
குடும்பத்துடன் மணக்குடி கிராமத்துக்கு குடிவந்தார் தருண். வீட்டு முன் தெருவில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருந்தன. மிகவும் பிடித்திருந்தது.
தென்னை மர நிழலில் காரை நிறுத்தியிருந்தார் தருண். வயது முதிர்ந்த அவரது தந்தை நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்றதாக இருந்தது. குழந்தைகள் விளையாடவும் வசதியாய் அமைந்திருந்தது அந்த தெரு.
நல்ல இடத்திற்கு குடிவந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
எடுத்து வந்த பொருட்களை வீட்டில் அடுக்கி முடிப்பதற்குள் இரவு ஆகியது. உடல் சோர்வுடன் அப்படியே படுத்து துாங்கிவிட்டார்.
மறுநாள் -
கோலம் போட வெளியே வந்தாள் அவர் மனைவி. காரின் முன் பக்க கண்ணாடி உடைந்திருந்ததை கண்டாள்.
பதற்றத்துடன் கணவரை எழுப்பி விஷயத்தை சொன்னாள். நெஞ்சு வெடித்தது போல் இருந்தது.
சென்ற மாதம் கடனில் வாங்கிய புது கார் அது. கண்ணாடி உடைந்ததை கேட்டு வெளியே ஓடி வந்தார் தருண்.
எதிர் வீட்டிலிருந்த பெரியவர், ''நேற்று ராத்திரி வினோத் தான் பந்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் தான் உடைச்சிருக்கணும்...'' என்றார்.
வீடுகளில் பாத்திரம் தேய்த்து குடும்பம் நடத்தும் பெண்ணின் மகன் வினோத்.
ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சிறிய அறையில் குடியிருக்கின்றனர்.
கையில் பந்துடன் அங்கு வந்தான் வினோத்.
''என்ன அங்கிள்... கார் கண்ணாடி உடைந்திருக்கு...''
பந்தை துாக்கிப் போட்டு பிடித்தபடியே தருணிடம் கேட்டான் வினோத்.
''ஏன்டா... உடைத்தது மட்டுமின்றி, ஒண்ணும் தெரியாதது போல கேட்குறீயா...''
கோபத்துடன் அவன் சட்டையை பிடித்தார் தருண்.
''அங்கிள்... எனக்கு எதுவும் தெரியாது. நான் உடைக்கவில்லை...''
கூறியபடி பின் வாங்கினான்.
அவன் தான் உடைத்திருப்பான் என உறுதியாய் நம்பினார் தருண்.
''கண்ணாடியை உடைத்து, ஓடிப் போக நினைக்கிறாயா...''
அடிப்பதற்கு கையை ஓங்கினார்.
நிலமை அறிந்து வினோத்தின் தாய் அங்கு வந்தார்.
அமைதியாக, ''ஐயா... என் பிள்ளை சற்று துடுக்குடன் இருப்பானே தவிர, கவனக்குறைவாக செயல்பட மாட்டான். கார் கண்ணாடியை எல்லாம் உடைக்க மாட்டான். நல்லா விசாரிச்சு பாருங்களேன்...'' என்றார்.
''ஏம்மா... உன்னோட துடுக்கு பிள்ளைக்கு ஆதரவா செயல்படுறீயே...''
மீண்டும் கையை ஓங்கினார் தருண்.
அதற்குள் கூட்டம் கூடியது.
'என்ன சார்...'
ஆளாளுக்கு கேட்க துவங்கினர்.
எதிர் வீட்டிலிருந்து வந்த சிறுவன், ''அங்கிள்... பக்கத்து தெருவில் வசிக்கும் நண்பனுடன், 'ஸ்கவுட்' முகாமுக்கு போயிட்டு ராத்திரி, 12:00 மணிக்கு வந்தோம். இங்கு ஒரு தேங்காய் கிடந்தது. தென்னை மரத்திலிருந்து விழுந்திருக்கும் என்று எண்ணி எடுத்தேன். அப்போது, கார் கண்ணாடி உடைந்திருப்பதை பார்த்தேன்; தேங்காய் விழுந்து தான், கண்ணாடி உடைஞ்சிருக்கு...'' என்றான்.
அதுகேட்டு அமைதி காத்தார் தருண்.
சிந்திக்காமல் மரத்தின் அடியில் காரை நிறுத்தியது தவறு என உணர்ந்தார்.
வெட்கி தலைகுனிந்தபடி, ''மன்னியுங்கள் அம்மா... தவறாக புரிந்து கொண்டதால் மரியாதை குறைவாக பேசிவிட்டேன்; மனதில் வெச்சுக்காதீர்...'' என மன்னிப்பு கோரினார். இறுக்கம் குறைந்து அந்த பகுதி நெகிழ்வால் நிறைந்தது.
பட்டூஸ்... அவசரப்பட்டு முடிவு எடுத்தால் தவறு நடக்க வாய்ப்பு உண்டு. எப்போதும் நிதானமாக செயல்படுங்கள்.
- முகிலை ராசபாண்டியன்