PUBLISHED ON : பிப் 24, 2017

பள்ளி வாழ்க்கையில், சுவையான நிகழ்வுகள் பல நிகழ்ந்து இருந்தாலும், சில நிகழ்வுகள் மட்டும், ஈரமண்ணின் காலடிச்சுவடாக நெஞ்சில் பதிந்துள்ளது.
என் தந்தை, மத்திய அரசு பணியில் இருந்ததால், சில காலம் அருப்புக்கோட்டையில் வசித்தோம். அப்போதைய கல்வி இயக்குனராக இருந்த, நெ.து.சுந்தரவேதவேல், எங்கள் பள்ளிக்கு வந்தார். ஒவ்வொரு வகுப்பறையாக பார்வையிட்டார். அனைத்து வகுப்பறையிலும், மாணவ - மாணவியர் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர்.
கரும்பலகையில், மொத்த மாணவர் எண்ணிக்கை, 40, 50 ஆக இருந்தாலும், வருகை பதிவேட்டில், பாதி எண்ணிக்கையே இருந்தது. இதை கவனித்த பள்ளிக்கல்வி இயக்குனர், தலைமை ஆசிரியரிடமும், வகுப்பாசிரியரிடமும் காரணத்தை கேட்டார்.
'இங்கு படிக்கும் பெரும்பான்மையான மாணவ - மாணவியர் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுபவர்கள். இரு வேளை தான் உணவு சாப்பிடுகின்றனர். காலையும், இரவும் மட்டும் தான். அதனால், அந்த மாணவ - மாணவியர், பெற்றோருக்கு உதவியாக கழனி வேலைக்கும், நெசவுத் தொழிலுக்கும் போய் விடுகின்றனர்.
'பெற்றோரிடம் முறையிட்டும் பலனில்லை. ஏறக்குறைய, மதுரை மாவட்ட பல ஊர் பள்ளிகளிலும், இதே நிலை தான்...' என்று தலைமையாசிரியர் கூறியதை கேட்டு, உறைந்து போனார், பள்ளி கல்வி இயக்குனர்.
பின் அவர், அப்போதைய முதல்வராக இருந்த காமராஜரிடம், இதை தெரிவித்ததாலும், அதற்கு பின், முதல்வர் மதிய உணவுத் திட்டம், சீருடை போன்றவற்றை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக பின்னாளில் கேள்விப்பட்டோம். அந்த திட்டங்களுக்கு விதை நிலமாக இருந்ததில், எங்கள் பள்ளியும் ஒன்று என்பதை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.
- எம்.ரஜியாபேகம், மடிப்பாக்கம்.
