PUBLISHED ON : மே 16, 2014

ஒரு காட்டில் உயரமான மரத்தின் கிளைகள் ஒன்றில் கூடுகட்டி, புறா ஒன்று தன் குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது.
ஒருநாள்-
அந்த வழியாகச் சுற்றி அலைந்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, மரத்தின் உச்சியில் புறா தன் குஞ்சுகளோடு இருப்பதைக் கவனித்தது.
புறாக்களின் குஞ்சுகளை ருசி பார்க்கவேண்டும் என்ற ஆசை குள்ளநரிக்கு உண்டானது. அதன் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே குள்ளநரியின் மூளையில் ஒரு தந்திரம் உருவானது.
மரத்தின் அடியில் வந்து நின்ற குள்ளநரி, ''ஏ! புறாவே! மரியாதையாக உன் குஞ்சு களில் ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விடு. இல்லையென்றால் நானே மேலே ஏறிவந்து எல்லாக் குஞ்சுகளையும் தின்றுவிடுவேன்,'' என்று மிரட்டியது குள்ளநரி.
தாய்ப்புறா, குள்ளநரியின் மிரட்டலுக்குப் பயந்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது.
''ஐயோ! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்'' என்று புறா கதறியது. அதன் கதறல் காடெங்கும் எதிரொலித்தது. ஆனால், புறாவின் கதறலை எந்தப் பறவை யும் தங்களது காதில் போட்டுக் கொள்ள வில்லை.
புறா பயப்படுவதைக் கண்ட குள்ளநரி, புறாவை மேலும் பய முறுத்தத் தொடங்கியது.
''ஏ! புறாவே இன்னும் ஒரு நிமிடத்தில் ஒரு குஞ்சை என்னிடம் நீ ஒப்படைக்கவில்லை என்றால், நானே வந்து உன்னையும் உன் குஞ்சுகளையும் தின்றுவிடுவேன். என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. வீணாக எனக்கு எரிச்சல் மூட்டாதே,'' என்று மிரட்டியது குள்ளநரி.
அப்போது...!
அந்த மரத்தை நோக்கிக் காகம் ஒன்று பறந்து வந்து, புறாவின் அருகில் உட்கார்ந் தது. காகத்திடம் தனது நிலைமையை விளக்கியது புறா.
புறாவின் பரிதாப நிலைமையைக் கேட்டறிந்த காகம், ''புறாவே! உன்னுடைய நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால், குள்ளநரியோ வலிமையானது; அது, தான் நினைத்ததை நடத்திக் காட்டிவிடும். எல்லாக் குஞ்சுகளையும் இழப்பதற்குப் பதிலாக, ஒரு குஞ்சை அதனிடம் போட்டு விடு,'' என்று வஞ்சகமான அறிவுரை கூறியது.
வேறு வழியில்லாத நிலையில் தாய்ப் புறா, கதறியபடியே ஒரு குஞ்சை எடுத்துக் கீழே போட்டுவிட்டது. குள்ளநரி அந்தக் குஞ்சைக் கவ்விக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஓடியது.
குஞ்சைப் பறிகொடுத்த தாய்ப்புறா ஓலமிட்டு அழுதது. அங்குமிங்கும் தாவித் தாவிப் பறந்து அழுது புலம்பிக்கொண்டு இருந்தது.
அப்போது...!
சற்று தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த அழகான காட்டு மயில் ஒன்று, புறாவின் வேதனைக் குரலைக் கேட்டு, அங்கு வந்தது.
''புறாவே! எதற்காக நீ அழுது கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று மயில் கேட்டது.
புறா, தனது சோகக் கதையை மயிலிடம் கூறியது.
''புறாவே! உலகம் புரியாதவளாக நீ இருக்கிறாயே... குள்ளநரி மரம் ஏறியதாக சரித்திரம் உண்டா? நீ முட்டாள் போல நடந்து கொண்டு, உன் அருமைக் குழந்தையை இழந்து விட்டாயே... உனது ஏமாளித்தனம் தெரிந்துதான் காகமும் தனது வஞ்சக புத்தியைக் காட்டியிருக்கிறது. உன் மீது அதற்குள்ள பொறாமையால், உன்னைப் பழி தீர்த்துக்கொண்டது,'' என்று கூறியது மயில்.
''மயிலக்கா! நாளையும் அந்தக் குள்ள நரி வந்தால் நான் என்ன செய்வது?'' என்று கேட்டது புறா.
''பயப்படாதே! குள்ளநரியினால் மரத்தின் மீது ஏறி வந்து உன்னுடைய குஞ்சுகளைத் தின்ன முடியாது!'' எனவே, நீ தைரியமாகக் கூற வேண்டியது இதுதான்!
''குள்ள நரியே! என் குஞ்சுகளை நான் கீழே போட மாட்டேன். முடிந்தால், நீ மரத்தின் மீது ஏறிவந்து குஞ்சுகளை எடுத்துச் செல்! என்று கூறிவிடு,'' என்று யோசனை கூறியது மயில்.
மறுநாள்...!
குள்ளநரி வந்து மரத்தின் கீழே நின்றது. மரத்தின் உச்சியில் இருந்த புறாவைப் பார்த்து, கம்பீரமாக, ''புறாவே! நேற்றுப் போலவே, இன்றும் ஒரு குஞ்சை எடுத்துக் கீழே போட்டுவிடு. இல்லையெனில், நானே மரத்தின் மீது ஏறி வந்துவிடுவேன்,'' என்று மிரட்டியது.
இதைக் கேட்டதும் புறா, மிகுந்த தைரியத்தோடு, ''உன்னால் முடிந்தால் மரத்தின் மீது ஏறி வந்து, என் குஞ்சுகளைப் பிடித்துக் கொள்,'' என்று குள்ள நரியைப் பார்த்துக் கூறியது.
தன்னுடைய தந்திரம் பலிக்காததை அறிந்த குள்ளநரி, புறாவைப் பார்த்து, ''அழகான புறாவே! உனக்கு இந்த ரகசியத்தைச் சொன்னது யார்?'' என்று கேட்டது.
குள்ளநரியினால் இனி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொண்ட புறா, சந்தோஷ மிகுதியால் கொஞ்சமும் யோசிக்காமல், ''அதோ நிற்கிறதே, அந்த மயில்தான் சொல்லிக் கொடுத்தது!'' என்று கூறியது.
உடேன குள்ளநரி, மயிலைப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் அதன் அருகே சென்று, ''அழகான மயிலே! புறாவுக்கு இப்படியொரு திட்டத்தை நீ கூறியுள்ளாய், உன்னுடைய அறிவுக் கூர்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன்,'' என்று பேச்சை ஆரம்பித்தது.
அப்போது...!
திடீரென்று சுழற்காற்று வீசியது. காற்றில் புழுதி பறந்தது. புழுதி தன் கண்களில் விழாமல் இருக்க, குள்ளநரி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. சற்று நேரத்தில் காற்று நின்று, புழுதியும் ஓய்ந்து விட்டது.
அப்போது மயிலின் அருகே சென்ற குள்ளநரி, ''அழகான மயிலே! இதுபோல, காற்றில் புழுதி வீசும் வேளையில், நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டது.
''என் முகத்தை இறக்கைகளின் அடியில் புதைத்துக் கொள்வேன்,'' என்று மயில் கூறியது.
''அப்படியா? அது எப்படி முடியும்? உன் இறக்கைகளுக்கும் முகத்திற்கும் இடையில் இடைவெளி அதிகம் இருக்கிறதே,'' என்று சொல்லி ஆச்சரியத்துடன் கூறியது நரி.
''செய்து காட்டட்டுமா? என்ற கூறியவாறே, மயில் அவ்வாறு செய்யத் தொடங்கியது. மயில் தனது முகத்தை இறக்கைகளுக்குள் புதைக்கும் போது, அதனைக் கவ்விப் பிடிக்கக் குள்ளநரி சமயம் பார்த்து நின்றுகொண்டிருந்தது.
அப்போது-
அங்கே உருவாகப் போகும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த புறா, ''மயிலக்கா! அப்படிச் செய்யாதீங்க. நரி உங்களைக் கவ்விப் பிடிக்கத் திட்டம் போட்டுள்ளது... அதோ அங்கே காட்டு நாய்கள் ஓடி வருவதைப் பாருங்கள்,'' என்று கத்தியது.
காட்டு நாய்கள் என்ற குரல் காதில் விழுந்த அடுத்த நிமிடம்... தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தது குள்ளநரி.
தனது உயிரைக் காப்பாற்றியும், தனது முட்டாள் தனத்தைத் தனக்கும் உணர்த்திய புறாவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டது மயில்.
***
