PUBLISHED ON : ஜூன் 10, 2023

பழையாறை நாட்டில் முடி திருத்தும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார் சுப்பன்; அந்நாட்டின் மன்னனுக்கும் முடி திருத்தும் வேலையை செய்து வந்தார். எப்படியாவது செல்வந்தன் ஆகிவிட வேண்டும் என ஆசைப்பட்டார்.
அன்று மன்னனுக்கு முடி திருத்திய பின், காட்டுபாதையில் நடந்து கொண்டிருந்தார் சுப்பன். ஆள் நடமாட்டம் இல்லை. ஒரு குரல் அசரீரியாக, 'உனக்கு, 10 பானை தங்கம் வேண்டுமா...' என்று கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி பயத்துடன் பார்த்து, 'ஆமாம் வேண்டும்...' என்றார் சுப்பன்.
'வீட்டிற்கு சென்றதும் பார்...' என்றது அசரீரி.
வீட்டுக்கு சென்ற போது வியப்பு காத்திருந்தது. பானை முழுதும் தங்கக் காசுகளும், நகைகளும் ஜொலித்தன. மனைவியிடம் விபரம் கூறி வியந்தார். பானையில் இருந்த தங்கத்தை கையால் வருடி மகிழ்ந்தவர் அங்கிருந்த எல்லா பானைகளையும் பார்த்தபடி வந்தார். கடைசி பானையில் மட்டும் தங்கம் சற்று குறைவாக இருந்தது.
இதை கண்டதும் மனம் வருந்தியபடி, 'இந்த பானையை எப்படியாவது நிரப்பி விட வேண்டும்' என எண்ணினார். வீட்டில் இருந்த நகை, தங்கக் காசுகளை அதில் போட்டு பார்த்தார்; அப்போதும், பானை நிரம்பவில்லை.
'எப்படியேனும் பானையை நிரப்பியாக வேண்டும்'
பேராசை எழுந்தது. பானையை நிரப்பும் நோக்கில் முடித்திருத்தும் கட்டணத்தை அதிகப்படுத்தினார். மன்னரிடமும் கட்டண உயர்வை கூறி பெற்றார்.
உண்ணாமல், உறங்காமல் சம்பாதித்த பணத்தில் தங்க காசுகளை வாங்கி பானையில் கொட்டி நிரப்ப முயற்சி செய்தார். எவ்வளவு அள்ளி அள்ளி போட்ட போதும், அந்தப் பானை மட்டும் நிரம்பவே இல்லை. நாளடைவில் மகிழ்ச்சி பறிபோனது; சோகம் கவ்விக் கொண்டது. அந்தப் பானையை நிரப்புவது ஒன்றே சிந்தனையாக இருந்தார் சுப்பன்.
அன்று முடி திருத்திய போது, 'ஏனப்பா... சுறுசுறுப்பு, மகிழ்ச்சி எல்லாம் எங்கு தொலைத்தாய்; நீ கேட்டப்படி முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்தி தந்துள்ளேன்; அப்படியும் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறாய். உன்னிடமும் ஏதாவது, தங்க பானை சிக்கி விட்டதா...' என கேட்டார் மன்னர்.
காட்டில் நடந்த நிகழ்வை எடுத்துரைத்தார் சுப்பன்.
'அந்தப் பானைகள் யட்சனுடையது; தந்திரமாக தங்கத்தை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்... என்னிடம் கேட்டபோது தவிர்த்துவிட்டேன்; அறியாமல் மாட்டிக் கொண்டாய் நீ; அந்த பானைகளை திருப்பிக் கொடுத்து விடு...' என்றார் மன்னர்.
கட்டளையை மதித்து, 'தங்கப் பானைகளை திருப்பி எடுத்துக் கொள்...' என கூறியபடி, வீட்டை நோக்கி நடந்தார் சுப்பன். கடினமாக உழைத்து சேர்த்த தங்கக் காசுகளுடன்,பேராசையும் மாயமாக மறைந்தது.
குழந்தைகளே... பேராசையால் பெருநஷ்டம் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
- எம்.ஏ.நிவேதா
