PUBLISHED ON : மார் 21, 2026

சென்னை, ஆலந்துாரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 1984ல், 10ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியர் ராமு, மிகவும் கண்டிப்பானவர். தவறு செய்யும் மாணவர்களை தனியே அழைத்து தண்டிப்பார். ஒலிபெருக்கி வாயிலாக குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்களை கூறாமல், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, மற்றவர்களுக்கும் புத்திமதி கூறுவார்.
ஒழுக்கம், நேரம் தவறாமல் வருவது, படிக்கும் நண்பர்களிடம் நட்பாக பழகவும், பெரியோர்களை மதிக்குமாறும் அறிவுறுத்துவார். அனைத்து வகுப்பு மாணவர்களும் அமைதியாக இருந்தால், அவர் வருகிறார் என்பதை அறியலாம். அவரின் கண்டிப்பால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கூடியது.
தற்போது என் வயது, 57. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தலைமை ஆசிரியரிடம் கற்ற தலைமை பண்புகளை பின்பற்றுவதால், பணியில் சிறப்பிடம் பிடித்துள்ளேன். இப்போதும் நேரம் தவறாமையை கடைப்பிடிக்கிறேன். சக ஊழியர்களிடம் அன்பாகவும், நட்பாகவும் பழகுவதால் சிறப்பாக பணி புரிய முடிகிறது. இதற்கெல்லாம் முன்னுதாரணமாக விளங்கிய, தலைமை ஆசிரியர் ராமு, என் மனதில் குடிகொண்டுள்ளார்.
- எம்.மாறன், சென்னை. தொடர்புக்கு: 98841 53656
