தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சண்டை வரும்!

சண்டை வரும்!

சண்டை வரும்!


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு வேடன், பறவைகளை பிடிப்பதற்காக காட்டில் வலையை விரித்து வைத்திருந்தான்.

எப்போதும் இணையாக சேர்ந்து பறந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இரண்டு பறவைகள், எதிர்பாராத விதமாக அந்த வலையில் வந்து மாட்டிக் கொண்டன. அவ்வாறு சிக்கிய பறவைகள் எப்படி வெளியில் வருவது, என்று சிந்திக்க துவங்கின.

இரண்டும் ஒரே நேரத்தில் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி பறக்க முற்பட்டால், வேடனின் வலையை சுமந்த படி மேலே பறந்து போய் விடலாம். பின் வெகுதுாரம் சென்று, எப்படியாவது அந்த வலையில் இருந்து விடுதலையாகி விடலாம் என்ற முடிவுக்கு வந்தன .

அதன்படியே பறவைகள் இரண்டும் ஒரே நேரத்தில் சிறகை விரித்து பறக்க துவங்கின. வேடனின் வலையும், பறவைகளோடு சேர்ந்து போனது. பறவைகள், வலையுடன் பறந்து செல்வதை பார்த்த வேடன், பதறியவனாய், பறவைகள் பின்னாடியே அவை போகும் திசையில் ஓடினான்.

“பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. நீங்கள் தரையில் ஓடுகிறீர்கள். இதனால் என்ன பயன்... இப்படி ஓடுவதால் உங்கள் வலை எப்படி திரும்ப கிடைக்கும்?” என்று ஒருவர் கேட்டார்.

“பறவைகளுக்குள் ஒற்றுமை இருப்பதால் அவை, என் வலையை சுமந்தபடி பறக் கின்றன. அவற்றின் ஒற்றுமை குலைந்து, சண்டை நிகழும் போது வலையும், அந்த பறவைகளும் என் கைக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் ஓடுகிறேன்,” என்று சொன்னபடியே தொடர்ந்து ஓடினான் வேடன்.

அவன் எதிர்பார்த்தது போலவே பறவைகள் இரண்டும், ஆகாயத்திலேயே சண்டையிட துவங்கின.

“உன் பேச்சை கேட்டுத்தான், நான் வலையில் வந்து மாட்டிக் கொண்டேன்,” என்றது முதல் பறவை.

“நான் சொன்னால் உனக்கு புத்தி எங்கே போயிற்று... நீ ஏன் வந்தாய்... உன் விருப்பம் போல செல்ல வேண்டியதுதானே,” என்றது இரண்டாவது பறவை.

“உன் பேச்சுக்கு மதிப்பளித்து வந்ததால் தான் இந்த நிலை. நீ இதுவும் பேசுவாய், இன்னமும் பேசுவாய்,” என்று முறைத்தது முதல் பறவை.

“இப்படி பேசுபவனுடன் நான் ஏன் இனியும் பயணத்தை தொடர வேண்டும்... நான் வேறு திசையில் போகிறேன். நீ வேறு திசையில் செல்,” என்றது மற்றொரு பறவை.

இப்படியே மாறி மாறி, ஒன்றை ஒன்று குற்றம் சுமத்தி, இரண்டும் வெவ்வேறு திசைகளில் பறக்க முயற்சித்தன.

இரு பறவைகளும் வேறு வேறு திசைகளில் வலையை இழுக்க, பறக்க முடியாமல் பூமியில் விழுந்தன.

ஓடி வந்த வேடன், இது தான் சமயம் என்று நினைத்து, அப்பறவைகளை வலையோடு அள்ளி எடுத்தான். அவனுடைய வலையும் கிடைத்தது; பறவைகளும் கிடைத்தன.

பறவைகளிடம் ஒற்றுமை இல்லாததால் இப்படி மாட்டிக் கொண்டன.

குட்டீஸ்... நீங்கள் உங்கள் நண்பர்களிடம் எப்போதும் ஒற்றுமையாக இருங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us