
செங்கல்பட்டு, புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக பணியாற்றினார் புலவர் ரகுபதி.
ஆங்கிலம் மீடியத்திற்கான வகுப்புகள் சற்று துாரத்து கட்டடத்தில் இருந்தது. இரண்டு பகுதியிலும் மாறி மாறி பணியாற்றினர் ஆசிரியர்கள்.
அன்று தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. அதை தொகுத்து வழங்கிய மாணவன், 'சிறப்புரை ஆற்ற புலவர் ரகுபதியை அழைக்கிறேன்' என்று சொல்வதற்கு பதிலாக நாக்குழறியபடி, 'புறா ரகுபதியை அழைக்கிறேன்...' என்றான். எங்கும் சிரிப்பலை எழுந்தது.
உரையாற்ற வந்தவர், 'மாணவன் கூறியதில் தவறில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கிளையிலிருந்து அதாவது, பள்ளியின் மற்றொரு பகுதி கட்டடத்தில் இருந்து பறந்த அந்த புறா நான்...' என கூறியதும், எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரமானது. எந்த சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்ற முடியும் என அது கற்பித்தது.
எனக்கு, 61 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழில் சொற்பொழிவுகளை கேட்கும் போதெல்லாம் பள்ளியில், அந்த ஆசிரியரின் பேச்சு நினைவில் மலர்கிறது.
- சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு.