PUBLISHED ON : பிப் 24, 2017

கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தீபாவளிக்கு மறுநாள், அனைவரும் புது உடை அணிந்து பள்ளிக்கு செல்வோம். மிகவும் சந்தோஷமாக புது உடை அணிந்து சென்ற எனக்கு, மிகுந்த அதிர்ச்சி. ஏனெனில், வகுப்பில் பலர், பள்ளி சீருடை அணிந்து, சோகமாய் இருந்தனர். சக மாணவியின் தந்தை, தீபாவளியன்று, மாரடைப்பில் இறந்ததால், செய்தி கேட்டு அனைவரும் புது உடை அணியவில்லை.
ஒருவாரத்திற்கு பின், அந்த தோழி பள்ளிக்கு வந்தாள். நல்ல வேளை, படிப்பை நிறுத்தவில்லை என்று ஆனந்தப்பட்டோம்.
பள்ளியில் அன்று, இறை வணக்கம் செய்து முடித்தவுடன் மேடையில் நின்று, 'மாணவியரே, போன வாரம் என் தந்தை இறந்து விட்டார். தந்தையின் சேமிப்பு என் குடும்பத்திற்கு போதவில்லை. இப்பள்ளி நிர்வாகம், என் அம்மாவுக்கு நல்ல வேலை தருவதாக கூறியது. ஆனால், படிப்பறிவு இல்லை என்ற காரணத்தால், இங்கு எடுபிடி வேலை, பெருக்கும் வேலை கிடைத்துள்ளது.
'இன்று வரை விளையாட்டாகவும், பொழுது போக்கவும் படித்து கொண்டிருந்த எனக்கு, கண் திறந்தது. நாளை இப்படி ஒரு நிலைமை எனக்கு வரக்கூடாது என்பதற்காக, இனி நான் ஒழுங்காக படிக்க போகிறேன். உங்களுக்கும் இது பாடமாக அமையும் என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்...' என்று கண்ணீருடன் கூறினாள்.
அம்மாணவியின் தாயை ஆயாவாக பார்க்கும் போது, அது பலருடைய கண்ணை திறந்தது உண்மை. அன்றிலிருந்து பள்ளியில் பலர் உண்மையாக படிக்க ஆரம்பித்தோம்.
இன்று, நான் நல்ல நிலைமையில் இருக்க காரணம், அன்று தன் துக்கத்தையும் மறந்து, எங்கள் நன்மைக்காக அம்மாணவி பேசியது தான்.
அவளும், எம்.எட்., படித்து, இப்போது அப்பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக உள்ளார். காலத்திற்கு ஏற்ப பெண்கள் தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதை இன்றும் நம்புகிறேன்.
- ஜி.ஜெயஸ்ரீ, மேற்கு மாம்பலம்.
