தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒன்றை மட்டும்!

ஒன்றை மட்டும்!

ஒன்றை மட்டும்!


PUBLISHED ON : பிப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது இயற்கையான சூழலில் அமைந்த ஒரு குருகுலம். அங்கே பல சீடர்கள் தங்கி கல்வி பயின்றனர்.

குரு கண்டிப்பானவர். தத்துவங்கள் போதிப்பதில் வல்லவர். அதனால் சீடர்கள், அவரிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டனர்.

பாடம் நடத்துவதில் குரு ஒரு விஷயத்தைப் பின்பற்றுவார். ஒரு நாளைக்கு ஒரே ஒரு பாடம் மட்டும் நடத்துவதே அந்த முறை. அதைச் சீடர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி நடத்துவார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல பாடங்களை நடத்துவதை அவர் விரும்பவில்லை. சீடர்களுக்கும் அந்த அணுகுமுறை பிடித்திருந்தது.

ஆனால், ஒரே ஒரு சீடனுக்கு அந்த முறை பிடிக்கவில்லை. ஒருமுறை நடத்திய பாடத்தையே திரும்ப, திரும்ப அவர் நடத்துவதை அவன் வெறுத்தான். குருவின் மேல் அவனுக்குக் கோபம் கூட வந்தது.

ஒருநாள் அவன் தன் எண்ணத்தை குருவிடம் வெளிப்படுத்தியே விட்டான்.

''குரு அவர்களே! ஒரே பாடத்தை திரும்பத் திரும்பக் கேட்பதால், அது மனதில் நன்கு பதியும் என்பது உண்மைதான். அதே சமயம் அது சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரு நேரத்தில் பல விஷயங்களைப் பலவிதமான உதாரணங்களுடன் கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும் அல்லவா!'' என்றான் அந்த சீடன்.

குரு அவனை அமைதியாகப் பார்த்தார்.

எழுந்து தோட்டத்தின் மூலைக்குப் போனார். பெரிய பஞ்சாரக் கூடையைத் திறந்து விட்டார். உள்ளே அடைக்கப் பட்டிருந்த பத்து கோழிகள் விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின.

''அந்தப் பத்துக் கோழிகளையும் பிடித்து வா!'' என்று அந்த சீடனுக்குக் கட்டளையிட்டார் குரு.

''அவ்வளவுதானே! இதோ ஐந்து நிமிடத்தில் பிடித்துக் கொண்டு வருகிறேன்!'' என்று சொல்லி விட்டுக் கோழிகளைத் துரத்திக் கொண்டு ஓடினான்.

ஆள் துரத்துவதைக் கண்டதும், கோழிகள் சிதறி பல திசைகளில் ஓடின.

சீடன் விடாமல் அவற்றைத் துரத்தினான்.

கோழிகள் சிக்கவில்லை.

சீடனும் விடவில்லை.

நேரம் ஓடியது.

ஓடி ஓடி ஒரு கோழியைக் கூடப் பிடிக்க முடியாமல் களைத்துப்போனான் சீடன்.

குரு பார்த்தார்.

'' அந்தக் கறுப்பு நிறக் கோழியை மட்டும் பிடி!'' என்றார்.

சீடன் அந்த கறுப்பு நிறக் கோழியை நோக்கிப் பாய்ந்தான். அதையே குறி வைத்து விரட்டினான். கறுப்பு நிறக் கோழி களைத்தது. சில நிமிடங்களிலேயே சீடன் அதை அமுக்கிப் பிடித்தான்.

அவன் முகத்தில் புன்னகை.

குரு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

''ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. அதில் வெற்றி கிடைக்கும். ஒருநேரத்தில் பல செயல்களைப் பின்பற்றினால் எல்லாக் கோழிகளையும் பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது போல, எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!'' என்றார்.

சீடன் தன் தவறினை உணர்ந்தான்.

குருவின் கல்வி முறை அப்போதுதான் அவனுக்குத் தெளிவானது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us