
கோடை விடுமுறை வந்தது.
நகரப் பள்ளியில் படிக்கும் நகுலினியும், வருணிதியும் அன்று கிராமத்துக்கு வந்தனர்.
அன்பு முத்தமிட்டு வரவேற்று உபசரித்தார் பாட்டி கமலாம்பாள். மாமாவும் கனிவுடன் அன்பை பொழிந்தார்.
ஒரு வாரத்திற்கு பின் -
மாமாவின் அலைபேசி செயலியில் விளையாடி பொழுது போக்கினாள் நகுலினி.
பாட்டியை சுற்றி வட்டமடித்து விளையாடினாள் வருணிதி.
அன்று -
தோட்டத்தில் விழுந்திருந்த மாங்காய்களை எடுத்து வர ஆளுக்கொரு கூடையை கொடுத்திருந்தார் பாட்டி.
மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் மாமாவின் பைக் வரும் சத்தம் கேட்டது.
''ஏய் ஜாலி...''
குதித்தபடி கூடையை வைத்து, ஓடினாள் நகுலினி.
இந்த செயலை கண்டதும் ஒரு முடிவெடுத்தார் பாட்டி.
இரவில் மொட்டை மாடியில் பவுர்ணமியை ரசித்தனர். கதை கூறி மகிழ்வித்தபடி, ''கூடைகளில் எத்தனை மாங்காய் எடுத்து வந்தீர்...'' என்றார் பாட்டி.
''ஒன்பது...'' என்றாள் வருணிதி.
கூடையை மாமரத்தின் அடியில் வைத்திருப்பதாக அமைதி காத்தாள் நகுலினி.
''சென்ற விடுமுறையில், சிட்டுக்குருவி போல் சிறகடித்து, ஓய்வின்றி விளையாடினீர்; இந்த ஆண்டு அதை மறக்க செய்தது யார் தெரியுமா...''
'யார் பாட்டி...'
ஆர்வ மிகுதியில் வினவினர் இருவரும்.
''அலைபேசி விளையாட்டு செயலி தான். விளையாட்டு என்பது தசைகளுக்கான பயிற்சி; மூளைக்கு புத்துணர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் தரும். அது ஆயுளை பெருக செய்யும். அதற்கான விளைவை கொண்டிருக்க வேண்டும் விளையாட்டு. அலைபேசி செயலி விளையாட்டுகளில் இவை எதுவும் இல்லை...'
அழுத்தம் திருத்தமாக சொன்ன பாட்டியை உற்று நோக்கினர்.
''புதிய விளையாட்டை நான் கற்றுத் தரவா...''
மென்மையாக கேட்டார் பாட்டி. அதை கேட்டு புன்னகைத்தாள் வருணிதி.
செயலுக்கு வருத்தம் தெரிவித்தாள் நகுலினி.
மறுநாள் -
நண்பர் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றார் பாட்டி. அங்கு, குடுவைகளில் மீன் வளர்ப்பதையும், மாடி தோட்டம் அமைத்து இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவற்றை அந்த குடும்ப குழந்தைகளே பராமரிப்பதை பற்றி கேட்டறிந்தனர். மகிழ்ச்சியாக விளையாடி வீடு திரும்பினர்.
தொடர்ந்து, ஆறு, நுாலகம், மைதானம், உறவினர் வீடு என அனுபவம் பெற்றனர். அம்மாவிற்கு தொலைபேசியில் அதை கூறி மகிழ்ந்தனர்.
பாட்டி உதவியுடன் மாடியில் தோட்டம் போட்டனர். காய்கறி, பூச்செடிகள் வளர்த்தனர். வாளியில் தண்ணீர் நிரப்பி செடிகளுக்கு ஊற்றினர்.
அந்த நேரம், மாமாவின் பைக் சத்தம் கேட்டது.
ஓடிச் சென்று அவரை அழைத்து வந்த நகுலினி, ''யாருடையது அழகாக இருக்கிறது என கூறுங்கள் மாமா; நகரத்தில் அம்மாவுக்கும் இதைக் கற்றுத் தருவோம்...'' என்றாள்.
பேத்தியரை உச்சி முகர்ந்து, முத்தமிட்டார் பாட்டி. சிட்டுக்குருவிகள் போல் இருவரும் சிறகடித்து பறந்தனர்.
பட்டூஸ்... உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்!
- எஸ்.ஆனந்தப்ரியா