PUBLISHED ON : ஜன 15, 2016

மேட்டுப்பாளையம் என்ற சிற்றூரில் மனோகர் என்ற முதியவர் இருந்தார். அவர் எல்லாரிடமும் கலகலப்பாகவும், இனிமையாகவும் பேசுவார்.
அந்த ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான்.
''தம்பி! ஊருக்குப் புதிதா? என்ன வேலையாக வந்திருக்கிறீர்கள்?'' என்று பேச்சுக் கொடுத்தார் மனோகர்.
'எழுதப் படிக்கத் தெரியாத கிழவர் இவர். மெத்தப் படித்து பட்டம் வாங்கியவன் நான். இவரிடம் பேசி எனக்கு என்ன ஆகப் போகிறது' என்று நினைத்தான் அவன்.
அவர் பேச்சைக் கவனிக்காதது போல முகத்தைத் திரும்பிக் கொண்டான்.
அவன் எண்ணம் அவருக்குப் புரிந்தது. தற்பெருமை கொண்ட அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார்.
''தம்பி! பட்டணத்திலிருந்து வருகிறீர்கள். பெரிய படிப்புப் படித்து இருப்பீர்கள். படிப்பு அறிவில்லாத இந்தக் கிழவன் ஒரு விடுகதை சொல்கிறேன். அதை விடுவியுங்கள் பார்ப்போம்,'' என்றார்.
அவரை மேலும், கீழும் பார்த்த அவன், ''என்ன விடுகதை? சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.
''மேலே நான்கு கால்கள் இருக்கும். கீழே எட்டுக் கால்கள் இருக்கும். ஐந்து தலை உண்டு. ஒரு வாலும் உண்டு. அது என்ன? இதுதான் விடுகதை!'' என்றார்.
அவனும் எப்படி எப்படியோ சிந்தித்துப் பார்த்தான். அந்த விடுகதைக்கு அவனால் விடை கண்டு பிடிக்க முடியவில்லை.
'அவர் ஏதோ வாய்க்கு வந்ததை உளறுகிறார். அப்படி ஒரு விடுகதை இருக்க முடியாது' என்று அவனுக்குத் தோன்றியது.
''நீங்களே அந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள்,'' என்றான் அவன்.
''தம்பி! நீங்கள் இந்த ஊரில் சில நாட்கள் தங்கப் போகிறீர்கள். இங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனியுங்கள். இந்த விடுகதைக்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.''
''படிப்பு அறிவிற்கு, அனுபவ அறிவு சிறிதும் குறைந்தது அல்ல. இந்த உண்மை உங்களுக்குப் புரியும்; பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.''
''இங்கிருந்து புறப்படும் போது உங்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், என்னிடம் விடுகதைக்கான விடையைக் கேளுங்கள். நான் விடை சொல்கிறேன்,'' என்றார் அவர்.
அந்த ஊரில் சில நாட்கள் தங்கினான் அவன். அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒவ்வொன்றையும் கவனித்தான். ஆனால் அந்த விடுகதைக்கான விடையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 'இது நம் அறிவிற்குப் புலப்படவில்லையே...' என்று தன்னையே நொந்து கொண்டான் அவன்.
அந்த விடுகதைக்கான விடை என்னவாக இருக்கும்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!
புதிர்க் கதையின் விடை: செத்த ஆட்டை ஒரு கழியில் தலைகீழாகத் தொங்கவிட்டு, நான்கு பேர் தூக்கிச் செல்லும் காட்சிதான் அது.
