PUBLISHED ON : அக் 14, 2023

அரேபிய சந்தைக்கு ஒட்டகம் வாங்க சென்றார் மிலன். சாதுர்யமாக பேரம் பேசி, குறைந்த விலைக்கு ஒன்றை வாங்கி மகிழ்வுடன் திரும்பினார்.
வேலைக்காரரை அழைத்து, ஒட்டகத்தை கொட்டிலில் கட்ட சொன்னார்.
பின், ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க முயன்றார் மிலன். முடியவில்லை; வேலைக்காரரிடம் அந்த பணியை ஒப்படைத்து கட்டளையிட்டார்.
வேலைக்காரர் சேணத்தை அவிழ்க்க முற்பட்ட போது, 'வெல்வட்' பை ஒன்று விழுந்தது. அதில், விலைமதிப்பற்ற நவரத்தின கற்கள் மின்னின; பத்திரமாக எடுத்துச் சென்று, ஒட்டகம் வாங்கி வந்த முதலாளி மிலனிடம் காட்டினார், வேலைக்காரர்.
சற்று நேரம் யோசித்தார் மிலன். பின், ஒட்டகத்தை விற்றவரிடம் அந்த பையை ஒப்படைக்கும் விதமாக பயணத்திற்கு ஆயத்தமானார்.
புறப்பட்டவரை தடுக்கும் விதமாக, 'ஐயா... தங்களுக்கு இறைவன் தந்த பரிசு அல்லவா இந்த பை; இதை நீங்களே வைத்து கொள்ளுங்களேன்...' என்று வற்புறுத்தினார் வேலைக்காரர்.
அந்த பேச்சை பொருட்படுத்தாமல் புறப்பட்டு சென்றார் மிலன். ஒட்டகம் விற்றவரை சந்தித்து விபரம் கூறி, அந்த பையை ஒப்படைத்தார். மிகவும் மகிழ்ந்து, 'உங்க நேர்மையை பாராட்டுகிறேன். பையிலிருக்கும் நவரத்தினங்களில் பிடித்த ஏதேனும் இரண்டை எடுத்து கொள்ளுங்கள்...' என்றார் விற்றவர்.
புன்னகைத்தபடி, 'ஐயா... இந்த பையை தரும் முன், இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்...' என்றார் மிலன்.
உடனே நவரத்தினக் கற்களை எண்ணிப் பார்த்தார் விற்றவர்.
எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன; குழம்பி நின்றவரிடம், 'ஐயா... என் நேர்மையும், சுய மரியாதையும் தான் அந்த இரண்டு ரத்தினங்கள்...' என கூறி கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி புறப்பட்டார் மிலன்.
குழந்தைகளே... நேர்மையும், சுய மரியாதையும் கலந்தது வாழ்க்கை; அதன் ருசியை உணர்ந்தால் பெருமையுடன் வாழலாம்!
- கே.என்.ராமகிருஷ்ணன்
