PUBLISHED ON : ஏப் 15, 2011

வங்காளத்தில் 1897ம் ஆண்டு ஜன., 23ம் நாளன்று, ஜானகிநாதர் - பிரபாவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், 'நேதாஜி' என்ற சுபாஷ் சந்திரபோஸ். குழந்தைப் பருவத்திலேயே இவரது தாயார் இதிகாசக் கதைகளைக் கூறி வந்தார்.
ஆர்வத்துடன் கதைகளைக் கேட்டு, 'கடவுள் நம்பிக்கை' கொண்டவராக விளங்கியதோடு, மதிநுட்பம் கொண்டவராகவும், பிறருக்கு உதவிடும் எண்ணத்தையும் கொண்டிருந்தார். ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது பக்கத்து கிராமத்தில் காலரா நோய் பரவியிருந்ததைக் கண்டு, நண்பர்களுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு உதவச் சென்றார். 1913ம் ஆண்டு கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார்.
பின்பு 1919ம் ஆண்டு இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ்., தேர்வில் தேறி உயர் பதவி பெற்றார். அங்கிருந்து, 'இந்தியா சங்கத்தில்' வாரம் ஒருமுறை நடைபெற்று வந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து வந்தார்.
கூட்டத்தில் பெருந்தலைவர்கள், இந்திய நாட்டிலுள்ள அடிமைத் தனத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்று பேசிய வீரவுரைகள், சுபாஷின் உள்ளத்தில், இந்திய விடுதலை உணர்வைத் தூண்டிடச் செய்தது. 1921ம் ஆண்டு காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட, இந்தியாவிலுள்ள பலரும் தத்தமது தொழில்களை விட்டபோது, சுபாஷும் தமது உயர் பதவியை விட்டு விலகி இந்தியாவுக்கு வந்தார்.
சி.ஆர்.தாஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், தாஸையே தலைவராகக் கொண்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இருவரின் செயல் வேகத்தைக் கண்டு ஆங்கிலேய அரசு இருவரையும் அடக்க நினைத்தது. அதனடிப்படையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து இருவரையும் சிறையிலடைத்தது.
கடந்த 1923ம் ஆண்டு சட்டசபைக்கென நடந்த தேர்தலில், சுயராஜ்யக் கட்சி வேட்பாளராக தாஸ் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற, சுபாஷ் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்ட கருத்துள்ளவர்கள் இருந்தது சுபாஷுக்குப் பிடிக்கவில்லை. மிதவாதத்தைவிட தீவிரவாதமே சிறந்ததென்ற முடிவுக்கும் வந்தார்.
கடந்த 1922ம் ஆண்டு, 'இளைஞர் கட்சி' ஒன்றைத் தோற்றுவித்தார். 1924ம் ஆண்டு, கொல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட்ட சுபாஷ், இளைஞர்களின் அமோக ஆதரவால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இளைஞர் கட்சி சார்பில், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி, தேசிய உணர்வைத் தூண்டினர். இது அரசுக்குத் தொல்லையாக இருக்கவே, அக்., 21ம் நாளில், எவ்வித ஆதாரமின்றி கைது செய்து சிறையிலடைத்தது.
சிறையில் சுபாஷ் தன்னை முற்றிலும் துறவியாக மாற்றிக் கொண்டார். சிறையில் சுபாஷின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில், 'தாஸ்' காலமான செய்தி. சுபாஷுக்கு மேலும் வேதனையை அளித்தது. அவரது உடல்நிலை மேலும் கவலையளிக்கவே, அரசே அவரை விடுதலை செய்தது.
கடந்த 1929ம் ஆண்டு, லாகூர் சிறøயிலடைக்கப்பட்டிருந்த சிலரை அரசியல் கைதிகளாக நடத்தியதால், பகத்சிங் - பகுகேசுவர்தர் - யதீந்திர தாஸ் ஆகியோருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்தார். அறுபத்தொரு நாள் உண்ணாவிரதத்தில் யதீந்திர தாஸ் உயிர் துறந்தார். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுபாஷ், வீர உரையாற்றினார். அதனால், 'ராஜத்துவேசக் குற்றம்' சுமத்தி அரசு அவரைக் கைது செய்து ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், நேருவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த காந்தியடிகள், 'பூரண சுதந்திரமே காங்கிரசின் இறுதி லட்சியம்' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதனடிப்படையில், 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் நாளைப் பூரண சுதந்திர நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட்டதில் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.
1931ம் ஆண்டு காந்தி இர்வின் ஒப்பந்தப்படி சுபாஷ் உட்பட தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மதுராபுரியில் இளைஞர் கட்சியின் ஆண்டு விழாவில், 'நாட்டில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பெருந்துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களின் துயரங்களுக்கெல்லாம் காரணம் அந்நியரின் ஏகாதிபத்தியமே. அந்நியரை விரட்டிவிட்டால் சுபிட்சமாக வாழ முடியும்!' என்று முழக்கமிட்டார் சுபாஷ். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
(- தொடரும்)
