தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உனக்கு பெப்பே!

உனக்கு பெப்பே!

உனக்கு பெப்பே!


PUBLISHED ON : செப் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகரில் நீலமேகம் என்பவன் இருந்தான். ஊதாரியாக இருந்த அவன் பலரிடம் கடன் வாங்கினான்.

கடன்காரர்கள் அவனிடம் கடன் கேட்கும் போது, ''இன்று தருகிறேன், நாளை தருகிறேன்,'' என்று காலம் கடத்தி வந்தான்.

பொறுமை இழந்த அவர்கள், ''கடனை ஒரு மாதத்திற்குள் திரும்பித் தர வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் பொல்லாதவர்களாகி விடுவோம்,'' என்று மிரட்டினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க, அவனுக்கு ஒரு வழியும் தோன்றவில்லை.

நண்பன் மோகனை சந்தித்த அவன், ''கடன்காரர்கள் என்னை நெருக்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நீதான் நல்ல வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினான்.

சிந்தனையில் ஆழ்ந்த மோகன், ''என்னிடம் வாங்கிய கடனை முதலில் தா. மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க வழி சொல்கிறேன்,'' என்றான்.

''என் நண்பன் நீ. உன்னை நான் ஏமாற்றுவேனா? இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி சொல். தப்பித்ததும் என் நிலத்தை விற்று, உன் கடனை அடைக்கிறேன். என்னை நம்பு,'' என்றான்.

''பைத்தியம் போல நடி. யார் என்ன கேட்டாலும் 'பெப்பே' என்று உளறிக் கொண்டிரு. உன்னைப் பைத்தியம் என்று எல்லாரும் நம்ப வேண்டும். அவர்கள் உன்னிடம் கடன் கேட்பதை விட்டு விடுவர்,'' என்றான் மோகன்.

மோகன் சொன்ன மாதிரியே, பைத்தியம் போல நடிக்கத் தொடங்கினான் நீலமேகம்.

கடன்காரர்கள் அவனிடம் பணம் கேட்கும்போது, 'பெப்பே' என்றே உளறிக் கொண்டிருந்தான்.

கடன்காரர்களுக்கு அவனிடம் இருந்து எப்படிப் பணத்தை வாங்குவது என்று தெரியவில்லை.

நீதிமன்றம் சென்ற அவர்கள், ''நாங்கள் அனைவரும் நீலமேகத்திடம் கடன் கொடுத்தோம். அந்தப் பணத்தை வாங்கித் தரவேண்டும்,'' என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.

நீலமேகத்தை நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதி, ''இவர்களிடம் நீ கடன் வாங்கினாயா?'' என்று கேட்டார்.

வழக்கம் போல அவன், ''பெப்பே'' என்றான்.

அவர் என்ன கேள்வி கேட்டாலும், ''பெப்பே'' என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.

கோபம் கொண்ட அவர், ''பைத்தியத்தை நம்பி யாராவது கடன் கொடுப்பார்களா? உங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்,'' என்று கத்தினார்.

கடன்காரர்கள் தொல்லை விட்டது என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான் நீலமேகம்.

''நான் சொன்னது போலப் பைத்திய மாக நடித்து எல்லோரையும் ஏமாற்றி விட்டாய். என் கடனை வட்டியுடன் எப்போதும் தரப் போகிறாய்?'' என்று கேட்டான் மோகன்.

வழக்கம் போல அவன், ''பெப்பே'' என்றான்.

அதிர்ச்சி அடைந்த மோகன், ''எனக்கும் பெப்பேவா?'' என்று கேட்டான்.

''உனக்கும் பெப்பேதான். உங்கப்ப னுக்கும் பெப்பேதான்,'' என்று சொல்லிச் சிரித்தான் நீலமேகம்.

'பிறரை ஏமாற்ற வழி சொன்னேன். இப்போது நானே ஏமாந்து நிற்கிறேனே' என்று வருந்தினான் மோகன்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us