PUBLISHED ON : ஏப் 04, 2026

அன்புள்ள இந்துமதி பெரியம்மா,
ஏனோ, எனக்கு உங்களை, பெரியம்மா என்று கூப்பிடத் தோன்றுகிறது.
பெரியம்மா... என் பிரச்னை மிகவும் வித்தியாசமானது. நான், தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவன்.
என் அப்பாவும், அம்மாவும் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்டவர்கள். அதை எதிர்த்து ஊரார் துரத்த, கிராமத்தை விட்டு ஓடி, ஒரு லாரியில் ஏறி, சென்னை வந்து சேர்ந்தனர்.
இருவரும் அழகாக இருப்பர். தனியார் நிறுவனம் ஒன்றில், நல்ல பதவியில் இருந்தார், அப்பா. வீட்டில் இருந்தபடி, குடும்பத்தை கவனித்து கொண்டார், அம்மா. மூவரும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தோம். ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக துாங்கி, நிம்மதியாக இருந்தோம்.
குருவிக் கூட்டத்தை கலைத்த மாதிரி, திடீரென்று எங்கள் நிம்மதி பறிபோயிற்று. அப்பாவுக்கு காய்ச்சல் வந்தது, அதிகமாயிற்று. 'மஞ்சள் காமாலை' என்றனர். பத்தே நாளில் நோய் முற்றி போய் இறந்து விட்டார், அப்பா.
அன்று இடிந்து போன அம்மா, ஓராண்டாகியும் அந்த இழப்பிலிருந்து வெளிவரவில்லை. சில நாட்களில் நடு ராத்திரியில் விழித்துப் பார்த்தால், விசும்பி, விசும்பி அழுது கொண்டிருந்தார். அழுதழுது, பாதி உடலாகி விட்டார், அம்மா.
'இப்படியே இருந்தால் அம்மாவையும் இழக்க வேண்டி வரும்...' என்று, அம்மாவை, பக்கத்தில் இருந்த மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேர்த்து விட்டனர், அக்கம் பக்கத்தினர்.
எது செய்தாலும் அம்மா முகத்தின் சோகமும், இழப்பின் வலியும் மாறவே இல்லை.
அதனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், பெரியம்மா...
அப்பா மாதிரியே நல்லவராக, அழகானவராக, அம்மாவை புரிந்து கொள்பவராக ஒருவரை தேடிப் பிடித்து, மீண்டும் அம்மாவிற்கு துணையாக்கினால் என்ன என்று தோன்றுகிறது.
அதற்காக விளம்பரதாரர்களிடம் விளம்பரம் கொடுக்கலாமா... எத்தனையோ கல்யாண நிறுவனங்கள் இருக்கின்றனவே; ஒரு நல்ல அப்பாவைத் தேடி தர மாட்டார்களா...
'அப்பா வேண்டும்' என்றே விளம்பரப்படுத்தலாமா... என்ன நினைக்கிறீர்கள் பெரியம்மா...
- இப்படிக்கு,
கண்ணன்.
கண்ணா...
என் கண்ணில் கண்ணீரை வரவழைத்து விட்டாயடா. 9ம் வகுப்பு என்கிறாய்; 14 வயதிருக்குமா உனக்கு...
இந்த வயதில் இப்படிப்பட்ட எண்ண முதிர்ச்சி, எப்படியடா ஏற்பட்டது... உன்னை நினைத்து நான் பெருமையும், ஆச்சரியமும் படுகிறேன். பெற்ற தாயின் மறுமணத்திற்கு விளம்பரப்படுத்த நினைக்கும் முதல் பையன், நீயாகத் தான் இருப்பாய். சந்தோஷம்டா மகனே.
இதில் உனக்கு உதவ, உன்னோடு இருக்க யாருமில்லை என, நினைத்து விடாதே. ஒரு வார்த்தை சொல்; நாங்கள் திரண்டு வருகிறோம்.
முதலாவதாக, நீ உன் தாயின் சம்மதத்தை பெற வேண்டும். அவர் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். அதை உன்னால் மட்டுமே செய்ய இயலும். நீ நிறைய பேசி, போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கும்.
அம்மாவை நீ அறிவுபூர்வமாக இன்றி, உணர்வுபூர்வமாக பேசி கரைக்க முயற்சி செய். அம்மாவிற்கு கணவர் வேண்டும் என்பதை விட, உனக்கு அப்பா வேண்டும் என்பது, எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்து.
'பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் 'மீட்டிங்'குக்கு எல்லா மாணவர்களின் அப்பாக்களும் வருகின்றனர்...' என்று ஆரம்பி. அப்படியே ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு, 'ஒரு பையனுக்கு ஆதாரம் அப்பா' என்பதில் திட்டவட்டமாகவும், அம்மாவின் மனதை கரைத்து ஏற்றுக் கொள்ளும்படியாகவும், உண்மையாகவும், இதமாகவும் பேசு.
நல்லதை நினைத்து, நல்லதை பேசி, நல்லதை செய்வோருக்கு நல்லதே நடக்கும். நல்லவர்களுடன் எப்போதும் இறைவன் துணையிருப்பான்.
கண்ணா, உனக்கு அந்த கருமை நிறக் கண்ணன் என்றும் துணையிருப்பான்.
- மிகுந்த பிரியத்துடன்,
பெரியம்மா இந்துமதி.
