PUBLISHED ON : ஜன 15, 2016

முல்லைபாளையம் என்னும் ஊரில் அசோக் என்பவன் இருந்தான். ஒரு பைசா சம்பாதிக்க வழி தெரியாதவன். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தான்.
ஒருநாள்-
''இப்படியே இருந்தால் எப்படி? என் தாயார் வீட்டில் போட்ட நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. எங்காவது வெளியூர் சென்று ஏதாவது வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்து வாருங்கள்,'' என்றாள் அவன் மனைவி.
''வெளியூர் போவதற்குப் பணம் வேண்டாமா?'' என்றான் அசோக்.
அவன் மனைவி, ஐம்பது ரூபாய் பணத்தை அவனிடம் கொடுத்து, ''இதை வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றாள்.
''அது சரி, வழிச் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டாய். வியாபாரம் செய்வதற்கு முதல் வேண்டாமா... அதற்கு நான் எங்கே போவேன்?'' என்றான் அசோக்.
தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி அவனிடம் கொடுத்து, ''இதை விற்று வியாபாரத்திற்கு முதலாக வைத்துக் கொள்ளுங்கள்!'' என்றாள்.
அசோக் வெளியூர் செல்வதற்கு ஆயத்தமானான். அவன் மனைவி கட்டுச் சாத மூட்டையொன்றை அவனிடம் கொடுத்து ''வழியில் பசியெடுத்தால் சாப்பிடுவதற்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றாள்.
அசோக் கட்டுச்சாத மூட்டையுடன் வியாபாரம் செய்வதற்காக வெளியூருக்குக் புறப்பட்டான்.
நடுப்பகல்_
அசோக் வழிநடந்த களைப்புத் தீர அங்கிருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தான். சிறிது நேரம் சென்றதும், அவனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. அருகில் இருந்த குளத்தில் முகம், கைகளை கழுவி வந்தான். சாப்பிடுவதற்காக கட்டுச்சாத மூட்டையைப் பிரிக்கப் போனான். அச்சமயத்தில், அவன் எதிரே ஒரு சாமியார் வந்து நின்றார்.
''மகனே, பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது கொடு!'' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.
தன் மனைவி கொடுத்தனுப்பிய உணவுப் பொட்டலத்தை அப்படியே எடுத்துச் சாமியாரிடம் கொடுத்தான்.
அவன் கொடுத்த உணவைச் சாப்பிட்டு முடித்த சாமியார், ''மகனே, எங்கு செல்கிறாய்?'' என்று கேட்டார்.
''சுவாமி, வியாபாரம் செய்வதற்காக வெளியூர் போகிறேன். என்னிடம் இருப்பது இந்தத் தங்க மோதிரமும், ஐம்பது ரூபாய் பணமும்தான். என்னுடைய முயற்சி வெற்றியடைய நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்!'' என்று தங்க மோதிரத்தையும், ஐம்பது ரூபாய்ப் பணத்தையும் சாமியார் முன்னால் வைத்தான் அசோக்.
''மகனே, உன்னுடைய வியாபாரம் வெற்றியடைய நான் ஒரு மந்திரம் சொல்கிறேன். சற்று நேரம் கண்களை மூடிக் கொள்,'' என்றார் சாமியார்.
சாமியார் கூறியபடியே கண்களை மூடிக் கொண்டான்.
சாமியார் ஏதோ மந்திரம் சொல்லியவாறே தங்க மோதிரத்தின் மீது, சிறிது மணலை எடுத்துத் தூவினார்.
சிறிது நேரம் சென்றதும் அசோக் கண்களைத் திறந்து பார்த்தான். எதிரே சாமியாரைக் காணவில்லை. தரையில் பார்த்தான். அவனுடைய ஒரு தங்க மோதிரத்திற்குப் பதில் பத்து தங்க மோதிரங்கள் அங்கே இருந்தன.
அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
எவ்வளவு சீக்கிரம் ஒன்றுக்குப் பத்தாகச் சம்பாதித்து விட்டோம்? என்ற பெருமையுடன் வீடு நோக்கித் திரும்பினான்.
கணவன் போன கையுடன் திரும்பி வந்ததைப் பார்த்ததும், ''என்ன அதற்குள் திரும்பி விட்டீர்கள்?'' என்று கேட்டாள் மனைவி.
''இதோ பாரடி, நீ கொடுத்த ஒரு தங்க மோதிரத்தை பத்து தங்க மோதிரங்களாக ஆக்கிவிட்டேன்!'' என்று பெருமையுடன் சட்டைப் பையிலிருந்து பத்துத் தங்க மோதிரங்களை எடுத்து அவளிடம் காண்பித்தான்.
''எப்படி இவ்வளவு சீக்கிரமாக ஒன்றுக்குப் பத்தாக சம்பாதித்துவிட்டீர்கள்?'' என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள்.
நடந்த கதை முழுவதையும் மனைவியிடம் கூறினான்.
''அப்படியா! ஒரு மோதிரம் பத்து மோதிரங்களானால் பத்து மோதிரங்கள் எத்தனை ஆகும்? நூறு, அடேயப்பா! என்றவள், நாளைய தினம் இந்தப் பத்து மோதிரங்களையும், எடுத்துக் கொண்டு சாமியாரிடம் போங்கள். அவர் நூறு மோதிரங்களாக மாற்றித் தருவார்!'' என்றாள் அசோக்கின் மனைவி.
மனைவி சொல்படி மறுநாள் கட்டுச் சாத மூட்டையுடனும், பத்துத் தங்க மோதிரங்களுடனும் முன்தினம் சென்ற இடத்திற்கே சென்றான்.
முன்தினம் போலவே அன்றையத் தினமும் சாமியார் அவனிடம் வந்தார்.
''மகனே, பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்கிறாயா?'' என்று கேட்டார்.
தன்னிடமிருந்து கட்டுச்சாத மூட்டையை அவரிடம் கொடுத்தான். சாமியார் சாப்பிட்டு முடிந்ததும், மகனே, உனக்கு ஏதாவது விருப்பம் உள்ளதா?'' என்று கேட்டார்.
''சுவாமி, இந்தப் பத்து மோதிரங்களை நூறு மோதிரங்களாக மாற்றிக் கொடுக்க வேண்டும்!'' என்று தன்னிடமிருந்த பத்துத் தங்க மோதிரங்களையும் சாமியாரின் முன்னால் வைத்தான்.
சாமியார் சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ளுமாறு அவனிடம் கூறினார். அவனும் சாமியார் சொன்னவாறே கண்களை மூடிக் கொண்டான்.
சிறிது நேரம் சென்றதும் அவன் கண்களைத் திறந்து பார்த்தான். எதிரே சாமியாரைக் காணவில்லை. தரையில் பார்த்தான். தரையில் நூறு மோதிரங்கள் இருந்தன. ஆனால், அவற்றைக் கூர்ந்து பார்த்ததும், அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
ஏனெனில், அவையனைத்தும் பித்தளை மோதிரங்கள்!
சாமியாரிடம் நூறு மோதிரங்கள் வேண்டுமென்று கேட்டானே தவிர, நூறு தங்க மோதிரங்கள் வேண்டும் என்று கேட்கவில்லையே. அதன் பலன்தான் இது.
தன் பேராசைத் தனத்தால், தனக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினான் அசோக்.
