PUBLISHED ON : ஜூன் 06, 2020

எட்டுக்கால் பூச்சிக்கு, எத்தனை கால்கள் என்றால் விடை எளிது; எத்தனை கண்கள் என்றால் தடுமாற்றம் ஏற்படும். இதற்கும் விடை, எட்டு தான்.
சிலந்திக்கு, விஷப்பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. உடல், இரு பகுதியாக காணப்படுகிறது. மிகவும், நுண் அறிவுள்ளது.
வலை பின்னுவது, அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தான். இதற்கு முக்கிய காரணம் உண்டு; இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்க இந்த நேரத்தில் மட்டுமே வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
வலை வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ தான் இருக்கும். இவற்றுக்கு, உணர்வுக் கொம்புகளோ, இறக்கைகளோ கிடையாது என்பதால், விலங்கியல் ஆய்வாளர்கள், பூச்சியினத்தில் சேர்ப்பதில்லை; சொல் வழக்கில் பூச்சி என்பது நிரந்தமாகி விட்டது. ஆண் பூச்சியை விட, பெண் பூச்சி உருவம், எடையில் பெரியதாக இருக்கும்.
சிலந்தியின் வயிற்றின் அடியில், இரண்டு சுரப்பிகள் உள்ளன; இவை சுரக்கும் திரவத்தால் தான், வலை பின்னுகிறது. இந்த திரவத்தின் மீது காற்று பட்டவுடன், மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது.
இரண்டு சுப்பிரகளிலிருந்து வெளியேறும் திரவம் வெவ்வேறு தன்மை உடையவை. ஒரு சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தினால் அமைந்த வலையில் பூச்சிகள் விழுந்தால் ஒட்டிக் கொள்ளும்; இன்னொன்றில் ஒட்டிக் கொள்ளாது.
இதனால் தான், பூச்சிகள் விழுந்ததும் தத்தளிக்கின்றன. விழுந்த இரை மீது விஷத்தைப் பாய்ச்சி கொன்று விடும் சிலந்தி.
தோட்டங்களிலும், காடுகளிலும் சிலந்திகள், பெரும்பாலும் வலைக்கு வெளியே, இரையை எதிர்நோக்கி காத்திருக்கும்; வீட்டுச் சிலந்திகள் வலைக்குள்ளேயே காத்திருக்கும்.
சிலந்திகளில் கடும் விஷத்தன்மை உடையவை உண்டு; ப்ளேக் விடோ, ப்ரவுன் ரெக்கள்ஸ் என்ற சிலந்திகள் கடித்தால் விஷம் ஏறும்; இத்தகைய விஷச்சிலந்திகள், வட, தென் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.
