தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தியாகச் சிலை !

தியாகச் சிலை !

தியாகச் சிலை !


PUBLISHED ON : ஜன 07, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலை நாட்டு நகரம் ஒன்றின் நான்கு சாலை சந்திப்பில் சிலை ஒன்று இருந்தது. கைக் குழந்தையுடன் பெண் ஒருத்தி இருப்பது போன்று அந்தச் சிலை இருந்தது. அதன் அடியில் தியாகத்தின் சிலை என்று பொறிக்கப்பட்டு இருந்தது.

வெளிநாட்டில் இருந்து யார் அந்த நகரத்திற்கு வந்தாலும் போதும். அவர்களிடம் அந்தச் சிலையின் கதையைப் பெருமையாகச் சொல்வர் அந்நாட்டு மக்கள். அந்தச் சிலையின் கதை இதுதான். வெகு காலத்திற்கு முன் நடந்த உண்மை நிகழ்ச்சி இது. அந்நாட்டு அரசி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டு இறந்து விட்டாள். இளவரசனை வளர்க்கும் பொறுப்பைத் தன் நம்பிக்கைக்கு உரிய செவிலியிடம் ஒப்படைத்தான் அரசன். அந்தச் செவிலிக்கும் இளவரசனின் வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. அரசனின் தாயாதிகள், 'குழந்தையாக உள்ள இளவரசனை கொன்று விட்டால் போதும். அந்தக் கவலையில் அரசனும் இறந்து விடுவான். ஆட்சி நம் கையில் வந்து விடும்,' என்று நினைத்தனர்.

அரண்மனை வீரர்களுக்கு நிறைய பொருளைக் கையூட்டமாகத் தந்தனர். தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற நள்ளிரவில் அரண்மனைக்குள் நுழைந்தனர். அவர்கள் வருவதை அறிந்தாள் செவிலி. எப்படியாவது இளவரசனைக் காப்பாற்ற நினைத்தாள்.

இளவரசனின் உடைகளைத் தன் மகனுக்கும், மகனின் உடைகளை இளவரசனுக்கும் அணிவித்தாள். இளவரசன் படுக்கும் தொட்டிலில் மகனைப் படுக்க வைத்தாள். அங்கே வந்த அவர்கள் அந்தக் குழந்தையை இளவரசன் என்று நினைத்தனர். குழந்தையைக் கொன்றுவிட்டுச் சென்றனர். பொழுது விடிந்தது. செவிலியின் தியாகத்தால் இளவரசன் காப்பாற்றப் பட்டதை அறிந்தான் அரசன். வஞ்சகம் செய்த தாயாதிகளுக்கும், கடமை தவறிய வீரர்களுக்கும் கொலைத் தண்டனை விதித்தான்.

செவிலியிடம் வந்த அவன், ''உன் தியாகத்திற்கு விலையாக இந்த நாட்டையே தந்தாலும் ஈடாகாது. என்ன பரிசு வேண்டும் கேள். என் உயிரையே கேட்டாலும் தருகிறேன்!'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னான்.

அதற்கு அவள், ''அரசே! என் கடமையைச் செய்து விட்டேன். என் மகன் இல்லாத உலகத்தின் நான் வாழ விரும்பவில்லை!'' என்றாள்.

வாளால் தன் வயிற்றில் குத்திக் கொண்டு இறந்து போனாள். அந்தத் தியாகப் பெண்ணின் நினைவாகவே, மேலை நாட்டின் முக்கிய நகரத்தின் நான்கு சாலை சந்திப்பில் குழந்தையுடன் இருப்பது போல், இந்த செவிலிக்கு சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையின் அடியில், 'தியாகத்தின் சிலை' என்று பெறிக்கப்பட்டுள்ளது. அந்நகரத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு எல்லாம் அந்தச் சிலையின் கதையை கூறி மகிழ்வர் அந்நாட்டு மக்கள். ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us