PUBLISHED ON : பிப் 01, 2013

''அந்தக் கிழவிக்கு அரக்கன் ஒருவன் மகனாக உள்ளான். நாணல் பேரழகி பற்றி அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டேன். அவள் பழைய வடிவம் பெற மந்திர மோதிரம் தேவை. அதை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் இருவரையும் கிழவி பாறையாக்கி விட்டாள். வீட்டிற்கு வெளியே கிடக்கும் இரண்டு பாறைகள் அவர்கள்தான்,'' என்றது.
''மீண்டும் அந்த இளைஞர்கள் உயிர் பெற வழி இல்லையா?'' என்று கேட்டான் செழியன்.
''இதுவரை யாரும் தண்ணீர் அருந்தாத ஏரி ஒன்று உள்ளது. அந்தத் தண்ணீரைப் பாறைகளின் மேல் தெளித்தால், அவர்கள் உயிர் பெறுவர். விரைவில் நீ இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உனக்கு ஆபத்து ஏற்படும்,'' என்றது.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வழக்கம் போலச் சமையல் செய்த அவன், கிழவிக்கும், பூனைகளுக்கும் உணவு பரிமாறினான்.
படுக்கையில் படுத்தான். கிழவி அவன் அருகில் வந்தாள்.
''வெளியே இடியும் மின்னலுமாக உள்ளது. இடியோசை பயங்கரமாக கேட்கிறது. உன் தூக்கம் கெட்டு விடும். இந்த மெழுகை உன் காதுகளில் அடைத்துக் கொள். எந்த ஓசையும் கேட்காது. நன்றாக தூங்கலாம்,'' என்றாள்.
''பாட்டி! தூக்கம் கெடுவது எனக்கு பிடிக்காது. என் காதுகளில் நீயே மெழுகை அடைத்துவிடு,'' என்றான்.
அவனின் இரண்டு காதுகளிலும் மெழுகை அடைத்தாள். படுத்த அவன் குறட்டை விட்டுத் தூங்குவது போல நடித்தான்.
நள்ளிரவு நேரம் வந்தது. சூனிய காரிகளும், பேய்களும், பிசாசுகளும் அங்கே கூடினர். கிழவியின் மகனான அரக்கனும் அங்கே இருந்தான்.
படுத்திருந்த செழியன் மெல்ல கண் விழித்து அவர்களைப் பார்த்தான். தன் வலது காதில் இருந்த மெழுகை எடுத்தான். அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான்.
கிழவி எல்லாரையும் வரவேற்றாள்.
''ஏதேனும் செய்தி உண்டா?'' என்று கேட்டாள்.
''அம்மா! மந்திர மோதிரத்தைக் கைப்பற்ற இன்னொரு இளைஞனும் வருவதாகக் கேள்விப்பட்டேன். மோதிரத்தை எங்கே பாதுகாப்பாக வைக்கலாம்?'' என்று கேட்டான்.
''மகனே! மந்திரப் புத்தகம் இருக்கும் தங்கப் பெட்டிக்குள் மோதிரத்தை வைத்து விடு. நீ இருக்கும் இரும்பு மலைதான் பாதுகாப்பானது. யாராலும் அங்கு வர முடியாது. அப்படியே வந்தாலும் மலைக்குள் உள்ள இரும்புக் கோட்டைக்குள் நுழைய முடியாது. அங்குள்ள தங்கப் பெட்டியை அவர்கள் நெருங்கவே முடியாது.
எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். மந்திரப் புத்தகம் எரிந்தால், நீ அழிந்து விடுவாய். நம் அனைவரின் மந்திர ஆற்றலும் அழிந்து விடும்,'' என்றாள் கிழவி.
''அம்மா! நீ கவலைப்பட வேண்டாம்!'' என்றான் அவன்.
பொழுது விடியும் நேரம் வந்தது. எல்லாரும் அங்கிருந்து சென்றனர்.
நீண்ட நேரம் சென்றது. அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழிப்பது போல நடித்தான் செழியன்.
''பாட்டி! நன்றாகத் தூங்கி விட்டேன். நான் இங்கு வந்து சில நாட்களாகி விட்டன. என் ஊருக்குச் செல்ல வேண்டும்,'' என்றான்.
அவன் மீது ஐயப்படாத கிழவி, ''போய் வா,'' என்றாள்.
வெளியே வந்தான் செழியன். இளைய பூனை அவனைப் பார்த்து, '' நானும் உன்னுடன் வருகிறேன். எனக்குப் பதில் மரக் கட்டை ஒன்றை இந்தத் தூணில் கட்டிவிடு. கிழவிக்குக் கண் பார்வை தெரியாது. அவள் கண்டுபிடிப்பதற்குள் வெகு தொலைவு சென்று விடலாம்,'' என்றது.
அவனும் அப்படியே செய்தான்.
பூனை வழி காட்டிக் கொண்டே சென்றது. அவனும் அதனுடன் வேகமாக நடந்தான்.
ஏதோ ஓசை கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தது பூனை. ''அந்தக் கிழவிதான் நம்மைத் தேடிப் பறந்து வருகிறாள்,'' என்றது.
''ஐயோ! எப்படி தப்பிப்பது?'' என்று பதறினான் செழியன்.
''அங்கே உள்ள கிணற்றிற்குள் நாம் இருவரும் ஒளிந்து கொள்வோம். பார்வை சரியாகத் தெரியாத கிழவியால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது,'' என்றது பூனை.
இருவரும் அந்தக் கிணற்றிற்குள் ஒளிந்து கொண்டனர். வேகமாகப் பறந்து சென்ற கிழவி அவர்களை கவனிக்கவில்லை.
சிறிது நேரம் சென்றது-
''இனி நமக்கு ஆபத்து இல்லை,'' என்றது பூனை.
இருவரும் எங்கும் நிற்காமல் நடந்தனர்.
பல நாட்கள் பயணத்திற்குப் பின் மலைக் குகை ஒன்றை அடைந்தனர்.
''இளைஞனே! நாம் சரியான வழியில்தான் வந்திருக்கிறோம். இந்தக் குகைக்குள் மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். சூனியக்காரக் கிழவியால் கொடுமையாகப் பழி வாங்கப்பட்டவர். அவர் உதவி செய்தால் உன் முயற்சி வெற்றி பெறும்.
இங்கே நிறைய எலிகள் உள்ளன. எனக்கு நல்ல விருந்து கிடைத்தது. நீ அவரைச் சந்தித்த பின் என்னைக் கூப்பிடு. நான் வருகிறேன்,''என்றது பூனை.
குகைக்குள் நுழைந்தான் செழியன்.
அங்கே இருந்த கட்டிலில் எலும்பும், தோலுமாகக் கிழவர் ஒருவர் படுத்து இருந்தார். அவருக்கு மூச்சு மட்டும்தான் வந்து கொண்டிருந்தது.
அவர் அருகே சென்ற செழியன், ''ஐயா! பெரியவரே!'' என்று குரல் கொடுத்தான்.
கண் விழித்த அவர், ''குடிக்கத் தண்ணீர் வேண்டும்,'' என்று மெல்லிய குரலில் கேட்டார்.
அங்கே குடுவையில் இருந்த தண்ணீரை எடுத்து, அவர் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினான்.
தண்ணீரைக் குடித்த அவர் பேசத் தொடங்கினார்.
''இளைஞனே! புகழ் பெற்ற மந்திரவாதியாக இருந்தேன். எல்லாருக்கும் நான் நல்லதையே செய்தேன். என்னைக் கண்டு பேய்களும், பிசாசுகளும் அஞ்சி நடுங்கின.
சூனியக்காரி என்று அறியாமல் ஒருத்தியை வேலைக்கு அமர்த்தினேன். என் மீது உயிரையே வைத்திருப்பது போல நடித்தாள். அவள் நடிப்பில் நானும் ஏமாந்து விட்டேன். எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் அவளுக்குச் சொல்லித் தந்தேன். என் மந்திர ஆற்றல்களை எல்லாம் ஒரு புத்தகமாக்கி வைத்திருந்தேன். என்னை ஏமாற்றி அந்தப் புத்தகத்தை கைப்பற்றிக் கொண்டாள்.
ஆற்றல் இழந்த என்னை இந்தக் குகைக்குள் சிறை வைத்து விட்டாள். நாணல் அழகியைக் காப்பாற்ற நீ மந்திர மோதிரத்தைத் தேடி செல்கிறாய்,'' என்றார் அவர்.
தொடர்ந்து இருமியதால், அவருக்கு மூச்சு திணறியது. அவர் நெஞ்சைத் தடவிக் கொடுத்தான் செழியன்..
மீண்டும் அவர் பேசத் தொடங்கினார்.
''அந்தச் சூனியக்காரியிடம் சிக்காதது என் மந்திரச் செருப்புகள் மட்டுமே, அவை அந்த பெட்டிக்குள் உள்ளன. அவற்றை எடுத்து அணிந்து கொள். அந்தச் செருப்புகள் உன்னை இரும்பு மலைக்கு அழைத்துச் செல்லும். அந்த மலைக்குள் உள்ள கோட்டையில்தான் சூனியக்காரியின் மகனான அரக்கன் உள்ளான்.
நீ செல்லும் வழியில் பெரிய கடல் இருக்கும். மந்திரச் செருப்புகளைக் கழற்றிக் கடலில் போடு. உடனே அவை அழகான படகாக மாறும். நீ அதில் அமர்ந்தால் ஒரு தீவில் உன்னைச் சேர்க்கும்.
பிறகு அந்தப் படகு செருப்புகளாக மாறும். அவற்றை அணிந்தால், இரும்பு மலையில் உன்னைக் கொண்டு சேர்க்கும்.
அந்த மலை அருகே யாருமே தண்ணீர் அருந்தாத ஏரி ஒன்று உள்ளது. இந்த மந்திரச் செருப்புகள் இல்லாமல் யாரும் இரும்பு மலையை அடைய முடியாது,'' என்றார்.
அவர் மூச்சு நின்றது. அங்கேயே அவரை அடக்கம் செய்தான் செழியன்.
அங்கிருந்த பெட்டியைத் திறந்தான். மந்திரச் செருப்புகளை எடுத்துத் தன் கால்களில் அணிந்து கொண்டான். குகையை விட்டு வெளியே வந்தான். பூனையும் அவனுடன் சேர்ந்து கொண்டது.
இருவரும் பல நாட்கள் நடந்து கடற்கரையை அடைந்தனர். செருப்புகளைக் கழற்றி கடலில் போட்டான்.
என்ன வியப்பு! இரண்டு செருப்புகளும் சேர்ந்து அழகான படகாக மாறியது. அவனும் பூனையும் அதில் ஏறி அமர்ந்தனர்.
அந்தப் படகு கடலில் நீண்ட நேரம் சென்றது. ஒரு தீவை அடைந்தது. இருவரும் படகில் இருந்து இறங்கினர். உடனே அந்தப் படகு செருப்புகளாக மாறியது. அவற்றைக் கால்களில் அணிந்து கொண்டான்.
காடாக இருந்த அந்தத் தீவிற்குள் இருவரும் நடந்தனர். இரும்பு மலை அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. சிறிது தொலைவில் இருந்தபடியே அந்த மலையில் என்ன நடக்கிறது என்று கவனித்தனர்.
திடீரென்று அந்த மலையின் ஒரு பகுதி திறந்தது. அதற்குள் இருந்து பத்துப் பெண்கள் கையில் கூடையுடன் வெளியே வந்தனர். அவர்கள் அனைவருமே அழகிகளாக இருந்தனர்.
-2 தொடரும்.
