
சென்னை, ராயபுரம் நார்த்விக் சி.எஸ்.எம்.பெண்கள் உயர்நிலை பள்ளியில், 1948ல், 7ம் வகுப்பில் படித்தேன். என் தந்தைக்கு ரயில்வே பணியில் இடமாறுதல் வந்ததால் என்னையும், தங்கை அனுசூயாவையும் மாணவியர் விடுதியில் சேர்த்திருந்தார். குடும்பத்தை பிரிந்ததால் துயரடைந்திருந்தேன்.
ஒருமுறை வகுப்பில் ஆசிரியை கண்டித்ததால் உணவை தவிர்த்து அழுது கொண்டிருந்தேன். இரண்டு நாட்களான பின்னும் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.
இதை அறிந்த ஆசிரியைகள் மாசிலாமணியும், சிஸ்டர் இடிகுலாவும் என்னை அழைத்து இதமாக அருகே அமர வைத்தனர். அடம் பிடிப்பது கெட்டச்செயல் என்பதை தெளிவுபட விளக்கினர். பெண்கள் முன்னேற அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய பண்புகளை எடுத்துரைத்தனர். தீய குணங்களை களைந்தால் சாதிக்கலாம் என பொறுமையுடன் புகட்டினர்.
நல்லொழுக்க சிந்தனை எழுந்தது. தொடர்ந்து, பள்ளியில் நடந்த நாடகங்களில் ராஜராஜ சோழன், புத்தர், குமணன் போன்ற வேடங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் ஊக்கமளித்தனர். ஆர்முடன் திறமையை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றேன். படிப்பில் கவனம் செலுத்தி நற்பெயர் வாங்கினேன்.
எனக்கு, 92 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். குன்றாத உடல், மன ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். எனக்கான பணிகளை நானே நிறைவேற்றிக்கொள்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுகிறேன். இதற்கு அடிதளம் அமைத்த ஆசிரியைகள் மாசிலாமணி, இடிகுலாவின் நினைவை போற்றுகிறேன்.
- வி.சவுந்தரவள்ளி, சென்னை.
தொடர்புக்கு: 99400 32634