PUBLISHED ON : அக் 26, 2024

அக்டோபர் 31, தீபாவளி பண்டிகை!
கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது தீபாவளித் திருநாள். தமிழகத்தில், அமாவாசையன்றும், கர்நாடகா மாநிலத்தில் அதற்கு முன்தினம், சதுர்த்தசியிலும் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நவராத்திரி போல், தீபாவளியும் துர்கை சம்பந்தப்பட்டது தான். அரக்கனை அழித்த தினம் தான் தீபாவளி. உத்தரபிரதேசத்தில், வனவாசம் முடிந்து ராமபிரான் அயோத்தி திரும்பியதே தீபாவளி என கருதுகின்றனர்.
குஜராத்தியர், தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்பும், இரண்டு நாட்கள் பின்பும் வீடு முழுதும் விளக்கு ஏற்றிக் கொண்டாடுவர். தீபாவளிக்கு, 13 நாட்களுக்கு முன், தெய்வ உருவங்கள் பொறித்த வெள்ளிக்காசுக்கு பூஜை செய்வர். இது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு இனிப்பு வகை செய்வர். துவாதசியன்று மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து விருந்து கொடுப்பர்.
திரயோதசியன்று தனலட்சுமி பூஜை செய்வர். நான்காம் நாளான சதுர்தசியில் புத்தாடை அணிந்து, சுவை மிக்க விருந்து உண்பர். வாணவேடிக்கையும் அமர்க்களப்படும்.
அடுத்த நாள் அமாவாசை. அன்று சோப்டா பூஜை நடத்துவர். இது புதிய கணக்கு புத்தகத்துக்கு நடக்கும். புத்தாண்டில் கடன் பாக்கி இருக்கக் கூடாது என, முன்னாளே கடன்களைத் தீர்த்து விடுவர். ஆறாம் நாள் உப்பு வாங்குவர். இனிப்பு மட்டுமல்ல; உவர்ப்பும் வாழ்வில் உண்டு என்ற தத்துவத்தை உணர்த்தும் சம்பிரதாயம் இது.
அன்று, 'பாயி பீச்' என்ற சடங்கும் உண்டு. இதன்படி, சகோதரரை வீட்டுக்கு அழைத்து விருந்தும், மதிப்புமிக்க பரிசும் திருமணமான சகோதரிகள் அளிக்க வேண்டும்.
கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கொங்கணி இனத்தவர் கொண்டாடுவது வித்தியாசமாக இருக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு, கங்கா பூஜை. இதற்காக, கிணறு அல்லது குளத்தில் செப்புக்குடம் நிறைய தண்ணீர் எடுத்து வருவர்.
அந்த குடம், கிணறு, குளங்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிப்பர். அப்போது, மணியோசைக்கு மாற்றாக, தட்டில் கரண்டியால் சீராகத் தட்டி ஒலியெழுப்புவர். குடத்தில் எடுத்து வந்த நீரை, பெரிய அண்டாவில் இருக்கும் தண்ணீரோடு கலப்பர். அதில் தான் தீபாவளியன்று அதிகாலை கங்கா ஸ்நானம் நடக்கும்.
ராஜஸ்தானில் மூன்று நாட்கள் கொண்டாட்டம் உண்டு. இதை, 'ஆகாதீஸ்' என்பர். இதற்கு, மூன்று நாட்கள் என்று அர்த்தம். உடுத்தும் ஆடை மட்டுமின்றி, திரைச்சீலை, படுக்கை விரிப்பு எல்லாம் புதிதாக வாங்குவர். கணக்குப் புத்தகங்களில், 'ஸ்வஸ்திக்' குறியிட்டு வெள்ளிக்காசு வைத்து பூஜை செய்வர். தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து, குடும்ப முதியோர் பாதங்களை தொட்டு தவறுகளை மன்னிக்க வேண்டுவர்.
மார்வாரி, குஜராத்தி, ஜெயின் சமூகங்களை சேர்ந்தோருக்கு, தீபாவளியன்று தான் புத்தாண்டு துவங்குகிறது. சமண சமயத்தவருக்கு தீபாவளி வேறு விதத்தில் முக்கியமானது. இந்த மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் சித்தியடைந்ததையே தீபாவளியாக கருதுகின்றனர். ஹிந்துக்கள் போகிப்பண்டிகையன்று செய்வதை, சமணர்கள் தீபாவளியில் செய்வர். வீட்டை சுத்தம் செய்து, வேண்டாத பொருட்களை வெளியேற்றுவர். புத்தாடையும், இனிப்புகளும் உண்டு.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
- அருண் சரண்யா