
விருதுநகர் மாவட்டம், கல்லம நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1964ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார் தி.ச.முனுசாமி. பணியில் கண்டிப்பு மிக்கவர். பள்ளி வளாகத்தை அடிக்கடி சுற்றிவந்து கண்காணித்து முறையாக நிர்வாகம் செய்வார். கற்பிப்பதில் கனிவான நடைமுறைகளை பின்பற்றுவார்.
அந்த காலத்தில், என் கிராமத்தில் முழுமையாக மின்சார வசதியில்லை. மாலை மயங்கினால் இருள் சூழ்ந்துவிடும். வீட்டில் இருந்தபடி படிக்க இயலாது. இதையறிந்து மாற்று ஏற்பாடு செய்தார் தலைமையாசிரியர். வகுப்புகள் முடிந்தபின், மாலை 6:00 மணி துவங்கி இரவு, 10:00 வரை பள்ளியிலே அமர்ந்து படிக்கும் வசதியை ஏற்படுத்தினார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இதை தவறாது நிறைவேற்றினார்.
தமிழ், ஆங்கில மொழியை மாணவர்கள் பிழையின்றி எழுத வைத்தார். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க முயற்சி எடுத்தார். மனப்பாடம் செய்து, 100 மதிப்பெண் பெறுவதை விட, ஆழ்ந்து கற்று சுயமாக எழுதுவதை ஊக்குவித்து நம்பிக்கையூட்டினார் தலைமையாசிரியர். சலிப்பின்றி பயிற்சி செய்து முன்னேறினேன்.
இப்போது என் வயது, 78; பிரபல நாளிதழ் செய்திப்பிரிவில், 53 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் வாழ்வின் வெற்றிக்கு, தலைமையாசிரியர் தி.ச.முனுசாமி கற்பித்த வழிமுறையே அடித்தளமாகி உதவுகிறது.
- மு.இளங்கோவன், மதுரை.
தொடர்புக்கு: 9944408225