் தோட்டினாலும் நீண்ட வாழ்நாளாலும், இதுவரை யாருக்கும் தீங்கு செய்யாமலும் தீங்குக்கு ஆளாகாமலும் ஆட்சி செய்தது.

''இப்போது புதிய கொடுமைமிக்க எதிரி முன் இவை இரண்டும் பயன்படவில்லை. ஆனால், கடவுள் நமக்கு இன்னும் ஓர் ஆற்றல் தந்திருக்கிறார். அதைக் கண்டு நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!''

மூதாமையிடம் ஏதோ புதிய அறிவு இருக்கிறது என்று கண்டு அனுபவமிக்க ஆமைகள் ஆவலாய்க் கேட்டன. தொலைவிலிருந்த இள ஆமைகளும் என்னவோ புதுச் செய்தி பேசப்படுகிறது என்று செவிகளைக் கூராக்கிக் கொண்டு உற்றுக் கேட்டன. மூதாமை சற்று இளைப்பாறிய பின் மீண்டும் பேசிற்று.

''அன்பர்களே! பன்னிரண்டு ஆமையூழிக்கு ஒருமுறை ஆமையினத்திலேயே அறிவில் மிக்க ஒரு தனி ஆமை பிறக்கும். இனத்தின் அறிவு முழுவதும் அதில் இடம் பெறும். அது ஆமையினத்துக்குப் புத்தம் புது வாழ்வளிக்கும்!'' என்றது.

''அத்தகைய ஆமையைக் கண்டுகொள்வது எப்படி?'' என்று பல ஆமைகள் ஆர்வத்துடன் கேட்டன.

''அந்த ஆமை முழுதும் சிவப்பாயிருக்கும்!'' என்று கூறிவிட்டு, அதுவே கடைசி மூச்சாக மூதாமை சாய்ந்தது.

மூதாமையின் அருமை தெரிந்து ஆமையுலகம் அதன் உடலை ஆரவாரத்துடனும், பெருமதிப்புடனும் அடக்கம் செய்ய முன்வந்தது. ஆனால், அந்தோ இனத்தின் எதிர்காலத்துக்காகக் கடைசி மூச்சுவிட்ட அந்த ஆமையின் உடலையும், அதைத் தூக்கிச் சென்ற பல ஆமைகளையும் முதலையரசனும் அதன் பரிவாரங்களும் விழுங்கி விட்டன.

ஆமையுலகத்தின் தன்மானம் முற்றிலும் பறிபோயிற்று. ஆமையினம் தன்னையே தான் மதிக்காத நிலை ஏற்பட்டது. ஆமைகள் நூற்றுக்கணக்கில் பகையினத்தின் பசிக்கு இரையாய் அழிந்தன. மீனினமும், தவளையினமும் கூட ஆமையினத்தின் அழிவு கண்டு கேலி செய்யலாயின.

ஆமையினம் முழுதும் சாகாமல் பார்த்துக் கொண்டது முதலையினமே. விரைவில் பெருகும் மீனினத்தையும், தவளையினத்தையும், பாம்பினத்தையும் தின்பதிலேயே அது முழுக்கருத்துச் செலுத்திற்று. ஆமைகளை மெல்ல மெல்லப் பெருகிவிட்டு, அரச முதலையும் உயர்குடி முதலைகளும் மட்டும் அவற்றை அவ்வப்போது சொகுசான உணவாக உண்டன.

ஆமைகள் சில ஒன்று கூடி வேறு ஏரி குளங்களுக்குப் போய்விடலாமா என்று கூட ஆலோசித்தன. ஆனால், வேறிடங்களுக்குச் செல்லும் நீர்ப்பாதைகள் ஒருசில. அவை முதலையினத்தின் ஆட்சியிலேயே இருந்தன. தவிர மற்ற எல்லா நீர்வாழ் உயிர்களும் வெற்றி கண்ட ஆட்சியினமாகிய முதலை இனத்துக்கே உடந்தையாயிருந்தது.

ஆமையுலகின் ஆலோசனைகளைக் காட்டிக் கொடுத்தன. ஆலோசனை கூறிய ஆமை முதல்வர்கள் தேடிப் பிடித்து விழுங்கப்பட்டனர். ஆமையினத்தின் வீர ஆமைகள், துணிகர ஆமைகள், அறிவுடைய ஆமைகள், ஆமையினத்தில் பற்றுடைய ஆமைகள் விரைந்தொழிந்தன. அடிமை ஆமைகள், ஆமையினத்துக்கு எதிராக எதிரிக்கு உளவு கூறிய ஆமைகள், நோயுற்று நலிந்த ஆமைகள் ஆகியவையே வாழ்ந்து வளர்ந்து பெருகின.

ஆமை உலகம் வாழவிடப்பட்டது. ஆனால், ஆமையினத்தின் நலத்துக்காக அல்ல, முதலையினத்தின் நலத்துக்காக. ஆமை உலக ஆண்டுகள் பல விரைந்து சென்றன. ஆமை உலக ஊழிகளும் ஒன்றொன்றாக உருண்டோடின. பன்னிரண்டாம் ஊழியும் வந்தது. மூதாமை கூறிய சொற்களை இதற்குள் பெரும்பாலான ஆமைகள் மறந்துவிட்டன.

வழக்கத்துக்கு மாறாக ஒரு பெண்ணாமை நீண்ட நாள் சூலாயிருந்தது. அது மலட்டாமை என்று பல ஆமைகள் அதை வெறுத்துத் தள்ளின. ஏரியின் ஒரு மூலையில் முதிய ஆமைகளுடன் அது சென்று இருந்தது. வரவரநோவு மிகுதியாயிற்று. சூல் முதிர்ந்து முட்டை வெளிவந்தபோது அது முற்றிலும் குருதிச் சிவப்பாயிருந்தது.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us