
சாலை ஓரம் காத்திருந்தான் விமல்.
'இன்னும் என்ன செய்கிறான்' என அவன் எண்ணம் ஓடியது.
புத்தகப்பை முதுகை அழுத்தியது.
தொலைவில் ஒரு மிதிவண்டி வருவது தெரிந்தது.
'அப்பாடா... வந்துட்டான்' என பெருமூச்சு விட்டபடி தயாரானான் விமல்.
மிதிவண்டியில் வேகமாக வந்தபடி, ''பள்ளிக்கு நேரமாச்சு... வா போகலாம்...'' என அவசரப்படுத்தினான் அமல்.
''சற்று பொறு... இந்த பையை முன்னால் தொங்க விட்டுக்கோ...''
பையில் மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரிந்தது.
''என்ன இது...''
''சிங்கன் வாழைப்பழம். சுவையாக இருக்கும்; அம்மா கொடுத்து அனுப்பினார்; மதியம் சாப்பிடலாம்...''
ஆர்வ மிகுதியில் ஒரு பழத்தை எடுத்து பார்த்தான் விமல்.
மஞ்சள் நிறத்தில், சற்று வித்தியாசமாக காட்சியளித்தது.
''சிங்கன் பழமா... அப்படீன்னா...''
''தமிழ் இலக்கியமான, குற்றால குறவஞ்சியில், சிங்கன் என்ற கதாபாத்திரம் வரும். அது, இந்த வாழைப்பழத்தை இனிமையான பாடலாக அறிமுகம் செய்யும். லைபரரியில வாசிச்சிருக்கேன்..''
''ருசியா இருக்குமா...''
பழத்தை உற்றுப் பார்த்தான் விமல்.
''சாப்பிட்டுத்தான் பாரேன்...''
ஒன்றை எடுத்து உரித்து சாப்பிட்டதும், ''ஆஹா... தேன் போல இருக்கு...'' என, சுவைத்தபடி அந்த வாழைப்பழத் தோலை சாலையில் வீசி எறிந்தான்.
''டேய்... ஓரமாக போடு...''
''வெயிலில் காய்ந்து விடும்...''
இருவரும் வகுப்புக்கு சென்றனர். பாடங்களை முறையாக கற்றனர்.
பிற்பகல் 3:00 மணி -
பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது.
வகுப்பு நேரம் முடிந்து, குழந்தைகளை அழைத்து செல்ல வந்திருந்தனர் பெற்றோர்.
பள்ளி மைதானம் குடையால் நிறைந்திருந்தது.
மழை குறைந்து லேசான துாறல் போட்டது.
''அடை மழை வரும் முன் வீட்டுக்கு போய் விடலாம்...''
விமலை அழைத்தான் அமல்.
மிதிவண்டியை வேகமாக ஓட்டினர். வழியில் டயர் வழுக்கியதால் மிதிவண்டியுடன் விழுந்தான் விமல்.
ஓடி வந்து துாக்கி நிறுத்தினான் அமல்.
முழங்கையில் லேசான சிராய்ப்புடன் காயம் தெரிந்தது.
''மழை நேரத்தில், கவனமாக ஓட்ட வேண்டாமா...''
ஆறுதல் கூறினான்.
''ஒன்றும் பலமாக அடிப்படவில்லை. நல்ல வேளை தப்பினேன்..''
சமாளித்த அமலின் கால் அருகே, காலையில் வீசிய வாழைப்பழத் தோல் தட்டுப்பட்டது.
''அவசரத்தில் பழத்தோலை சாலையில் போட்டேன். இப்போ அது எனக்கு பாடம் கற்பித்து விட்டது...''
சொல்லியபடி வருந்தியவன், தவறான பழக்கங்களை விட்டொழிக்க உறுதி பூண்டான்.
மிதிவண்டியை தள்ளியபடி வீடு திரும்பினர்.
பட்டூஸ்... நல்ல பழக்க வழக்கங்களை இளமை பருவத்திலே கடைபிடித்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்!
- முகிலை ராசபாண்டியன்