PUBLISHED ON : ஏப் 25, 2014

வெப்பத்தின் தன்மைகளை ஆராய்ந்தவர் வெடி மருந்து மற்றும் பீரங்கிகளைக் கண்டு பிடித்தவர் என்ற பெருமைகளுக்குரிய பெஞ்சமின் தாம்ஸன் எனப்படும் 'கவுண்ட் ரம்ப் போர்டு' என்ற விஞ்ஞானி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த மாசெசூஸெட்ஸ் தீவில் ஓர் ஏழை விவசாயியின் மகனாகப்பிறந்து, பிற்காலத்தில் பிரபுவாகவும், அமைச்சராகவும், கவர்னராகவும் உயர்ந்தவர்.
இவரது வாழ்வு வீரசாகசங்கள் நிரம்பியது.
இவர் பிறந்தவுடனேயே இவரது தந்தை இறந்து விட்டார். மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல், 13 வயதிலேயே ஒரு கிட்டங்கியில் சிப்பந்தி யாக வேலைக்குச் சென்றார். பின்னர் 18 வயதில் உள்ளூர் பள்ளி யில் ஆசிரியரானார்.
டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாத நிலையில், கிடைத்த வேலையைத் திறமை யாகச் செய்து வந்தார்.
ஆறடி உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட பெஞ்சமினை பெண்களெல்லாரும் வைத்த விழி வாங்காமல் பார்ப்பர். அவர்களுள் 33 வயது, செல்வ வளமும் நிறைந்த ரோல்பி என்ற ஒரு விதவைப் பெண், 19 வயதான பெஞ்சமினைக் காதலித்து மணந்து கொண்டார்.
அழகும், இளமையும், ஆற்றலும் கொண்ட பெஞ்சமினின் முதல் திருமணம் இவ்வாறு ஒரு விதவைப் பெண்ணுடன் தான் நிகழ்ந்தது. அதன் பின் வசதி மிக்கவளான அந்த மனைவி யின் செல்வாக்கால் உள்ளூர் ராணுவத்தில் மேஜராகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டு மணவாழ்க்கையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியதால், உள்ளூர் தேச பக்தர்களால் பிரிட்டிஷ் உளவாளி என முத்திரை குத்தப்பட்டு, அடிக்கடி கைது செய்யப்பட்ட பெஞ்சமின், தன் மனைவி யையும், மகளையும் அங்கேயே விட்டுவிட்டு, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வந்து தன் மனைவியைப் பார்க்கவே இல்லை.
இங்கிலாந்தில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி, விஞ்ஞானியாகி, ராயல் விஞ்ஞானக் கழகத்தில் உறுப்பினரானார். அங்கு அவருக்கு பிரபு பட்டம் வழங்கப் பட்டது. இப்படி பல முன்னேற்றங் களைக் கண்ட பெஞ்சமின், பவேரியா அரசரின் ஆலோசக ராகவும் நியமிக்கப் பட்டார். பின்னர் யுத்த அமைச்சரானார். காவல்துறை அமைச்ச ரானார். அரசருக்கு அடுத்த இடத்தையும் பெற்றார். அப்போது தான், 'கவுண்ட் ரம்போர்டு' என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
இறுதிக் காலத்தில் ரம்போர்டு மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டார். பிரெஞ்சுப் புரட்சியின் போது கில்லட்டின் என்ற கொலைக் கருவிக்கு இரையாகி மாண்ட, பிரெஞ்சு விஞ்ஞானி லவாய்சியரின் விதவை மனைவியான மேரிதான் அவரது இரண்டாவது மனைவியாக வாழ்ந்தார்.
இருவருமே அழகிலும், அறிவிலும் சிறந்தவர்களே. ஆனால், ஒரு விஷயத்தில் கூட இருவரும் மனம் ஒன்றிப் போகவில்லை. அதனால் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.
வீரசாகசம் மிக்க விஞ்ஞானி கவுண்ட் ரம்போர்டு இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக இரு விதவைகளை மணந்து கொண்டிருப் பினும், இறுதிக் காலத்தில் தனிமையில் வாடியே மரணம் அடைந்தார்.
