PUBLISHED ON : மார் 14, 2026

மதுரை, செல்லுார், திருவாப்புடையார் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில், 1962ல், 5ம் வகுப்பு படித்தேன்.
எங்கள் வகுப்பில், 'ஏழு மயிலேறி' என்ற வித்தியாசமான பெயர் உடைய மாணவன் இருந்தான். அவன் குண்டாகவும், கருப்பாகவும் இருந்தான். அவனை, 'நீ ஏழு மயிலேறி இல்லை. எருமை ஏறி...' என, திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தான், இன்னொரு மாணவன்.
எங்கள் வகுப்பாசிரியர் நல்லசிவத்திடம் புகார் சென்றது. 'எருமை, எமதர்மரின் வாகனம். உன்னை எமதர்மராஜன் என்று புகழ்ந்து தான் கூறியுள்ளான். இதற்கெல்லாம் வருத்தப்படலாமா... படிப்பை கவனி...' என, அவனுக்கு ஆறுதல் கூறினார், வகுப்பாசிரியர்.
மற்றொரு சமயம், கண்ணகி என்ற மாணவியை, 'தட்டுவாணி' என, மற்றொரு மாணவி திட்டி விட்டாள். 'தட்டு என்றால் தாமரை மலர்; வாணி என்றால் கலைமகள். உன்னை சரஸ்வதி என்று தான் புகழ்ந்துள்ளாள்...' என, சமாதானப்படுத்தினார், அவர்.
இவ்வாறு, திட்டுகளையே புகழ்மாலையாக மாற்றி, வகுப்பாசிரியர் பொருள் கூறுவது வழக்கமானது. இதனால், 'திட்டுவதற்கு பதில், புகழ்ந்து பேசி விட்டோமோ...' என, சந்தேகித்து, மீண்டும் திட்டுவதை எதிராளிகள் கைவிட்டனர்.
தற்போது என் வயது, 74. எதிர்மறையான விஷயங்களையும், நேர்மறையாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்திய வகுப்பாசிரியர் நல்லசிவம் கற்றுக் கொடுத்ததை, நானும் தொடர்ந்து பின்பற்றுகிறேன். அதையே, அவருக்கு என் பணிவான வணக்கங்களுடன் சமர்ப்பிக்கிறேன்.
- எஸ்.பெருமாள், மதுரை. தொடர்புக்கு: 99523 16595
