தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நாடோடியின் சாகசங்கள்! (5)

நாடோடியின் சாகசங்கள்! (5)

நாடோடியின் சாகசங்கள்! (5)


PUBLISHED ON : மார் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஊர், ஊராக செல்லும் நாடோடிக்கு, 'அழைக்கும் போதெல்லாம், ஒரு தேவதை தோன்றி உதவி செய்யும்' என்ற, வரம் கிடைத்தது. தேவதை அளித்த பறக்கும் கம்பளத்தை, மன்னருக்கு வழங்கிய நாடோடி, அவரிடம் விடை பெற்று புறப்பட்டான். இனி -



நாடோடி, தன் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். வழியில் தாகமெடுத்தது. அருகில் இருந்த ஒரு நீர் நிலைக்குச் சென்று முகம், கைகால்களைக் கழுவினான். நீரை அள்ளிப் பருகினான். பின், தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு பறவை கிடந்தது. அருகில் சென்று பார்த்தான். கழுகு ஒன்று, அடிபட்டு, எழுந்து நிற்க முடியாமல் விழுந்து கிடந்தது. கழுகை, கையில் துாக்கி, ஆராய்ந்தான். கழுகின் காலில் அடிபட்டு, ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அந்த கழுகை, அங்கேயே படுக்க வைத்தான். அருகில் இருந்த செடி, கொடிகளுக்கு மத்தியில் மூலிகை செடியை தேடினான். மூலிகை இலைகளைப் பறித்து, கழுகிடம் வந்தான். மூலிகை இலைகளை கசக்கி, அதிலிருந்து வடிந்த பச்சிலைச் சாற்றை கழுகின் கால்களில் விட்டான். பின், கசக்கிய இலைகளை, கழுகின் காலில் பூசி, ஒரு சிறிய துணியால் கட்டினான்.

கழுகை கையில் ஏந்தியபடி, தொடர்ந்து நடந்தான். சற்று நேரத்தில், வழிப்போக்கர்கள் தங்கும் ஒரு மண்டபத்தை அடைந்தான். அந்த மண்டபத்தில் யாரும் தங்கியிருக்க வில்லை.

மண்டபத்தில், கழுகை ஓரமாக படுக்க வைத்தான். சிறிது தண்ணீரை எடுத்து வந்து, கழுகிற்கு கொடுத்தான். கழுகின் காலில் இருந்த காயம் ஆற, தொடர்ந்து சிகிச்சை அளித்தான்.

ஓரிரு நாட்களில், காலில் ஏற்பட்ட காயம் ஆறி, கழுகு பலம் பெற்றது. அதனால் எழுந்து நிற்கவும், நடக்கவும் முடிந்தது. அந்த மண்டபத்தில் பறந்து கொண்டிருந்த சிறுசிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்றது. நாடோடியுடன் நட்பாக பழகியது கழுகு.

மறுநாள், பறந்து வந்த கழுகு, நாடோடியின் தோள்பட்டையில் அமர்ந்தது. அவனை பாசத்துடன் பார்த்தது. கழுகின் உடல்நிலை சரியாகிவிட்டது என்று உணர்ந்தான், நாடோடி.

கழுகின் உடல்நிலை சரியாகி விட்டதால், இனி தன் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தான், நாடோடி.

அன்று இரவு, அந்த மண்டபத்திலேயே தங்கியிருந்து, மறுநாள் காலை புறப்பட திட்டமிட்டான். வழக்கமான இடத்தில், படுத்து உறங்கினான். கழுகும் அருகிலேயே ஓய்வெடுத்தது.

மறுநாள் காலை, கண்விழித்த போது, அருகில் இருந்த கழுகைக் காணவில்லை. அது, தன் வழியில் பயணத்தைத் தொடர புறப்பட்டு விட்டது என்பதை உணர்ந்தான்.

எழுந்து அமர்ந்த நாடோடி, கழுகு இருந்த இடத்தில், ஒரு பச்சைக்கல் மோதிரம் இருந்ததை பார்த்தான். அந்த மோதிரத்தை எடுத்துப் பார்த்தான்.

'இது யாருடைய மோதிரம் என தெரியவில்லையே... என்ன செய்வது...' என்று யோசித்த நாடோடி, அதைத் தன் வலது கை, மோதிர விரலில் அணிந்து கொண்டான்.

'வழியில் மோதிரத்திற்குரியவர் யாராவது பார்த்துக் கேட்டால் கொடுத்து விடலாம்...' என்று முடிவு செய்தான். வழிப்போக்கர் மண்டபத்தை விட்டு புறப்பட்டு, வெளியே வந்தான்.

இரண்டொரு நபர்கள், அந்த வழியாக தலையில் கூடையை சுமந்தவாறு சென்று கொண்டிருந்தனர்.

ஒருவரை வழிமறித்தான். ஆனால், அவன் நிற்பதை கூட பார்க்காமல், அவர் அலட்சியமாக கடந்து சென்றார்.

இன்னொருவரிடம், 'ஐயா, இந்த பாதை எந்த ஊருக்குச் செல்கிறது...' என்று கேட்டான், நாடோடி.

ஆனால், அவரும் எந்த பதிலையும் சொல்லாமல், கடந்து சென்றார்.

நாடோடிக்கு குழப்பமாக இருந்தது.

'யாரும், எந்த பதிலையும் சொல்லாமல் செல்கின்றனரே...' என்று யோசித்தபடி, அங்கேயே நின்றான்.

சற்று நேரத்திற்குப் பின், அவ்வழியாக மற்றொருவர் வந்தார்.

அவரிடம் சென்று, 'ஐயா, இந்த பாதை எந்த ஊருக்குச் செல்கிறது...' என்று, சத்தம் போட்டுக் கேட்டான்.

அந்த மனிதர் துணுக்குற்று நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார்.

'யாரோ பேசுவது கேட்கிறது... ஆனால், இங்கே யாரும் இல்லையே...' என்று, தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். பின், அங்கிருந்து புறப்பட்டார்.

'எதிரில் நின்று தானே பேசுகிறேன். ஆனால், இந்த மனிதர், குரல் மட்டும் கேட்பதாக சொல்கிறாரே...' என்று யோசித்தான், நாடோடி.

அப்போது அவன் மனதில், சட்டென ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. உடனே கையில அணிந்திருந்த, பச்சைக்கல் மோதிரத்தைக் கழற்றி, தன் இடுப்பில் செருகிக் கொண்டான்.

அந்த நேரத்தில் அவனை நோக்கி, ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.

'அம்மா, இந்த பாதை எந்த ஊருக்குச் செல்கிறது...' என்று, நாடோடி கேட்டான்.

'குபேரபுரிக்குச் செல்லும் பாதை இது...' என்று, நாடோடியை பார்த்து பதில் கூறி நகர்ந்தாள், அந்த பெண்.

அப்போது தான் நாடோடிக்கு ஒரு விஷயம் புரிந்தது. தான் அணிந்திருப்பது ஒரு மாயமோதிரம் என்ற உண்மை அறிந்ததும், அவன் திகைத்து நின்றான்.

- தொடரும்...

ஆர்.வி.பதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us