
சென்னை, மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1991ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றேன். இங்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். முன்னர் நடந்த நிகழ்வுகளின் விபரத்தை விசாரித்து தெரிந்து கொண்டேன்.
மாணவர்களுக்கு நிரந்தரமாக நன்மை கிடைக்கும் வகையில், அந்த நிகழ்வை திட்டமிட்டேன். புகழ் பெற்ற மத்திய அரசு நிறுவனமான எம்.எப்.எல்., தலைவரை தலைமை ஏற்க அழைத்திருந்தேன். மனம் உவந்து பங்கேற்றவரை நிகழ்வு முடிந்ததும் பள்ளியை சுற்றிக்காட்ட அழைத்து சென்றேன்.
மாணவர்களுக்கு உள்ள வசதிகள் குறித்து கேட்டபடி வந்தார். பொதுஅறிவுக்கு உரிய நுாலகம் அமையவில்லை என்பதை எடுத்துரைத்தேன். அதை கவனத்தில் பதித்து, நுாலகம் உருவாக்கித் தர முன் வந்தார். அதற்கு திட்டத்தை உருவாக்கி சமர்ப்பித்த போது, பணி மாறுதலில் சென்று விட்டார்.
பின், அந்த நிறுவனத்துக்கு தலைமை பொறுப்பேற்ற வாசுதேவ், ஒருநாள் திடீரென பள்ளிக்கு வந்தார். ஜவஹர்லால் நேரு நுாற்றாண்டு நினைவாக நுாலக கட்டடம் அமைக்க, ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலையை தந்தார். புத்தகங்கள் வாங்க, ரூ.1 லட்சம் அனுமதித்தார்.
உடனடியாக, ஹிக்கின் பாதம்ஸ் நிறுவன உதவியுடன் புத்தகங்கள் வாங்கி வந்தேன். முறைப்படி, நுாலகக் கட்டடத்துக்கு திறப்பு விழா நடத்தினோம். மாணவ, மாணவியர் பொதுஅறிவு பெறும் வகையில், பயனுள்ள திட்டமாக நிறைவேறியது.
இப்போது, என் வயது, 90; ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் பணிகாலத்தில் பள்ளியில் நுாலகம் அமைய எடுத்த முயற்சி வெற்றி பெற்றதை மிகப் பெருமிதமாக கருதுகிறேன்.
- பி.வி.மணி, திருவள்ளூர்.
தொடர்புக்கு: 94440 45043

