
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். பின், 2004ல், புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு சேர்ந்தேன்.
அந்த பள்ளியில் அனைத்தும் புதிதாக இருந்தது. அரசு பள்ளியில் படித்த எனக்கு, புதிய பள்ளியில் உள்ள மாணவியருடன் போட்டி போட முடியவில்லை. இதனால், கணக்கு ஆசிரியை, அடிக்கடி மட்டம் தட்டி பேசுவார். அதனால், 'எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை...' என, அப்பாவிடம் சொல்லி அழுதேன். என்னை கண்டித்து பள்ளிக்கு அனுப்பினார், அப்பா. வகுப்பிலும் அழுது கொண்டே இருந்தேன்.
எங்களின் வகுப்பு ஆசிரியை ரேக்சல், அறிவியல் பாடமும் எடுப்பார். நான் அழுவதை பார்த்து, அழைத்து விசாரித்தார். எனக்கும், குடும்பத்திற்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை, அன்பாக எடுத்துக் கூறினார். தினமும் நேரம் ஒதுக்கி, என்னுடன் பேசுவார்.
என்னை, வீட்டிற்கு வரவழைத்து, பாடம் சொல்லி கொடுத்ததுடன், பள்ளி கட்டணத்தையும் அவரே செலுத்தினார். எனக்காக அவர் செய்த செயல்கள், படிப்பின் மீது நம்பிக்கை கொடுத்தது; வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே பள்ளியில், 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். சட்டக் கல்லுாரியில் ஐந்தாண்டு படித்து முடித்தேன்.
தற்போது என் வயது, 36. வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். என் வாழ்வில் சிறப்பான இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த, வகுப்பு ஆசிரியை ரேக்சலுக்கு என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்கி, வணங்கி போற்றுகிறேன்.
- ச.ஷாலினி, திண்டிவனம். தொடர்புக்கு: 96884 41925

