
ஸ்ரீவில்லிபுத்துார், குரு ஞானசம்பந்தர் இந்து உயர்நிலைப் பள்ளியில், 1973ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக இருந்தார் சுந்தரராஜன். அருமையாக பாடம் கற்பிப்பார். அன்று மொழி இலக்கணம் நடத்திக் கொண்டிருந்தார். கரும்பலகையில், 'எம்மொழி யார்க்கும் எளிது' என்று எழுதி, முன் வரிசையில் அமர்ந்திருந்தோரிடம் விளக்கம் கேட்டார்.
யாரும் சரியாக பதில் உரைக்கவில்லை. அப்போது, சோதனை நடத்துவதற்காக வகுப்பறைக்குள் வந்தார் தலைமையாசிரியர் அனந்தநாராயணன். நிலைமையை உணர்ந்து, 'தெரிந்தவர், இதற்கு பொருள் கூறலாம்...' என்றார் தமிழாசிரியர். நான் எழுந்து, 'எந்த மொழி படிப்பதற்கு எளிதானது...' என துவங்கி விளக்கமாக சொன்னேன்.
குறுக்கிட்ட தலைமையாசிரியர், 'எந்த மொழி படிப்பதற்கு எளிது... சொல் பார்க்கலாம்...' என்று புன்னகையுடன் கேட்டார்.
தயக்கத்தை விடுத்து, 'ஐயா... எம்மொழி என்பதை, என் மொழி என்று பொருள் கொள்ளலாம். என் தாய்மொழியான தமிழில் கற்பதே எளிதானது...' என்றேன்.
அத்துடன் நில்லாமல், கரும்பலகை சொற்றொடரில் வினாக்குறியை நீக்கி, வியப்புக்குறி இட்டேன். பாராட்டி, பாரதியார் கவிதை தொகுப்பை பரிசாக வழங்கி, 'பின்னாளில் சிறந்த கவிஞராக வருவாய்...' என வாழ்த்தினார் தமிழாசிரியர்.
எனக்கு, 66 வயதாகிறது; பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். கவிதை தொகுப்பு நுால்கள் பல வெளியிட்டுள்ளேன்.
தாய்மொழி மீது ஈடுபாடு கொள்ளும் வகையில், உற்சாகப்படுத்திய தமிழாசிரியர் நினைவை போற்றி வாழ்கிறேன்.
- க.சிவனணைந்த பெருமாள், விருதுநகர்.
தொடர்புக்கு: 99940 16389