தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளவரசன் ப்ருத்திவி! (4)

இளவரசன் ப்ருத்திவி! (4)

இளவரசன் ப்ருத்திவி! (4)


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தவறவிட்ட அரச லச்சினை மோதிரத்தை, இம்புலியிடம் இருந்து திரும்ப பெற, மைத்ரேயியை அனுப்ப முடிவு செய்தனர். இனி -

'எங்களின் ஆசி உனக்கு எப்போதும் உண்டு மைத்ரேயி!' என்றனர் மகாராஜாவும், மந்திரியும்.

''ஐயோ! சொல்ல மறந்துட்டேனே... என் காதலர் என்னை தேடி இங்கு வந்தால், அவரை மிக மரியாதையுடன் வரவேற்று உபசரியுங்கள்!''

''என்னது, உனக்கு காதலனா... இதுவரை என்னிடம் சொன்னதே இல்லை, யார் அவன்?'' என்றார் மகாராஜா.

''அந்த விபரமெல்லாம், உங்கள் மதியூக மந்திரியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்!'' என்று கூறி, புறப்பட்ட வேளையில், திடீர் என்று மழை கொட்ட ஆரம்பித்தது.

''மைத்ரேயி... சாப்பிட்டுவிட்டு, கையில் குடை எடுத்து போம்மா,'' என்றார் மந்திரி.

''மந்திரியாரே! நீங்கள் மனதில் ஒன்றை நன்றாக இருந்திக்கொள்ள வேண்டும். நான் இப்போது, அரசாங்க ஊழியர். அரசாங்க ஊழியனுக்கு, பசி, தாகம் கிடையாது. மழை, இடி, மின்னல், வெள்ளம், பூகம்பம் எதுவாக இருந்தாலும், அதை கண்டு அஞ்சும் நெஞ்சம் இருக்க கூடாது. அரச ஆணையை, நல்லவிதமாக முடித்த பின் தான், பசியும், தாகமும் ஏற்படும்,'' என்று கூறிவிட்டு, சிட்டாக பறந்து ஓடிவிட்டாள் மைத்ரேயி.

''ராஜேந்திரா! இந்த தெய்வீக குழந்தையை எப்போதுமே நம்முடனேயே வைத்து கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும், வெளியே திருமணம் செய்து கொடுத்து விட கூடாது. நம்மிடையே வளரும், அதிபுத்திசாலி இளைஞன் ஒருவனிடம் தான், ஒப்படைக்க வேண்டும். இருவரும் நம்முடனேயே இருக்கட்டும்'' என்று கலங்கிய கண்களுடன் கூறினார் மகாராஜா.

''கவலையை விடுங்கள் மகாராஜா... மைத்ரேயிக்கு ஏற்ற மாப்பிள்ளையை, நான் எப்போதோ தேர்ந்தெடுத்துவிட்டேன்!'' என்றார் மந்திரி.

பெரும் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது. இயற்கையின், இரவு நேரத்து அடாவடித்தனம். இவற்றை நன்கு அறிந்தும், துணிவோடு, இயற்கையின் சவாலை சமாளித்து, ஜெயித்திடலாம் என்ற உறுதியோடு சென்றாள் மைத்ரேயி.

அந்த இருவரும் புறப்பட்டு சென்றவுடன், இம்புலியும், சின்னியும், அவர்கள் சென்ற திசையை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.

''மாமா! இன்னைக்கு நமக்கு மிகவும் சந்தோஷமான நாள். வந்த விருந்தினர், இந்த வயல் வரப்பில ஒக்காந்து, பசிக்குதுன்னு சொல்லி, நான் கொண்டு வந்த, கம்பங்கூழை அவங்களே எடுத்து ருசித்து சாப்பிட்டனர்.

''என் மேல தான், எவ்வளவு பாசம்; பிரியம். வாய் நிறைய தங்கச்சி தங்கச்சின்னு கூப்பிட்டு, என் கை நிறைய பண கட்டுகளை திணித்தனர். நான் அப்படியே உருகிட்டேன் மாமா... இந்த மனசு, யாருக்கு வரும்... நம்மள போல சாதாரண மனுஷன்களால் தான், இப்படி பாசத்தை கொட்ட முடியுமா...

''அவங்க முகத்தில் என்னவொரு கம்பீரம்; அவங்களை பார்த்ததும், அப்படியே கையெடுத்து கும்பிட்டு, அவங்க கால்ல விழுந்து கும்பிட தோணிச்சு மாமா... இவங்க சாதாரண ஆளுங்க இல்லை; ரொம்ப ரொம்ப பெரிய சன்னியாசிங்கன்னு நினைக்குறேன். ஆனாலும், இத்தனை நல்லவங்க, நம்ம துஷ்யந்த மகாராஜாவை பத்தி மரியாதை இல்லாமே, அவன், இவன்னு பேசுனது தான் எனக்கு பிடிக்கல...

''ஏன் மாமா! நீயாவது ஒரு வார்த்தை பேசி இருக்கலாம்... ஏன் கம்முனு இருந்த?'' என்று கோபப்பட்டாள் சின்னி.

''ஏண்டி... நீ கேக்கறது தானே?'' என்று வெடித்தான் இம்புலி.

''அது எப்படி மாமா... அத்தனை பெரிய மனுஷங்க, நம்ம வீடு தேடி வந்திருக்கும் விருந்தாளிகளை, எதிர்த்து பேசினா நல்லாவா இருக்கும். நீயே சொல்லு...''

''அட அட... அவ்ளோத்துக்கு பயந்தாகுளியா நீ... இல்லேடி, அந்த களவானிப்பய, உன் கையை பிடிச்சி, ரூபாய் கட்டை வெச்சதும், அப்படியே புல்லரிச்சு, தெகச்சு போயிருப்பே. அது தாண்டி நெசம்!'' என்றான் இம்புலி.

''மாமா... நீ ரொம்ப பேசற... என் அம்மாவுக்கு, ஒரு ஆம்பள புள்ள இல்லன்னு ரொம்ப குறை. ராசாத்தி நெஞ்சு வழிய, உன்னை தங்கச்சின்னு கூப்பிட்டு, உனக்கு கல்யாணம் கட்டிவெச்சு, உன் குறை நிறையெல்லாம் தீத்துவைக்க ஒரு அண்ணன் இல்லன்னு அப்ப அப்ப கண்ணீர் வடிப்பாக...

''ஆனா, இப்ப நீ என்னடான்னா இப்படி தாறுமாறா பேசறே... மனுஷங்கன்னா நாலுவிதமா தான் இருப்பாங்க. அதை, நாம பாக்கிற பார்வையிலும், கேக்குற விதத்திலும் தான் இருக்கு,'' இடைவெட்டினாள் சின்னி.

''அட்ரா சக்கை... வசனமா பேசறே... இருடீ இரு... அந்த திருட்டு பயலுக வரட்டும், 'நான் இம்புலி இல்லடா... ஆக்ரோஷமாக பாயும் வேங்கைப்புலிடா'ன்னு நிரூபிச்சு காட்டுறேன். எவ்ளோ தைரியம் இருந்தா உன் கையை பிடிச்சிருப்பான்...

''வரட்டும் அந்த திருட்டு பயலுங்க... என் கால் செருப்பை சுழற்றி, அவங்கள அடிக்கிற அடியில, இனி சம்ஷ்டிப்பூர் எல்லையிலே கால் வெச்சுருவானா,'' என, கோபமாக கத்தினான் இம்புலி.

''மாமா! உன்ன காத்தோ, கறுப்போ தான் புடுச்சிருக்கு. அதான் இப்படியெல்லாம் பேசுற... கடவுளே, இவரை நல்லவரா ஆக்கிடுப்பா...'' என்றாள்.

கையிலிருந்த சுருக்குப் பையை, இம்புலியிடம் நீட்டி, ''இந்தா மாமா சுருக்குப் பை; பணம் பத்திரம். தலைக்கு மேல வேல கெடக்கு. வசந்தி அக்காவுக்கு, காய்ச்சலுக்கு, கஷாயம் கொடுத்துட்டு வர்றேன். நீ சாப்டுட்டு, கொஞ்ச நேரம் நெழல்ல படு. நான் திரும்ப வந்ததும், வீட்டுக்கு போலாம்...'' என்று வாக்குவாதமே நடக்காதது போல, வசந்தி அக்கா வீட்டை நோக்கி புறப்பட்டாள் சின்னி.

சற்று முன் தன் புருஷன் பேசிய, பேச்சையெல்லாம் முற்றிலும் மறந்து, மனமெல்லாம் ஒரே மகிழ்ச்சி புயல்! காதருகே, 'தங்கச்சி தங்கச்சி...' என்ற, அன்பில் தோய்ந்த அந்த குரல் ரீங்காரமிட, மனமும், நெஞ்சமும் நன்றியால் நனைந்தது. என்றுமில்லாத திருநாளாய், இன்று மட்டும் அவ்வளவு மகிழ்ச்சி. துள்ளும் முகத்துடன், 'அக்கா!' என்று கூவியபடி நுழைந்தாள் சின்னி.

''என்னடி என்ன விசேஷம்... குதூகலமா வர்றே?'' என்று கேட்டாள் வசந்தி.

''ஆமாக்கா... உன் பேச்சு நிஜம் தான். இன்னைக்கு காலைல, ரெண்டு பேர் நம்ம வயலுக்கு வந்தாங்க. அவங்களை பார்த்ததும், எனக்குள்ள ஒரே பதட்டம். அப்படியே கையெடுத்து கும்பிட்டேன். அவங்கள கண்டதும், ஏன் என் மனசு வாளை மீன் மாதிரி துள்ளி குதிக்குதுன்னு உள்ளூற தவியா தவிச்சு போயிட்டேன் அக்கா...

''அது மட்டுமல்ல, நான் செஞ்ச கூழும் வெஞ்சனமும், கெட்டித்தயிரையும் விரும்பி சாப்டாங்க. அவங்க கிளம்பும் போது, பிரியமா தங்கச்சின்னு கூப்பிட்டு, என் கைல, ஒரு கட்டு பணத்தை திணிச்சாங்க.

''பாசம் பொங்க, 'தங்கச்சி'ன்னு கூப்பிடதுல, நான் அப்படியே உருகிட்டாலும், அவங்க பணத்த கொடுத்ததுல எனக்கு ஒரே கோபம். 'கூழ் சாப்பிட்டதற்கு கூலியா... இப்படியா பணத்தை கொடுத்து என்னை அவமானப்படுத்துவது... விருந்தாளிக்கு சாப்பாடு போட்டு, கூலி வாங்கறத விட கேவலம் வேறு ஏதுமில்லை ஐயா'ன்னு நான் குரலை உயர்த்தி பேசியதும், 'ஐயோ! தங்கச்சி இது உன் கூழுக்கு கொடுத்த பணம் இல்ல.. உன் வயித்தில வளரும் எங்க மருமகப்புள்ளைக்காக தான். அவனை, எங்க புள்ளையை நல்லா கவனிச்சுக்க' என்று சொல்ல, நா அப்படியே தெகச்சுப்போயிட்டேன் அக்கா...

''எனக்கு வெட்கம் தாங்கல... 'மாப்பிள! எங்க தங்கச்சியை நல்ல பாத்துக்க... தங்கச்சிகிட்ட சொல்லி, நாங்க அடுத்து வரும்போது, நிறையவே கூழு பண்ணி குடுக்க சொல்லு. இந்த ருசி; இந்த மனத்தோட இன்னைக்கு சாப்பிட்டது பத்தவே இல்லைன்னு' சிரிச்சுகிட்டே சொல்லிட்டு போயிட்டாங்க அக்கா...

''நெசம்மா சொல்லுறேன் அவங்க போனது எனக்கு துக்கமா இருக்கு. ஆனா, உன் அண்ணன், 'கம்'ன்னு ஒரு மொழ நீளம் மூஞ்சியை தூக்கிட்டு உக்காந்திருக்காரு!''

''ஐயோ தங்கச்சி! இந்த ஆம்ளைங்க, தன் பெஞ்சாதியை யாரேனும் புகழ்ந்து பேசிட்டா போதும், பொறாமையால் உடம்பு வெந்துடும்; என் அண்ணன் மட்டுமல்ல, எல்லா ஆம்பிள்ளைகளுமே சின்னபுத்திக்காரனுகதா... உன் அத்தான் மட்டும் என்ன லேசுப்பட்டவனா... வுட்டுத்தள்ளு... திருத்த முடியாத ஜென்மங்க... நீ எதையும் மனசுல வைச்சுக்காத,'' அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் வசந்தி.

ஆயினும், அவள் மனதில் சின்னதாக ஒரு நெருடல் இருந்து கொண்டு தான் இருந்தது. 'வெயில் ஏறு முன், மாமனுடன் வீடு திரும்பிவிடலாம்' என்று எண்ணியவளுக்கு இம்புலியை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us