
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அருகே மணக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
என் தந்தை டி.புருேஷாத்தமன் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். மாணவ, மாணவியரை திட்டவோ, கண்டிக்கவோ மாட்டார். எந்த பிரச்னையையும் மென்மையாக அணுகி எளிமையாக தீர்த்து வைப்பார். தக்கவாறு அறிவுரைத்து கண்ணியமாக நடத்துவார். பள்ளியை எல்லா நிலையிலும் உயர்த்த அரும்பாடுபட்டார்.
அன்று, எனக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. அறிவியல் பாடத்தில், 60 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதே பாடத்தில், காலாண்டு தேர்வில், 80 மதிப்பெண் பெற்றிருந்ததால் எனக்கு கவலை ஏற்பட்டது. தயங்கியபடி எடுத்து சென்று தந்தையிடம் காட்டினேன்.
அதை பார்த்ததும் சற்றும் நிதானம் குறையாமல், 'தமிழில், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்ற பழமொழி இருப்பது உனக்கு தெரியுமா... அதற்கு அர்த்தம் தெரிந்தால் சொல்...' என கூறி என் கவனக்குறைவை இதமாக புரிய வைத்தார். முயற்சியுடன் படித்து முன்னேறினேன்.
என் வயது 60; இல்லத்தரசியாக இருக்கிறேன். என் தந்தைக்கு, 94 வயதாகிறது. ஓய்வூதியத்தில் இயன்ற வரை உதவி, யாருக்கும் தொந்தரவு தராமல் முன் உதாரணமாக திகழ்கிறார். அவரது மேன்மையான பண்பை போற்றி பெருமிதமுடன் வாழ்கிறேன்.
- கே.ரேவதி கிருஷ்ணகுமார், கடலுார்.
தொடர்புக்கு: 90433 78836