தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ரசமான வேலை! (1)

ரசமான வேலை! (1)

ரசமான வேலை! (1)


PUBLISHED ON : ஜன 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்வத நாட்டை, மரகதவண்ணன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். நாட்டு பற்றும், மக்களிடம் அளவற்ற அன்பும் கொண்டவர். பெயருக்கேற்ப, மரகதமாக ஒளிர்ந்தார். முன்னோர் கட்டியிருந்த அன்னச் சத்திரங்கள், சிறப்புற நடக்க ஆவன செய்தார்.

மாறுவேடம் அணிந்து சென்று மக்கள் நலனை அறிந்து வந்தார். ஒருமுறை நாட்டை சுற்றிப் பார்த்த போது வடபகுதியில், அன்னச்சத்திரம் ஒன்று தேவைப்படுவதை அறிந்தார்.

இடத்தை தேர்வு செய்து, அன்னச்சத்திரம் கட்டும் பணி துவங்கியது. காற்றோட்டமான சமையலறையும், பொருட்கள் வைப்பறையும், நீர் வசதிக்காக கிணறும் அமைக்கப்பட்டன. சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வாங்கப்பட்டன. வெளிச்சம் நிரம்பிய பந்தி கூடங்களும் அமைக்கப்பட்டன.

உணவுக்கு தேவையான காய்கறி வகைகளுக்கு, சத்திரத்தின் பின்புறம், செடிகள் பயிரிடப்பட்டன. சமையல் செய்வதற்கு, கைதேர்ந்த சமையல்காரர்கள் அமர்த்தப்பட்டனர்.

நல்ல நாளில், சத்திரத்தை திறந்து வைத்த மன்னர், முதல் பந்தியில் உணவும் பரிமாறினார். அனைவரும் திருப்தியாக உண்டது கண்டு மகிழ்ந்தார். பின், சத்திரத்தின் பொறுப்பை, உரிய அலுவலரிடம் ஒப்படைத்து, அரசு பணிகளைக் கவனிக்க சென்றார்.

மாதங்கள் கடந்தன. உணவு உண்ணும் வேளைகளில் எல்லாம், புதிய அன்னச்சத்திரம் பற்றிய நினைவால், 'சுவையான உணவு வந்தவர்களுக்கெல்லாம் தட்டுப்பாடின்றி பரிமாறப்படுகிறதா' என்று சிந்தித்தார் மன்னர்.

அந்தச் சத்திரம், மக்களின் பசிப்பிணி போக்கும் அரும்பணியை சிறப்பாக செய்து வந்தது. வழிப்போக்கர், சாதுக்கள், குழந்தைகள், முதியோர் என, பலரும் உண்டு மகிழ்ந்து மன்னரை வாழ்த்திச் சென்றனர்.

அன்னசத்திரத்தின் செயல்படும் விதத்தை ஆய்வு செய்ய விரும்பிய மன்னர், வீரர்கள் சிலருடன் மாறுவேடத்தில் சென்று உணவு உண்டார். இலையில், பொரியல், கீரை மசியல், சுண்டை வற்றலுடன் அன்னம் பரிமாறப்பட்டது.

கடைசி பந்தி என்பதால், காய்கறிகளுடன், வெந்த புளிக்கூட்டு கிடைக்காமல் போயிற்று. கடைந்த பருப்பில், உப்பு, மிளகு கூட்டி, நறுமணத் தழையிட்ட ரசம் வார்க்கப்பட்டது.

அந்த உணவு, மன்னர் மனதில் நிறைவை ஏற்படுத்தவில்லை; உடன் வந்த வீரர் முகங்களிலும், பசி தீர்த்த அடையாளம் தெரியவில்லை. உணவில் மாற்றம் செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

அரண்மனை திரும்பிய மன்னர், அன்னச்சத்திரத்தில் பரிமாறிய உணவைப்பற்றி, அமைச்சர்களுடன் விவாதித்தார். சத்திர நிர்வாகத்தை சீரமைக்க ஆலோசனை கேட்டார்.

'ஒவ்வொரு நாளும், யாராவது ஆய்வு செய்யலாம்...' என்று, ஒரு அமைச்சர் கூறினார்.

'உணவுப் பொருட்களை இங்கிருந்தே அனுப்பலாமே...' என்றார் ஒருவர்.

'காய்கறிகள் போதிய அளவு புத்தம் புதிதாக கிடைக்க செய்ய வேண்டும். அப்படி செய்தால், உணவில் ருசி கூடும்...' என்ற யோசனையும் வந்தது.

'சமையற்காரர்களை மாற்றி விட்டால் என்ன...' என்பது உட்பட, பல யோசனைகள் கூறப்பட்டன. அவை பற்றி சிந்தித்த மன்னர், எந்த ஆலோசனையும் சொல்லாத அமைச்சர் கருணாகரனிடம், 'தாங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை...' என்று வினவினார்.

புன்னகைத்த கருணாகரன், 'அனைவர் சொல்வதிலும், உண்மை இருக்கிறது; ஏதோ, ஒன்று குறைவாக இருக்கிறது. அதை சரி செய்தால் தான் சத்திரத்தின் உணவு, சரித்திரம் படைக்கும் என்று தோன்றுகிறது மன்னா...' என்றார்.

இதை கேட்டு உற்சாகம் அடைந்த மன்னர், 'என் மனதில் உறுத்திய கேள்வியும் இதுதான்; என்ன செய்யலாம்...' என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

அந்நேரம், சுவையான சூடான கலவைக் கூழ், அரண்மனை தர்பாருக்கு கொண்டு வரப்பட்டது. அதன் மணம், பசியை துாண்டியது; அங்கு வந்த அரசி, விருந்தோம்பி பரிமாறினார்.

வீரதளபதி மல்லன், எந்த கூச்சமுமின்றி, கூழை உறிஞ்சி சுவைத்து பருகினான்; மன்னர் முன்னிலையில் மற்றவர்கள், ஆசையை அடக்கி அருந்தினர்.

மல்லன் கூழ் அருந்திய காட்சியை, அமைச்சர் கருணாகரன் ரசித்தார். அவர் சிந்தையில் பொறி தட்டியது. அன்னசத்திரத்தின் குறை நீக்கும் வழி பிறந்ததாக மகிழ்ந்தார்.

மறுநாள் -

அரண்மனை அறிவிப்பாளன், 'புதிய அன்னச்சத்திரத்தில், சிறப்பு விருந்து நடைபெற இருக்கிறது. அனைவரும் விருந்துண்ண வர வேண்டும்... இது மன்னரின் அன்புக்கட்டளை...' என்று நாடு முழுவதும் அறிவித்தான்.

மகிழ்ச்சியோடு சென்றனர் மக்கள். சத்திரவாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டதும், பசி அடங்கி, உயிர் ஒடுங்கிப் போயினர் மக்கள். அனைவரையும் திடுக்கிட வைத்த அந்த அறிவிப்பு...

- தொடரும்...

கண்ணப்பன் பதிப்பகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us