
மதுரை ரயில்நிலையம் அருகே, கல்லுாரி உயர்நிலைப் பள்ளியில், 1964ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த சம்பவம்...
தலைமையாசிரியர் கே.சுந்தரம் தோற்றத்தில் குள்ளமாக இருப்பார். கதர்வேட்டி கட்டி, அதன் மீது கோட் அணிந்து அங்கவஸ்திரம் போட்டிருப்பார். பிறை சந்திரன் போல் சந்தணப் பொட்டு வைத்திருப்பார். பாடம் நடத்தும் போது காட்டும் கம்பீரம் எல்லாரையும் வியக்க வைக்கும்.
காலையில் வகுப்புகள் துவங்கும் முன் தவறாமல் வந்து, வழிபாட்டு மேடையில் நின்றபடி கண்காணிப்பார். நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவார். வழிபாட்டு கூட்டம் முடிந்து மாணவர்கள் செல்வதை முறைப்படுத்துவார். நேரம் கடந்து தாமதாக வருவோருக்கு பிரம்பால், ஐந்து அடி வழங்கி உணர்த்த ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த பணியை, உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர் நிறைவேற்றி வந்தார். அன்று, தாமதமாக வந்த ஒருவன், முதல் அடி வாங்கியதும் சுருண்டு விழுந்தான்.
அருகில் நின்ற தலைமையாசிரியர் உடனே தடுத்து, மீதமிருந்த நான்கு அடிகளை தன் கையில் வாங்கிக் கொண்டார். பின், அந்த பிரம்பை வாங்கி முறித்து போட்டு, தண்டனை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதை வியந்து பார்த்தபடி நின்றோம்.
என் வயது, 76; தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இணைச்செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். உத்தரவின் கடுமை தெரிந்தவுடன், கவுரவம் பாராது, தண்டனையை தடுத்த தலைமையாசிரியரின் கனிவை எண்ணி வியக்கிறேன். மனுநீதி சோழன் போல நடந்து கொண்டவரின் நேர்மை செயல் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.
- மு.ராசேந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 98841 25372