PUBLISHED ON : மார் 17, 2017

சென்றவாரம்: இம்புலியிடம், தலைவனாக நடிக்க சொல்லி, கூட்டாளியிடம் தெரிவித்தான் கமால். இதை இம்புலி தற்செயலாக கேட்க நேர்ந்தது. இனி -
''வேணாம்டா... உடனே கூட்டிட்டு வர வேண்டாம். கொஞ்ச நேரம் போகட்டும். அப்ப தான், நீ தலைவர்கிட்ட பேசுறன்னு நினைச்சிட்டு இருப்பான். அவன் வந்ததும், முதல்ல உன்கிட்ட அறிமுகப்படுத்தி வைச்சிட்டு, நான் மெல்ல அந்த அறை ஓரத்துல பதுங்கிக்கிறேன்...
''நீ உடனே, 'வாப்பா இம்புலி... இப்படி என் பக்கத்துல உக்காந்து பிரச்னைய சொல்லு... யாரால இந்த சிக்கல் வந்துச்சுன்னு விபரமா சொல்லு... அந்த சிக்கல நல்லபடியா, உனக்கு சாதகமா தீர்த்து வெச்சுடறேன். எனக்கு, நயா பைசா தர வேணாம். உன்னை பத்தி கமால் நிறைய சொல்லி இருக்கிறான். அவன போல, நீயும் ஒரு தம்பி தான்னு' அன்பொழுக சொல்.
''அச்சமயம், கையாட்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து, உன்னை அடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணி, 'நீ கமால் கமால்' என்று கத்தியபடி, கீழே விழு... இம்புலியை அடித்து நொறுக்கி, அவன் இடுப்பில் மறைத்து வைத்திருக்கிற பணம் அத்தனையும் உருவி எடுத்து, அவன் கை, கால்களையும் வாயையும் இறுகக்கட்டி, மாளிகையின் பின்புறம் உள்ள புதரில் போட்டுவிடுவர்.
''இரவு நேரத்தில், அக்காட்டில் உலாவும் காட்டு பன்றிகளுக்கோ, நரிகளுக்கோ இரையாகி விடும் அவனது உடல். வழக்கப் படி, அவன் வைச்சிருந்த பணத்தை, நாம இரண்டு பேரும் பங்கு போட்டுக்கலாம். எப்படி என் திட்டம்...'' என்றான் கமால்.
''அட... அற்புதம்'' என்றான் கமாலின் கூட்டாளி.
இவர்களின் அட்டகாசமான சிரிப்பை ஜன்னலுக்கு பின் நின்று கேட்டு கொண்டிருந்த இம்புலி அதிர்ந்து போனான்.
'தெய்வமே! இங்கிருந்து நான் எப்படி தப்பிப்பேன்' என்று குழம்பியவன், சட்டென்று தன்னை நிமிர்த்தியபடி, மாளிகை வாயிலை நோக்கி ஓடினான்.
உயிருக்கு பயந்து, திக்குதிசை தெரியாமல், நெஞ்சம் படபடக்க, மரண பயத்தில், 'வஜ்ரவேல் வீட்டிற்கு எப்படிப்போவது; யாரை அணுகுவது; இந்த இரவு நேரத்தை எங்கே செலவழிப்பது... தெய்வமே... என்னை காப்பாற்றி, சின்னியிடம் சேர்த்துவிடு...' என்று வேண்டியபடியே ஓடிய இம்புலிக்கு, தூரத்தில் ஒரு வீடு தெரிந்தது.
'இனி, ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது...' என்று கெஞ்சும் கால்களை நீவிவிட்டுக்கொண்டே, அந்த வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தான். மரண பயத்தில், அப்படியே கண்களை மூடி தியானித்தான்.
சில நிமிடங்களுக்கு பின், கண்களை திறந்த போது, அந்த சுவற்றில், 'வஜ்ரவேல்' என்ற பெயர் எழுதப்பட்ட மரப்பலகையை பார்த்தான்.
''வஜ்ரவேல்... வஜ்ரவேல்... கதவை திறடா,'' என்று கூக்குரலிட்டு, கதவை ஓங்கி தட்டினான்.
''யாரது... இந்த இரவு நேரத்துல வந்து, இப்படியா கதவை தட்டுவது...'' அதட்டிய படியே கதவை திறந்தாள், வஜ்ரவேலுவின் அம்மா.
''அம்மா! அம்மா! நா தான் இம்புலி. சீக்கிரம் கதவைத்திறங்கம்மா... என்னை கொல்ல வராங்கம்மா,'' என்று கதறியபடி, கதவு முழுமையாக திறக்கப்படும் முன்பே, 'சடார்' என்று கதவை திறந்து, உள்ளே ஓடினான்.
வஜ்ரவேலுவின் அம்மாவிற்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. உள்ளே திரும்பியவளின் கால்களில் விழுந்து, ''அம்மா! வாயிற்கதவை மூடுங்கள். என்னை தேடிப்பிடித்து கொல்ல, அந்த கமாலும், அவன் நண்பனும் வராங்கமா. என்னைக் காப்பாத்துங்க...'' என்று கதறினான்.
''பயப்படாதடா... இம்புலி! இந்த வீட்டுக்குள்ள நுழைய, யாராலும் முடியாது. முகத்தை தொடச்சுட்டு நாற்காலியில உக்காரு...'' என்று சொல்லி, உள்ளே சென்று, தண்ணீருடன் திரும்பினாள்.
''இந்தா இத குடி... ஏதோ, காத்தோ, கருப்போ உன்னை அடிச்சிருக்கு... அதனால் தான், இப்படி அரண்டு போய் உளருற... உன்னை யாரும் கொல்லமாட்டாங்க. நாங்க இருக்கும்போது உனக்கு என்ன பயம்...'' என்று சொல்லி, நடுங்கும் கரங்களை பற்றி ஆறுதல் கூறினாள்.
ஆயினும் அவன் விசும்பல் நிற்கவில்லை; உடல் நடுக்கமும் நிற்கவில்லை. ஆயிரம் முறை, 'வஜ்ரவேலு எப்ப வருவான்... வஜ்ரவேலு எப்ப வருவான்...' ன்னு கேட்டு கொண்டே இருந்தான்.
சில நிமிடங்களுக்கு பின், உள்ளே வந்தான் வஜ்ரவேலு.
தன் மகனை கண்டதும், அவன் அம்மாவிற்கு பெரிய நிம்மதி.
''எதையோ கண்டு அரண்டு போயிருக்கான் இம்புலி. 'என்னை கொல்ல வர்றாங்க... கொல்ல வர்றாங்க...' ன்னு சொல்லி கிட்டே இருக்கான். அவனிடம் என்னவென்று பக்குவமாக கேள்...'' என்றாள்.
''பயப்படாத இம்புலி... நான் தான் வந்துட்டேன்ல... உன்னை கொல்ல எந்த கொம்பனாலும் முடியாது...'' என்று ஆறுதல் கூறினான் வஜ்ரவேல்.
சிறிது நேரத்தில், முற்றிலும் தெளிவானான் இம்புலி.
''சரி... இப்ப சொல்லுடா... எதுக்காக இந்த ஊருக்கு வந்த; யார பார்க்க வந்த?'' என்று கேட்டான் வஜ்ரவேல்.
''நான் ஒரு சிக்கல்ல மாட்டிட்டு இருக்கேன். அது விஷயமா, உன்னை பார்க்க தான் வந்தேன். ஆனால், என் போதாத காலம், வர்ற வழில, அந்த கமால், தானே வந்து சேர்ந்துகிட்டான். ரொம்ப நல்லவன் போல நடிச்சான்; 'நீ வஜ்ரவேலுவை பாக்க வேணாம். என் தலைவர் கிட்ட கூட்டிட்டு போயி, ஐந்து நிமிஷத்துல காரியத்தை முடிச்சு தரேன்'னு ஆசைகாட்டினான்...'' என்று கூறினான் இம்புலி.
நடந்த விஷயத்தை ஒன்றுவிடாமல், வஜ்ரவேலுவிடம் சொல்லி கதறினான்.
''நீ கவலைப்படாதே... உன்னை காப்பாற்றுவது என் பொறுப்பு,'' என்று சொல்லி, அவனுக்கு தைரியமூட்டினான் வஜ்ரவேலு.
''சின்னி எனக்காக காத்துட்டு இருப்பா... நான், உடனே புறப்படணும். ஒருவேளை, என்னை தேடி, அந்த கமால் என் வீட்டிற்கு கூட ஆட்களை அனுப்பலாம். நினைக்கவே கொலை நடுங்குது. நான் உடனே ஊருக்குப் புறப்படணும்... எனக்கு துணைக்கு ஒரு ஆளை அனுப்பு,'' என்றான் இம்புலி.
''நீ சொல்வதும் சரி தான். உனக்கு பாதுகாப்பாக என்னுடைய, இரண்டு ஆட்களை அனுப்புகிறேன். அவர்களை நீ உன்னுடனேயே வைத்துக்கொள். அந்த கமாலையும், அவன் நண்பனையும் என்ன செய்வது என்று எனக்கு தெரியும்,'' என்றான்.
சமாதானமடைந்த இம்புலி, தான் கொண்டுவந்திருந்த சுறுக்குப் பையை எடுத்து, வஜ்ரவேலுவிடம் கொடுத்தான்.
''வஜ்ரவேல்! எக்காரணத்தை கொண்டும், இந்த பையை பிரிக்காத... சின்னியின் எதிரில் தான், இதை பிரிக்க வேண்டும். நானும், சின்னியும், நாளை மதியும் இங்கு வந்து சேருவோம். அதுவரை நீ இதை பிரிக்காதே...'' என்றான் இம்புலி.
''உன் வாக்கை நான் மீற மாட்டேன்,'' என்று சொல்லி, அதை வாங்கி, அலமாரிக்குள் வைத்து பூட்டி, சாவியை இம்புலியிடம் கொடுத்தான்.
அதன் பின், இம்புலிக்கு துணையாக, இரண்டு பலசாலிகளை அனுப்பினான் வஜ்ரவேல்.
சமஷ்டிப்பூரை நோக்கி மூவரும் பயணத்தை மேற்கொண்டனர்.
திடீரென, வானம் உறும, மேகம் கறுக்க, மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்தது. மூவரும் தொப்பலாக நனைந்து விட்டனர். ஓட்டமும், நடையுமாக ஒரு வழியாக ஊர் எல்லையை அடைந்தனர்.
''நீங்கள் இருவரும் உடனே ஊர் திரும்பி விடுங்கள். மழையின் உக்கிரத்தை பார்த்தால், பெருவெள்ளமாகி ஊரையே காவு வாங்கிவிடும் போலிருக்கிறது.
''அதோ விளக்கு வெளிச்சம் தெரிகிறதல்லவா... அது தான் என் வீடு; எனக்கு பயமில்ல; நண்பனுக்கு தான், இப்போ துணை தேவை. நீங்கள் உடனே மழை வலுக்கும் முன், ஊருக்கு திரும்பி விடுங்கள்...'' என்று வற்புறுத்த, வேறு வழியின்றி, பந்திப்பூரை நோக்கி, மழைக்கு பயந்து ஓடினர் வஜ்ரவேலின் ஆட்கள்.
அவர்களை அனுப்பிவிட்டு, தன் வீட்டு வாசலை எட்டியவன், 'ஜோ'வென்ற இரைச்சலையும் மீறி, ''சின்னி... சின்னி...'' என்று ஓங்காரமாக குரல் கொடுத்தான்.
- தொடரும்...
