PUBLISHED ON : ஜன 07, 2011

சிரோனிதீஸ் என்ற கவிஞர் ஆசிய நாடுகளின் நகரங்கள் பலவற்றுக்கும் சென்று, அரசவையில் பாடி ஏராளமான பரிசில்கள் பெற்று, தம் தாய்நாடான சீயோஸ் தீவுக்குக் கப்பலில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அவருடன் அதே கப்பலில் வேறு சில பயணிகளும் விலை உயர்ந்த பொருள்களோடு வந்து கொண்டிருந்தனர்.
ஒருநாள் திடீரென்று பயங்கரமான புயல்காற்று வீசவே, கப்பல் கவிழத் தொடங்கியது. அப்போது எல்லாப் பயணிகளும் தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு, கடலில் நீந்திப் பக்கத்தில் உள்ள ஒரு நகரத்தில் போய்க் கரையேறத் தீர்மானித்தனர். ஆனால், கவிஞர் மட்டும் எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் கடலில் குதிக்கப்போனார். அப்போது ஒரு பயணி அவரைப் பார்த்து, ''உங்கள் மூட்டைகளை நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?'' என்று கேட்டான்.
''என் மூட்டைகளில் விலைமதிப்புள்ள பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அந்தச் செல்வங்களை நான் பொருட்படுத்தவில்லை. என் உண்மையான செல்வம் என் உள்ளத்திலேயே இருக்கிறது!'' என்று சொல்லிவிட்டுக் கவிஞர் கடலில் குதித்து விட்டார். கவிஞரை ஒரு பைத்தியக்காரன் என்று நினைத்து எல்லாரும் சிரித்தனர்.
எல்லாப் பயணிகளும் நீந்திக் கரைசேர முயன்றபோது, கடற் கொள்ளைக்காரர்கள் வந்து அவர்களுடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டனர். பல பயணிகள் நீந்த முடியாமல் கடலில் மூழ்கி இறந்தனர். கவிஞரும் ஒரு சில பயணிகளும் மட்டுமே கரை சேர்ந்து நகருக்குள் சென்றனர்.
அந்த நகரில் வாழ்ந்த ஒரு பிரபு பெரிய கல்விமானாக இருந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கவிஞர். அவர் பெயரைக் கேள்விப்பட்டதுமே பிரபு அளவிட முடியாத மகிழ்ச்சியோடு, அவரை வரவேற்று ராஜோபசாரம் செய்தார். சிரோனிதீஸ் இயற்றிய அநேக கவிதைகள் அந்தப் பிரபுக்கு ஏற்கனவே மனப்பாடமாகத் தெரியும். கவிஞருக்குப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தார் பிரபு. மறுநாள் ஒரு தெரு வழியாக நடந்து வந்த கவிஞர், தம்மோடு கரை சேர்ந்த பயணிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது கவிஞர் அவர்களைப் பார்த்து, ''என் செல்வம் அழியாதது; என் உள்ளத்திலேயே இருப்பது. இப்படி நான் சொன்னதைக் கேட்டு சிரித்தீர்கள். இப்போது என்ன ஆயிற்று. அழியக் கூடிய செல்வத்தைத் தூக்கிக் கொண்டு வர முயன்றீர்கள். இன்று உங்கள் நிலை என்ன?'' என்று கேட்டார். அவர்கள் வெட்கப்பட்டு, தலை குனிந்து நின்றனர். கல்விச் செல்வம் என்றுமே அழியாது, நிலைத்து நிற்கக்கூடியது.
***
