PUBLISHED ON : ஏப் 25, 2026

திருப்பூர், காங்கேயம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1956ல், 8ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியர் வெங்கிடுசாமி, பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பள்ளி வகுப்பறையில் ஆய்வுக்கு வந்தார், மாவட்ட கல்வி அலுவலர். ஆசிரியரை பாடத்தை தொடருமாறு கூறி, என் அருகில் அமர்ந்தார்.
அப்போது, 'விதிவிளை எதறு கலி விடை கொள, அருள் மழை குதி கொள, இணை விழி குளிர நோக்கினான்...' என்ற செய்யுளை கூறி, 'விதியால் விளைந்த வறுமையால், ஒரு மன்னனிடம் சன்மானம் பெற்று வர சென்ற ஏழைப்புலவன், அந்த மன்னின் இரு கண்களை உற்று நோக்கி, தனக்கு கட்டாயம் சன்மானம் கிடைக்கும் என, உறுதியாக நம்பினான்' என்ற ஆசிரியரின் விளக்கமும், வர்ணனையும், இன்றும் என் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.
'ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஆர்வத்துடன் புரிந்து கொண்டாலே, வெற்றி வசமாகும். நினைவாற்றலுக்கு பயிற்சி கொடு. சந்தேகங்களுக்கு தைரியமாக விளக்கம் கேள். தாழ்வு மனப்பான்மையை கைவிடு' என்று போதித்தார், தமிழாசிரியர்.
தமிழ் செய்யுள்களின் மீது எனக்கு ஆர்வம் அதிகம்; ஆனால், கூச்ச சுபாவம் உள்ளவன். என் ஆர்வத்தை உணர்ந்த ஆசிரியர், பேச்சு போட்டிக்கு பயிற்சி அளித்தார். என்னிடமிருந்த கூச்ச சுபாவம் மறைந்து, தைரியம் வந்தது. அதையடுத்து, பள்ளி ஆண்டுவிழா பேச்சு போட்டியில் பங்கேற்று, முதல் மாணவனாக வெற்றி பெற்றேன். பள்ளி இறுதி ஆண்டில் மாணவர் தலைவனாக தேர்வானேன்.
தற்போது என் வயது, 83. பஞ்சாயத்து யூனியனில் பணியாற்றி, 1990ல் விருப்ப ஓய்வு பெற்றேன். பள்ளிக்காலம் முதல் வாழ்க்கையில் நா ன் பெற்ற வெற்றிகள் அனைத்தையும், என்னை செதுக்கிய ஆசிரியர் வெங்கிடுசாமிக்கு சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
- சு.தெண்டபாணி, திருப்பூர். தொடர்புக்கு: 96984 21414
