தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மதிப்புள்ள சொத்து!

மதிப்புள்ள சொத்து!

மதிப்புள்ள சொத்து!


PUBLISHED ON : ஜூன் 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், ஆசியா - ஐரோப்பிய கண்டங்களில் விரிந்த ரஷ்ய நாட்டில் உள்ள யாஸ்னாயா பால்யானா கிராமத்தில் ஆக., 28, 1828ல் பிறந்தார். பெற்றோர் நிகலஸ் இளச்சோ - மேரி.

மூன்று வயதில், தாயையும், நான்கு வயதில் தந்தையையும் இழந்தார். குழந்தைப் பருவ அனுபவத்தை தொகுத்து எழுதி, 'காண்டம்பரரி' என்ற பத்திரிகைக்கு, 24ம் வயதில் அனுப்பினார்.

அது, 'குழந்தை பருவம்' என்ற தலைப்பில் தொடராக பிரசுரமாகி, மகத்தான வரவேற்பைப் பெற்றது. பின், 'இளமைப் பருவம்' என்ற நுாலை எழுதினார். இதுவும், வாழ்க்கை அனுபவத்தால் படைக்கப்பட்டது. பெரும் புகழ்பெற்றது.

டால்ஸ்டாய் எழுதிய, 'போரும் அமைதியும்' என்ற புதினம், 5,000 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. உலக அளவில் முதன்மை நுாலாக கருதப்படுகிறது.

அவர் எழுதிய, 'அன்னா கரேனினா' என்ற புதினமும் உலக அளவில் புகழ் பெற்றது. இவை, உலகின் பல மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளன; லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்துள்ளன.

டால்ஸ்டாய் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி, 'என் வழிகாட்டி...' என, நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய புரட்சித்தலைவர் லெனின், 'டால்ஸ்டாய், ரஷ்யாவின் ஆன்மா' என்று பதிவு செய்தார்.

இத்தகைய சிறப்பு பெற்ற மாமேதையை சந்திக்க, ஓர் இளைஞன் வந்தான். எதுவும் பேசாமல் அவர் முன் தலை கவிழ்ந்து இருந்தான். அவனிடம், 'என்னைத் தேடி வந்த காரணம் என்ன...' என்று கேட்டார் டால்ஸ்டாய்.

அந்த இளைஞன், 'ஐயா... எவரிடமும் யாசகம் பெற்று வாழ விரும்பாதவன் நான். ஒரு தொழில் செய்து முன்னேற விரும்புகிறேன். அதற்கு மூலதனமின்றி தவிக்கிறேன்; கொடுத்து உதவ, யாரும் முன் வரவில்லை; உங்களிடம் பணமும், உதவும் மனமும் இருக்கிறது. எனக்கு சிறிது மூலதனம் கொடுத்தால், தொழிலில் கிடைக்கும் லாபத்தில், திருப்பி தந்து விடுவேன்...' என்றான்.

சிரித்த டால்ஸ்டாய், 'தம்பி... உழைத்து வாழ வேண்டும் என்ற உன் எண்ணத்தை பாராட்டுகிறேன். அதே நேரத்தில், எதையாவது அடமானம் தந்தால் தானே பணம் கொடுக்க முடியும். கொடுக்க, என்ன வைத்திருக்கிறாய்...' என்றார்.

'எதுவுமில்லையே... இருந்திருந்தால் உங்களிடம் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே...'

'அப்படியா... சரி! உன்னிடம் இருக்கும் ஒன்றை கேட்கிறேன்; கொடுத்து விட்டு, அதற்கு இணையான பணத்தைப் பெற்றுக் கொள்...' சம்மதித்தான் இளைஞன்.

'உன் சுண்டு விரலைக் கொடு; அதற்கு ஈடான பணத்தை தருகிறேன்...'

மிரட்சியுடன், 'சுண்டு விரலா...' என்றபடி திகைத்து நோக்கினான்.

'சுண்டு விரலை தர விரும்பவில்லை என்றால், உன் கண்களில் ஒன்றை கொடு... அதற்கு ஈடாக பணம் தருகிறேன்...' என்றார் டால்ஸ்டாய்!

அதிர்ச்சியில் நிலைகுலைந்த இளைஞன், புறப்பட தயாரானான்.

அவனை நிறுத்தி, 'பயந்து விட்டாயா... உன்னை ஊனமாக்கும் எண்ணம் எனக்கில்லை... உதவும் விதமாகத்தான், அப்படிக் கேட்டேன். விலை மதிக்க முடியாத பல உறுப்புகள் உன்னிடம் இருக்கின்றன. அவைதான் வாழ்க்கைக்கு மூலதனம். அவற்றைப் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்...

'கண், காது, கை, கால் மற்றும் அறிவு என, மதிப்பு மிக்க மூலதனங்கள் இருந்தும், அவற்றின் அருமை புரியாமல், பணம் என்ற மூலதனத்தை தேடி அலைகிறாய். பணத்தால் வெற்றிப்படிகளில் ஏற முடியாது...' என்று அறிவுரைத்தார் டால்ஸ்டாய்.

இளைஞன் முகத்தில் பிரகாசம்.உண்மையை உணர்ந்த தெளிவு. அடுத்த நொடி நன்றி கூறி, சாதிக்கும் திசை நோக்கி நடந்தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us