PUBLISHED ON : ஆக 29, 2020

அரசருடன் நகர்வலம் சென்றார் அமைச்சர் அப்பாஜி. சற்று காலதாமதமாக திரும்பினர்.
அரண்மனை அலுவல் அறையில் அமர்ந்தார் அரசர்.
அந்தப்புறக் கதவு சாத்தப்பட்டிருந்தது.
அரசி துாங்கியிருக்கலாம் என எண்ணி, 'தேவி... கதவை திற...' என்றார் அரசர்.
'திறக்க மாட்டேன்...'
உள்ளிருந்து, அரசியின் கோபக் குரல் வந்தது.
'சிறு குழந்தை போல அடம்பிடிக்காதே...'
'என் தம்பியை அமைச்சராக்க உறுதி அளித்தால் திறக்கிறேன்...'
கடுமையை காட்டினாள் அரசி.
விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு பேரரசர் என்றாலும், மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்.
'மடையன் என்று தெரிந்தும் பதவி கேட்கிறாயே. நியாயமா...'
'மடையனோ என்னவோ... மந்திரி பதவி அளித்தால் தான், கதவை திறப்பேன்...'
மேலும் குரலை கடுமையாக்கினாள்.
'மூன்று முறை வாய்ப்பு கொடுத்தும், வெல்லாதவன் அவன்...'
'அப்பாஜி பெரிய அறிவாளியோ...'
'அவரின் அறிவு, தேசம் கடந்தது...'
'எது எப்படியோ... என் தம்பி மந்திரியாக வேண்டும்...'
'சரி... நாளையே ஆக்கி விடுகிறேன்...'
அந்தப்புரத்தின் கதவு திறந்தது.
'பல அரசுகள் நாசமாய் போனதற்கு காரணம், அவையில், சொந்த பந்தங்களை சேர்த்ததால் தான். எப்படியோ போகட்டும்...'
சற்று கோபத்துடன் சொன்னார் அரசர்.
மறுநாள் காலை -
அப்பாஜியை அழைத்து வர உத்தரவிட்டார்.
'வணக்கம் அரசே...'
'ஒரு வாரத்திற்கு அரண்மனை பக்கம் வராதீர்; வீட்டிலேயே ஓய்வு எடுங்கள்...'
அரசரின் மனக்குறிப்பை உணர்ந்தார் அப்பாஜி.
'அப்படியே செய்கிறேன்...'
வணங்கியபடி இல்லம் நோக்கி நடந்தார்.
அரசவைக் கூடியது.
அரசியின் தம்பி தேவதேவன், அமைச்சராக பொறுப்பேற்றான்.
இரண்டு நாட்கள் கடந்தன.
தேவதேவனை அழைத்தார் அரசர்.
'அதோ இருக்கிறதே கிணற்றுக் கயிறு; அதை வைத்து, ஆயிரம் பணத்தை, ஒரே வாரத்தில் சம்பாதித்து தர வேண்டும்...'
உத்தரவைக் கேட்டு அதிர்ந்தான்.
'கயிற்றால் நீர் இறைக்கலாம்; பாதையை அளக்கலாம்; ஆட்டை, மாட்டைக் கட்டலாம். பணம் சம்பாதிக்க முடியுமா... அரசருக்கு பித்துப் பிடித்து விட்டதா' என புலம்பியபடி சகோதரியை பார்க்க புறப்பட்டான்.
'வாப்பா... அமைச்சராகி விட்டாய், மகிழ்ச்சி தானே...'
'மகிழ்ச்சியா... என் தோளில் பாருங்கள்... கிணற்றுக் கயிறு. இதை வைத்து, ஒரே வாரத்தில் ஆயிரம் பணம் சம்பாதிக்க வேண்டுமாம். நடக்கிற காரியமா... விற்றால், சல்லியும் கிடைக்காதே...'
தலைமேல் கைவைத்து சோகமாய் அமர்ந்தான்.
'அரசர் சொன்னால் அர்த்தம் இருக்கும்... யோசித்துப் பார்...'
'யோசிக்க என்ன இருக்கு...' கோபமாய் கேட்டான்.
அரசிக்கு ஒன்றும் புரியவில்லை.
'சரி... அரசரிடம் பேசுகிறேன்...'
தம்பியை அனுப்பியபின், மூளையை கிண்டினாள். ஒன்றும் தோன்றவில்லை.
அன்றிரவு -
'என் தம்பியை பிடிக்காததால் தான், கிணற்றுக் கயிறை கொடுத்து, பணம் சம்பாதிக்க கூறியிருக்கிறீர்...' கோபத்துடன் கேட்டாள் அரசி.
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ஒரு விஷயத்தை, பல கோணங்களில் யோசித்தால் விடை வரும். அப்பாஜியிடம், இதே கயிறை கொடுக்கிறேன். சம்பாதித்து தரவில்லை எனில் பதவியை பறித்து விடுகிறேன்...' தீர்க்கமாக சொன்னார் அரசர்.
ஒரு வாரத்திற்குப் பின் அரசரை சந்தித்தான் தேவதேவன்.
'என்னால் முடியவில்லை... வேறு ஏதாவது செய்கிறேன்...'
சலிப்புடன் கிணற்றுக் கயிறை திருப்பிக் கொடுத்தான்.
அரசர் உத்தரவுப்படி அப்பாஜியை அழைத்து வந்தனர்.
'கிணற்று கயிற்றால், ஒரு வாரத்தில், ஆயிரம் பணம் சம்பாதிக்க முடியுமா...'
'நிச்சயம் முடியும் அரசே...'
கயிற்றுடன் அரண்மனையை விட்டு வெளியேறினார் அப்பாஜி.
மாட்டு வண்டியில், முரசு அறைவோனுடன் அமர்ந்தார். வீதி வீதியாக சென்றது வண்டி.
'பொதுமக்களுக்கோர் செய்தி... இதோ, இந்த கிணற்று கயிறின் அளவுக்கு மேல் கட்டிய வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளார் அரசர். எல்லா வீட்டையும் இந்த கயிற்றால் அளக்க வேண்டும். உயரமாக இருந்தால், ஒரு அடிக்கு, 10 பணம் தண்டமாக ஒரே வாரத்துக்குள் செலுத்த வேண்டும்...'
- பறை சாற்றிக்கொண்டிருந்தான் முரசு அறைவோன்.
இரண்டே நாளில், திட்டமிட்டதற்கு அதிகமாக பல மடங்கு பணம் சேர்ந்தது!
அப்பாஜியின் அறிவைப் பாராட்டிய அரசர், கணிசமாக அன்பளிப்பும் வழங்கினார்.
அன்று இரவு, 'தேவி... கயிறு என்று அலட்சியமாக பேசினாயே... அதை வைத்து, எவ்வளவு பணம் சம்பாதித்து கொடுத்துள்ளார் அப்பாஜி... அவருக்கு இணையாக உன் முட்டாள் தம்பியை பேசுகிறாயே...' என்றார் அரசர்.
'இன்னொரு சோதனை வையுங்கள்... நிச்சயம், என் தம்பி வெல்வான்...'
'மேலும் மேலும், முட்டாள் என அறிய ஆசைப்படுகிறாய் போலும்...' சிரித்தபடியே கூறினார் அரசர்.
குட்டீஸ்... வகுப்பில் அறிவாளி மாணவர்களைப் பார்த்து பொறாமை படக்கூடாது அவர்களைப் போல் அறிவை வளர்க்க முயல வேண்டும்.
