
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 13; மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் பெரியம்மா மகளுக்கு, 20 வயதிருக்கும். இளங்கலை விலங்கியல் படிக்கிறாள். அவள்தான் எங்கள் ஏரியாவில் தேவதையாக வலம் வருகிறாள்.
அவளது தலைமுடி, பஞ்சு பஞ்சாய் காற்றில் பறக்கும். ஆசையாக தொட்டால், 'உங்களுக்கு இப்படி தலை முடி வேணும்னா... தலையில் 'சொலசொல'ன்னு எண்ணெய் தேயக்காதீங்க. எண்ணெய் மூஞ்சி பூராவும் வழிஞ்சு முகப்பொலிவை குறைத்து விடும். எண்ணெய் இல்லாத தலை ரோம அருவி...' என்பாள். அந்த அக்கா சொல்வது சரியா... எனக்கு எதுவும் புரியவில்லை. என் குழப்பத்தை தீர்த்து வைத்து உதவுங்கள்.
இப்படிக்கு,
கே.சிவகாம சுந்திரி.
அன்பு மகளே...
ஐந்தாயிரம் ஆண்டுகளாக, தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர் தமிழர்கள். இது காலத்தை வென்ற பாரம்பரியம். இங்குள்ள ஆயுர்வேத மருத்துவம், 'தலைக்கு எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து விட்டால், ஏழாவது சக்கராவின் கூம்பு சுரப்பி சுரந்து, மனதில் அமைதி ஏற்படும்' என கூறுகிறது.
குளிர்காலத்தில், நல்லெண்ணெயும், கோடை காலத்தில், தேங்காய் எண்ணெயும் தலையில் தேய்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்யுடன், செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி மூலிகைகள் சேர்த்தால், மருத்துவக் குணங்கள் கூடும்.
தேங்காய் எண்ணெயில், நிறை கொழுப்பு, 90 சதவீதம் உள்ளது. இதை தவிர, லாரிக், மைரிஸ்டிக், பாமிட்டிக், கேப்ரைலிக் அமிலங்கள் மற்றும் ஒற்றை நிறைவுறா கொழுப்பும் உண்டு. பல் நிறைவுறாக் கொழுப்பு, வாசனையூட்டப்பட்ட ைஹடிரோ கார்பன், பைட்டோ ஸ்டிரோல் லேக்டோன் போன்றவையும் அடங்கியுள்ளன.
தேங்காய் எண்ணெய் தவிர, இனிப்பு பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய், பூனைக்காலி விதை எண்ணெய், மிர்சாலெகி தேன் போன்றவையும் தலையில் தடவலாம். மயிர் வேர்க்கால்களில் செபாசியஸ் சுரப்பி, 'சிபம்' என்ற இயற்கை எண்ணெயை சுரக்கிறது. சிபம் சரிவர சுரக்காத போது, தேங்காய் எண்ணெய் சிபத்தின் வேலையை செய்யும்.
தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால், ஆரோக்கியமுள்ள, பளபளப்பான தலை முடி வளரும். தலைமுடி உதிராது. தலைப்பகுதியில், ரத்தமும், ஆக்சிஜனும் அதிகம் புழங்கும். பொடுகு பிரச்னை நீங்கும்.
நீ என்ன செய்யலாம் தெரியுமா...
வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய், கை, கால்களிலும் தேய்க்கலாம். எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது உடலை பாதுகாக்கும் என, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.