
வேலுார் மாவட்டம், பென்னாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 9ம் வகுப்பில் படித்த போது நிகழ்ந்த சம்பவம்!
தலைமையாசிரியராக இருந்த ராமசந்திரன் ஆங்கில மொழி புலமை மிக்கவர். புரியும் வகையில் எளிமையாக கற்பிப்பார். அன்று, இறைவணக்க கூட்டத்தில் தேசிய கீதம் பாட சொன்னார். கை, கால் நடுக்கத்துடன் ஆரம்பித்தேன்; பாதிக்கு மேல் பாட வரவில்லை.
ஒரு மாணவிக்கு வாய்ப்பு கொடுத்து எனக்கு முட்டி போட்டு நிற்கும் தண்டனை தந்தார். அதை அவமரியாதையாக கருதி மனம் புழுங்கினேன். சபதம் எடுத்து பயிற்சி செய்தேன். அது, பொது இடங்களில் தயக்கமின்றி கருத்தை வெளிப்படுத்த உதவியது. பின்னாளில், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி பயிற்சி வகுப்பில் சேர்ந்த போது மாணவர் தலைவனாக உயர்த்தியது.
என் வயது 70; மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் தொழிற்சங்க கூட்டங்களில் கோரிக்கைகளை தெளிவாக எடுத்துரைத்து, கை தட்டல்கள் பெற்றேன். திறன்கள் வளர வித்திட்ட தலைமையாசிரியரை போற்றி வணங்குகிறேன்.
- துரை.சேகரன், திருவள்ளூர்.