PUBLISHED ON : மே 10, 2025

பாடங்கள் அனைத்திலும், எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குவான் கோபு.
இது, வகுப்புத் தோழன் ராமுவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால், எப்படியாவது மட்டம் தட்ட துடித்தான்.
அன்று தான், சரியான சந்தர்ப்பம் கிடைத்தது.
பள்ளியில், விளையாட்டு தினக் கொண்டாட்டம்; மாணவர்கள் புத்தாடை உடுத்தி விளையாட்டுகளில் பங்கேற்று உற்சாகம் காட்டினர்.
வகுப்பில் சற்று உயரமாகவும், பருமனாகவும் இருப்பவன் ராமு. அதனால், உடற்பயிற்சி ஆசிரியருக்கு உதவியாக செயல்பட்டு வந்தான்.
அன்று இசை நாற்காலி என்ற விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் ஏழு நாற்காலிகளை போட்டு எட்டுப் பேர் சுற்றி ஓட வேண்டும்.
போட்டி துவக்கமாக இசை ஒலித்தது. நாற்காலிகளை சுற்றியபடி அனைவரும் ஓடினர். எதிர்பாராத வேளையில் ஆசிரியர் விசில் ஊத, இசை நின்றது. நாற்காலிகளில் ஏழு பேர் அமர, ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்படி பல சுற்றுகள் முடிந்து பலரும் வெளியேறினர்.
இறுதி சுற்று நடக்க இருந்தது.
வழக்கமாக அதில், கோபு தான் வெற்றி பெறுவான். அதை எண்ணியதும் ராமுவுக்கு எரிச்சலாக இருந்தது.
போட்டியில் நாற்காலிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஆசிரியருக்கு உதவியாக இருந்தான் ராமு. அப்படி அகற்றிய போது, கால் விரிசல் விட்டு உடைந்த நாற்காலி ஒன்று இருப்பதைக் கண்டான்.
உடனே ஒரு யோசனை வந்தது.
விளையாட்டின் இறுதி சுற்றுக்கு ஏற்பாடு நடந்தது.
கோபுவும், மற்றொருவனும் களத்தில் நின்றனர்.
யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் நேரம் நெருங்கியது.
ஆர்வமாக வேடிக்கை பார்த்தோரை ஒழுங்கு செய்வதில் கவனமாக இருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர்.
இறுதி சுற்றுக்காக, கால் விரிசல் விட்ட நாற்காலியை மைதானத்தில் வைத்தான் ராமு.
போட்டி துவங்கியது. இருவரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
விசில் சத்தம் கேட்டதும் இசை நின்றது. வேகமாக ஓடிக்கொண்டிருந்த கோபு, அவசரமாக நாற்காலியில் உட்கார்ந்தான்.
அது உடைந்து விழுந்தது.
பயங்கர அலறலுடன் சாய்ந்தான் கோபு.
வேடிக்கை பார்த்தோர் ஏளனமாக சிரித்தனர்.
சுதாகரித்து எழுந்து நொண்டியவாறு சென்றான் கோபு. அதைக் கண்டு மகிழ்ந்தான் ராமு.
நிகழ்ச்சி முடிந்தது.
மகிழ்ச்சியில் விசில் அடித்தவாறு மிதிவண்டியில் புறப்பட்டான் ராமு. அதிவேகமாக மிதித்தான். திருப்பம் ஒன்றில் திரும்பினான்.
மறு பக்கத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனம், ராமுவின் மிதிவண்டியில் எதிர்பாராதவிதமாக மோதியது.
நிலை தடுமாறி விழுந்தான் ராமு. தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் உடனே மருத்துமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
சிகிச்சை பெற்றபோது, ராமுவின் எண்ணம் பின்நோக்கி சென்றது.
விளையாட்டு நிகழ்வில், கால் உடைந்து பழுதான நாற்காலியை போட்டு கோபுவுக்கு கெடுதல் செய்தது நினைவுக்கு வந்தது.
மனம் வலித்தது. மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிறருக்கு கெடுதல் செய்யாமலிருக்க உறுதி ஏற்றான் ராமு.
பட்டூஸ்... பொறாமையால் பிறருக்கு கெடுதல் செய்ய ஒருபோதும் நினைக்காதீர்!
- துடுப்பதி ரகுநாதன்