
அன்புள்ள அம்மா...
என் வயது, 17; பிரபல தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படிக்கும் மாணவன். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறார் விஞ்ஞானி டார்வின்.
மலை மேல் ஏறினவன் மீண்டும் இறங்குவது போல, மனிதனாக இருப்பவன் மீண்டும் குரங்காக மாறினால் எப்படி இருக்கும். யோசித்து பாருங்கள்.
அப்படி, மனிதன், குரங்காக மாறும் சாத்தியங்கள் ஏதாவது இருக்கிறதா... இது பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிவியல் ரீதியில் முறையாக விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
எப்.விஜயமோகன்.
அன்பு மகனுக்கு...
மனிதனை, குரங்காக கற்பனை செய்து பார்த்தேன். வியப்பான எண்ணங்கள் மோலோங்கின.
மனிதன் குரங்காக மாறினால்...
* வீடு கட்ட தேவையில்லை
* மரக்கிளையில் வாழலாம்
* வாழைப்பழம் விரும்பி தின்னலாம்
* உடனிருக்கும் குரங்குக்கு பேன் பார்க்கலாம்
* சுதந்திரமாக வாலை சுழற்றலாம்.
மனிதனிடமிருந்து, குரங்கு தோன்றினால் அதை தலை கீழ் பரிணாமம் என்பர். ஆங்கிலத்தில், 'ரிவர்சிபிள் எவல்யூசன்' எனப்படுகிறது.
உருகுதல், கொதித்தல், நீராவியாதல், உறைதல், சுருங்குதல், கரைதல் போன்ற பண்புகளுக்கு உட்படும் நீரும், உப்பும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.
ஈல் போன்ற ஹாக் மீன், பெங்குவின், செடிப்பேன் போன்ற உயிரினங்கள் தலைகீழ் பரிணாமம் எடுக்கின்றன.
ஆனால், மனிதனுக்கு தலைகீழ் பரிணாமம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அறிஞர்கள் கணிக்கவில்லை.
மனித இனம் உலகில் வாழும் மற்ற ஜீவராசிகளை விட மேன்மையானது.
மனிதக் குரங்கிலிருந்து, மனிதனாய் பரிணாமம் பெற, 60 லட்சம் ஆண்டுகள் வரை ஆகியுள்ளது.
இத்தனை ஆண்டுகளில் பெற்ற உன்னதத்தை, சில நுாறு ஆண்டுகளில் மனிதன் இழப்பானா...
உலகில், 'யூஸ் அன்ட் டிஸ்யூஸ்' என்ற தத்துவம் உள்ளது. அதன்படி இன்னும், ஆயிரம் ஆண்டுகளில், மனிதனுக்கு உள்ள, 32 பற்களில், 16 பற்களை இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. இதை கற்பனை செய்து பார். வியப்பான விஷயங்கள் தெரிய வரும். இதுபோல் நடப்பதற்கு சாத்தியம் உள்ளது.
தற்போது, மனிதனுக்கு பற்களால் அரைக்க, கடிக்க, கிழிக்கும் தேவை மிகக் குறைவாக உள்ளது. உலகம் எங்கும் மென்மையான உணவுகளே அதிகம் தயாரிக்கப்படுகிறது. இது, பற்களின் தேவையை குறைத்து விடும்.
அதுபோல், இன்னும் பல மாற்றங்கள் நடக்கும் என்ற கணிப்பு உள்ளது. அவையும் வியப்பூட்டக்கூடிவை தான்.
வருங்காலத்தில் மனிதனுக்கு...
* தலையில் சிறிதும் முடி இருக்காது
* கண் பார்வை கூர்மையாகும்
* சராசரி ஐக்யூ 250ஐ தாண்டும்
* கை விரல்கள் நான்காக குறையும்
* பூமி முழுக்க, ஒரே மொழி பேசும் நிலை வரும்
* உணவுக்கு பதில் மாத்திரையை பயன்படுத்த கூடும்
* குளியலுக்கு பதில் ரசாயனம் தடவி உடலை பேணும் நிலை ஏற்படும்.
இப்படி எல்லாம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கற்பனை தான், மனித வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது.
நீ செய்யும் தலைகீழ் கற்பனை, மனிதனை கற்காலத்துக்கு கொண்டு போய் விட்டு விடும்.
தலைகீழ் பரிணாமத்தில் மனிதனை குரங்காக்கும் ஆராய்ச்சி எதுவும் நடந்தால், மிகவும் கண்டனத்துக்குரியது.
குரங்கு நம் மூதாதையர். அவற்றின் மீது அன்பு செலுத்தலாம். ஆனால், அதனுடன் கவனமாக பழக வேண்டும்.
குரங்கு கடித்தால், எச்.ஐ.வி., 1 மற்றும் ஹைபைட்டிஸ் ஏ போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால், குரங்கை செல்ல பிராணியாக வளர்க்க முயற்சி செய்யக்கூடாது!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.